அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், பட்கல்
அருள்மிகு முருடேஸ்வரர் திருக்கோவில், கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்னும் ஊரில் உள்ளது.

தலப் பெருமை
இங்கு 123 அடி உயரமுள்ள சிவபெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். உலகில் இரண்டாவது பெரிய சிவன் சிலை இது. இந்தக் கோவிலில் 2375 அடி உயரமும் 20 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. ஆலயத்தின் உள்ளே இரண்டடி உயரத்தில் மூலவர் முருடேஸ்வரர் அருள் பாலிக்கிறார். கோயிலின் பின்புறம் 123 அடி உயரமுள்ள சிவபெருமான் காட்சியளிக்கிறார். இதன் எதிரில் ராட்சத நந்தி அமைந்துள்ளது. நேபாளத்தில் 143 அடி உயரமான கைலாசநாத மஹாதேவர் சிலை உலகிலேயே மிகப்பெரிய சிவன் சிலையாகக் கருதப்படுகிறது.



ஆலய வரலாறு
பிராண லிங்கம் ஒன்றை இலங்கைக்குக் கொண்டு செல்ல ராவணன், கயிலை மலையில் தவம் இருந்தான். அவன் அதைக் கொண்டு சென்றால் தேவர்கள் செயலிழப்பர் என்பதால் நாரதர் இந்திரனிடம் முறையிட்டார். இந்திரன் இதுபற்றி முறையிடச் சிவனிடம் சென்றான். அதற்குள் ராவணன், சிவனிடமிருந்து அந்த லிங்கத்தைப் பெற்றுவிட்டான். "இந்த லிங்கத்தைத் தரையில் வைக்கக்கூடாது. வைத்தால் மீண்டும் எடுக்க முடியாது" என்ற நிபந்தனையுடன் சிவபெருமான் ராவணனுக்கு அந்த லிங்கத்தை அளித்தார். லிங்கத்தை ராவணன் கொண்டு செல்லாமல் தடுக்க விஷ்ணு முடிவு செய்தார். இராவணன் சந்தியாவந்தனம் செய்யக் கூடியவன் என்பதை விஷ்ணு அறிந்திருந்தார். தனது சக்ராயுதத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையே விஷ்ணு நிறுத்தினார். இதனால் ராவணன் சென்று கொண்டிருந்த பகுதியில் ஒளி மறைந்து இருள் கவ்வியது. அதனை மாலைநேரம் என நினைத்த ராவணன், சந்தியாவந்தனம் செய்ய முடிவு செய்தான்.



அப்போது விநாயகர் பிரம்மச்சாரி ரூபத்தில் அங்கு வந்தார். அவரிடம், ராவணன், "இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக்கொள். நான் சந்தியாவந்தனம் செய்து திரும்பி வரும்வரை கீழே வைத்து விடாதே" என்றான். அதற்கு விநாயகராக வந்த சிறுவன், "ஐயா லிங்கத்தின் பாரம் தாங்க முடியாமல் உள்ளது. மூன்று முறை அழைப்பேன். நீர் வராவிட்டால் லிங்கத்தைக் கீழே வைத்துவிடுவேன்" என்றான். ராவணன் அதற்கு ஒப்புக்கொண்டான். தேவர்கள் மூன்று உலகத்தின் பாரத்தையும் பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை இராவணனை அழைத்தார். ராவணன் வராததால் லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டார். அங்கு வந்த ராவணன், ஆத்திரம் அடைந்து, கணபதியின் தலையில் ஓங்கிக் கொட்டினான். கீழே வைக்கப்பட்ட லிங்கத்தை தனது இருபது கைகளாலும் எடுக்க முயன்றான். அவன் தூக்கிய வேகத்தில் அது நான்கு துண்டுகளாக உடைந்து, நான்கு இடங்களில் விழுந்தது. அதில் ஓர் இடம்தான் முருடேஸ்வரர். இங்கு சிவாலயம் எழுப்பப்பட்டது.

அதிசயத்தின் அடிப்படையில், 123 அடி உயரத்தில் சிவபெருமான், நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உலகில் இரண்டாவது பெரிய சிவனாக இங்கு காட்சியளிக்கிறார்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com