ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20c)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாமே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றிபெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதைப்பற்றி உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:

* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள்
* நிறுவனர் குழுவைச் சேர்த்தல்
* உங்கள் யோசனையைச் சோதித்துச் சீர்படுத்தல்
* முதல்நிலை நிதி திரட்டல்
* முதல்நிலை திசை திருப்பல் (initial pivoting)
* முதல் சில வாடிக்கையாளர்கள்
* விதைநிலை நிதி திரட்டல்
* வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை
* சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை திருப்பல்
* முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல்
* குழு கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிவு
* வெற்றிக் கோட்டைத் தாண்டத் தடங்கல்கள்

முன்பகுதிகளில் குடும்ப நிதிநிலை இன்னல்கள் என்ன நேரக்கூடும் என்று விவரித்துவிட்டு, பிறகு நிறுவனக் குழுவைச் சேர்க்கும் முயற்சியில் நேரக் கூடிய இன்னல்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். தனிமரம் தோப்பாகாது என்பதால் இணைநிறுவனர் அவசியம் என்று வலியுறுத்தினோம். உங்களுடன் முதலிலேயே வெகுகாலம் இணைந்து பணியாற்றிய இணை நிறுவனராகக் கிடைத்தால் மிக நன்று என்றும், அப்படியில்லாவிட்டால் நேரக்கூடிய இன்னல்களைப் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தோம். முதலாவதாக, பதவியாசையால் நிறுவனர் குழு சிதறி, நிறுவனமே ஆரம்பிக்க இயலாமல் போன உதாரணத்தைக் கூறினோம். இப்போது நிறுவனர் குழு சேர்ப்பதில் உள்ள மற்ற இன்னல்களை மேற்கொண்டு விவரிப்போம்.



மற்றொரு நிறுவனத்தில், வெகுகாலமாக இணைந்து பணியாற்றி, ஆரம்பநிலை வெற்றியும் கண்ட இருவர் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் தருணத்தில் அவர்களில் ஒருவர் எதோ குடும்பநிலை காரணத்தால் விலகிக் கொள்ள நேர்ந்தது. அதனால் மற்றொருவர் வேறு இணை நிறுவனரைத் தேடினார். அவர்களோடு சற்றுக் காலமே ஆலோசனையாளராக இருந்த ஒருவர் சேர்ந்து கொண்டார். இருவருமாக ஒரு பொறியியல் வல்லுனரைச் சேர்த்துக் கொண்டனர். சிறிது காலம் கழித்து குணாதிசய உரசல் அதிகமாகி உட்பூசல் வெடித்து, ஆலோசனையாளராக இருந்தவர் விலக்கப்பட்டார். அதற்கப்புறம் என்ன? நிறுவனம் சரிந்து விட்டது!

இன்னொரு நிறுவனத்தில், சில காலம் இணைந்து நிறுவனம் ஆரம்பிக்க முயன்ற இருவர், ஃபேப்ரிக்கோடு சேர்ந்து வேறு யோசனையை அடிப்படையாக வைத்து நிறுவனத்தை ஆரம்பித்தனர். ஒரு வருடம் நன்றாகவே நிறுவனம் ஓடியது. ஆனால், புதிதாக முதலீடு அளித்த ஒரு முதலீட்டாளர், குழுவில் ஒரு முதன்மை மேலாளரைச் சேர்க்குமாறு வற்புறுத்தினார். அதற்கிணங்கிய குழு, பலரைப் பரிசீலனை செய்து ஒருவரை முதன்மை மேலாளராக அமர்த்தினர். அவர் சேர்ந்த நாள் முதல் குட்டையைக் குழப்பிவிட்டு சில மாதங்களுக்குப் பின் திடீரெனெ விலகிவிட்டார்! அதனால், நன்கு செயல்பட்ட நிறுவனர் குழுவுக்குள்ளும் பிரிவு ஏற்பட்டு நல்ல வெற்றி வாய்ப்பிருந்த நிறுவனத்தையும் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று!

இப்படிப் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் கட்டுரையில் பல அம்சங்களை விவரிக்க வேண்டியுள்ளதால், நல்ல இணை நிறுவனரைக் கண்டெடுப்பதும், நிறுவனம் வெற்றியடையும் வரை நன்கு இணைந்து செயல்படுவதும் எளிதல்ல, பல இன்னல்கள் நேரக் கூடும் என்று உணரவேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு, மேற்கொண்டு மற்ற நிறுவனக் குழு அம்சங்களைப் பற்றிக் காண்போம்.

முதல் ஓரிரு இணை நிறுவனர்களைச் சேர்த்து நிறுவனத்தை ஆரம்பித்த பின்பும் குழுவில் முக்கிய ஆரம்ப உறுப்பினர்கள் சிலரைச் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். இதில் முக்கிய சிக்கல்கள் சில உள்ளன. நிறுவினர் குழுவில் உள்ளவர்கள் நிறுவனத்தின் அடிப்படை யோசனையில் தீவிர ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். மேலும் நிறுவனத்தில் அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க பெரிய அளவு நிறுவனர் பங்கு இருக்கும். அதனால் அவர்கள் சம்பளம் அதிகம் எதிர்பார்க்காமல் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டு பணி புரிவார்கள். (அதனால் ஏற்படும் குடும்ப நிதிநிலைமை பற்றி ஏற்கனவே விவரித்தோம்).

ஆனால், அடுத்த நிலை முக்கிய உறுப்பினர்களுக்கு பொதுவாக நிறுவனர்களைவிட பங்குகள் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்குச் சம்பளம் வெளி நிறுவன அளவு அளிக்க வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் சம்பளம் வானளாவ உயர்ந்துள்ளது! கூகிள், அமேஸான், ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பொறியியலாளர்களை கொத்திக்கொண்டு போகக் காத்திருக்கிறார்கள்! அதனால் ஓரளவு அதிகப் பங்குகளும் ஓரளவாவது உயர்ந்த சம்பளமும் அளித்தால்தான் அனுபவமிக்க நிபுணர்களை அமர்த்திக் கொள்ள இயலும். அதுவும், அவர்களுக்கு தங்களுக்குக் கிடைக்கும் பங்குகளுக்கு எதாவது வருங்கால மதிப்பிருக்கும் என்ற நம்பிக்கையும் உங்கள் யோசனை மீது ஆர்வமும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுக்கு நிறுவனத்தின் வெற்றி வாய்ப்பைப் பற்றி விவரித்து நம்பிக்கையூட்ட வேண்டியிருக்கும். இதையெல்லாம் செய்து தேவையான நிபுணர்களைச் சேர்த்துக் கொள்வது கடினமான காரியம்தான்!

அப்படியே பல விதங்களில் முயன்று ஒரு குழுவைச் சேர்த்து விட்டதாகவே இருக்கட்டும். அத்தோடு நீங்கள் நிம்மதியாக இயங்கிவிட முடியாது. பல காரணங்களால் குழுவிலிருந்து யாராவது முக்கியஸ்தர் விலகிக் கொள்கிறேன் என்பார். சிலமுறை அவருக்கு முக்கியத்துவம், பங்களவு, சம்பளம் போன்றவற்றை அதிகரித்து, கடின முயற்சிக்குப் பின் தக்கவைத்துக் கொள்ள வேண்டி வரும். ஆனால் சிலமுறை எதாவது நிர்ப்பந்தத்தால் அவர் விலகியே செல்ல நேரிடும். அப்போது எப்படி உங்கள் நிறுவனம் தடுமாறித் தத்தளிக்காமல் வெற்றிப் பாதையில் முன்னேற வைக்க முடியும் என்பது வெகு கடினம்தான்!

ஆரம்பநிலைக் குழு இன்னல்களைப் பற்றியும் பட்டியலில் அடுத்த இன்னலைப் பற்றியும் அடுத்த பகுதியில் மேற்கொண்டு விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com