உள்ளொளி
('உள்ளொளி' நூலில் இருந்து ஒரு பகுதி)
ஒரு பெருஞ்சமய சங்கத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் ஐரோப்பியர். அச்சங்கத்துக்கு யான் போவதுண்டு. ஆனால் ஐரோப்பியப் பெரியாரிடம் யான் நெருங்குவதில்லை. அவர் நடுமன விளக்கத்தை நல்வழியில் பெருக்கி ஞானதிருஷ்டி படைத்தவர் என்று அறிஞரால் போற்றப்பட்டார். அவர் எழுதிய நூல்களிற் சிலவற்றுடன் யான் உறவுகொண்டு வந்தேன். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சில ஐயப்பாடுகள் தோன்றின. அவைகளைக் களைதற்குக் கலைப்புலமை துணை செய்யவில்லை. ஐரோப்பியப் பெரியாரை அணுகிப் பார்க்கலாம் என்று அவரிடஞ் சென்றேன்.

சிறிது நேரம் அவர்பால் உரையாடிய பின்னர் ஐயப்பாடுகளை வெளியிட்டேன். அவர்க்குத் தமிழ் தெரியாது. திருமந்திரம் தமிழாலாகிய ஒரு பெரும் நூல்! என் செய்வது! பெரியார் நூலைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். மறுநாள் திருமந்திரத்தை எடுக்தேகினேன். அவர் நூலை வாங்கித் தமது மேசைமீது வைத்தார்; அதைத் தொட்டவண்ணம் சிறிது நேரம் கண்மூடி மெளனஞ் சாதித்தார்; பின்னே விழித்தார்; சில ஐயப்பாடுகளை நீக்கினார். அவரிடம் நெடுநேரம் பேசினேன்; பல நுட்பங்கள் விளங்கப்பெற்றேன். மொழிகளெல்லாம் தனி நாதத்தின் பரிணாமம் என்றும், நாதமே மொழிகட்கெல்லாம் மூலம் என்றும், நாதம் வெறுஞ் சப்த மயமாயிருப்பதென்றும், அதன் அலைகள் படிப்படியே பருத்துப் பருத்து நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பலதிற மொழிகளாக ஒலி வடிவில் பரிணமிக்கன்றன என்றும், ஒலிவடிவு பின்னே வரிவடிவாகிறது என்றும், புறமனம் ஒடுங்க, நடுமனம் மலர, அடிமனம் விளங்கி அடங்க, விந்து நாதம்வரை சென்று திரும்பும் பயிற்சி பெற்ற ஒருவர், நாமரூபமுள்ள எம் மொழியையும் நாதமாக்கிக் கருத்தைத் தெளிந்து, பின்னே அதைத் தமது சொந்த மொழியில் வெளியிடுதல் கூடும் என்றும், தமிழும் ஆங்கிலமும், பிறவும் நாமரூபம் முதலியன அற்று நாதமாகுங்கால் ஒன்றேயாகும் என்றும், வேற்றுமை புறமன அளவில் நிகழ்வது என்றும் அவர் உண்மையை விளக்கிக் காட்டினர். நடுமனம் அவர்பால் நன் முறையில் விளங்கியிருந்தது. அதனால் அவர் விளம்பரத்தைச் சிறிதும் விரும்பினாரில்லை. அஃது எனது உள்ளத்தைக் கவர்ந்தது.

★★★★★


சுரைக்காய் சுவாமியாரை உங்களிற் சிலராவது நேரிற் கண்டிருக்கலாம். அவர் சிலகாலம் சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாள் தோட்டத்தில் தங்கி இருந்தவர். அவரைக் கண்டு தொழ மக்கள் கூட்டம் ஈண்டி நிற்கும். வேடிக்கை பார்க்க இளைஞருஞ் செல்வர். அவருள் யானும் ஒருவன். அங்கே ஓர் ஊமை கொண்டு வரப்பட்டான். நாளடைவில் அவன் பேசலானான். பல வழியில் தொல்லை விளைத்துவந்த பேயாடி ஒருத்தி கொண்டு வரப்பட்டாள். அவள் தோட்ட முழுவதும் ஆட்சி செலுத்துவாள்; அங்கும் இங்கும் ஓடுவாள்; பலவாறு பிதற்றுவாள்; பல மணி நேரம் ஏற்றம் பிடித்து இறைப்பாள். ஆனால் அவள் தோட்ட எல்லையை விடுத்து அகல்வதில்லை. ஒருநாள் அவள் திடீரெனச் சுவாமியாரை அடைந்து பணிந்து நின்றாள். அச்சமும் நாணமும் அவளைச் சூழ்ந்தன. அவள் நல்லுணர்வு பெற்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பலர் பலவாறு பேசினர். சுவாமியார் பெரியவர்; அவர் மருள்நிலை முதலியவற்றைக் கடந்த ஞானியர். அவர் முன்னிலையில் நிகழ்ந்தனவற்றை எந்த வித்தையில் சேர்க்கலாம்? சிந்தியுங்கள்.

★★★★★


மருதூரில் ஓர் அம்மையார் இருக்கிறார். அவரிடம் நிகழும் அற்புதங்கள் பத்திரிகைகளில் வெளியாயின. அம்மையார் ஒரு தட்டிலே அன்பர் கொணரும் மாலைகளை வைத்துப் 'பழனியப்பா' என்று தூக்கியதும், அவை ஆகாய வழியே சென்று மறைகின்றன என்றும், தேங்காய் பழம் முதலியனவும் அவ்வாறே அனுப்பப்படுகின்றன என்றும், உடைபட்ட தேங்காய் மூடியும், திருநீறும் இறங்கி வருகின்றன என்றும், ஒருமுறை ஒரு குழந்தையைத் தட்டிலே வைத்து அம்மையார் 'முருகா' என்றதும், குழந்தை மறைந்து சில மணி நேரங் கழிந்த பின்னர்த் திருநீற்றுக் கோலத்துடன் இறங்கியது என்றும், அவர் அதைப்பற்றி உரியவரிடஞ் சேர்த்தனர் என்றும், இளநீர், சர்க்கரைப் பொங்கல், வேல் முதலியனவும் அவரால் வரவழைக்கப்படுகின்றன என்றும் சொல்லப்பட்டன.

இன்னோரன்ன அற்புதங்களைக் காணப் பலர் சென்றனர். என் தமையனார், இராயப்பேட்டை ஜவுளி நடேச முதலியாருடன் போயினர். அகத்திணை வல்ல மறைமலை அடிகளும், சச்சிதானந்தம் பிள்ளையும் அம்மையாரின் செயல்களை நேரிற் கண்டனர். பலநாள் கடந்து யானும் சில நண்பருடன் ஏகினேன்; நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். என்னுடன் போந்தவருள் சிலர் சிலவற்றை நினைந்து அவை கைகூடுமா கூடாவா என்று அம்மையாரை நோக்கிக் கேட்டனர். என்னையும் ஏதாவதொன்றை நினைந்து கொள்ளுமாறு அவர் தூண்டினர். அவர் எண்ணியவற்றிற்கெல்லாம் விடைகள் கிடைத்தன. எனக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. நண்பர் விழித்தனர். 'யான் ஒன்றும் நினைக்கவில்லை; அதனால் பதில் வரவில்லை' என்று சொன்னேன்.

பின்னே அவ்வூரிலுள்ள சிலரிடம் போய் நாங்கள் விசாரணை செய்தோம். அம்மையார் ஒருநாள் புளியம்பழம் உலுக்கிக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் அவர் தலைமீது குதித்து மிதித்தனர் என்றும், அன்று முதல் அம்மையாரிடம் அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், பல ஆண்டுகட்கு முன்னரும் ஒரு மூதாட்டியார்பால் இச்செயல்கள் நிகழ்ந்துவந்தன என்றும், அவர் தலை மீதும் ஒரு முனிவர் குதித்து மிதித்தனர் என்றும் அவ்வூரவரால் கூறப்பட்டன. மருதூர் அம்மையார் கல்வி அறிவில்லாதவர்; ஆராய்ச்சி இல்லாதவர்; நடுமனம், அடிமனம் முதலியவற்றைக் கேட்டும் அறியாதவர். அவரிடம் நிகழும் அற்புதங்களைக் குறித்துப் பலர் பலவாறு பத்திரிகைகளில் எழுதினர். ஆராய்ச்சியால் அம்மையார் நடுமன விளக்கமில்லாதவர் என்பது நன்கு தெரியவந்தது. என்ன முடிவு கூறுவது? அம்மையார் தலைமீது குதித்த முனிவர் நுண்ணுடல் தாங்கி அங்கே உலவுகிறார் என்பதும், அவர் தம் ஆவித்துணை அம்மையார்க்குக் கிடைத்துள்ளதென்பதும், அதனால் அவரிடம் அற்புதம் நிகழ்கிறதென்பதும் எனது உள்ளக்கிடக்கை. என்னுடையதையே முடிவாகக் கொள்ளாது நீங்களும் உண்மை காண முயலுங்கள்.

★★★★★


சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தனர், அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகஞ் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப்போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வாசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர்.

மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி, கரண அமைப்புக்கள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகைப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. யான் 'தேசபக்தன்' ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், 'அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்' என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்.

★★★★★


திரு.வி. கலியாணசுந்தர முதலியார்

© TamilOnline.com