காரைச் சித்தர்
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகங்கள் (அஷ்டாங்க யோகம்) முலம் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த உலக இயக்கம், பிரபஞ்ச ரகசியம், இறையாற்றல், உயிர்த் தத்துவம் என அனைத்தையும் அறிந்தவர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்கள். அத்தகைய சித்தர்களில் ஒருவர் காரைச் சித்தர்.

தோற்றம்
காரைச் சித்தரின் இயற்பெயர் சக்கரவர்த்தி ராகவ ஐயங்கார். இவர், கிருஷ்ணமாச்சாரியார் - ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு, 1918ல் ஆடிப்பூர தினத்தன்று பிறந்தார். பூர்வீகம் தமிழகத்தின் வலங்கைமான் அருகே உள்ள நாகரசம்பேட்டை. காரைச் சித்தர், மன்னார்குடியை அடுத்த காரைக் கோட்டையில், தன் அத்தை இல்லத்தில் வளர்ந்தார். சிறுவயது முதலே கல்வியில் நாட்டமில்லாமல் இருந்தார். சடுகுடு, குஸ்தி, மல்யுத்தம் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். காரைச் சித்தர் தனது பன்னிரண்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். நாடோடியாக அலைந்தார். இந்தியா முழுவதும் சுற்றினார். பல்வேறு சித்தாற்றல்கள் கைவரப் பெற்றார் என்றாலும் அவற்றைக் காட்டாமல் சாதாரண மனிதராகவே வலம் வந்தார்.



திருமணம்
தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுலோசனா என்ற பெண்ணை மணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார். ரேணுகா தேவி, ரவிகுமாரன் என்ற இரு மகவுகளுக்குத் தந்தையானார். சில வருடங்களுக்குப் பின் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். புனே சென்று அரசாங்க ஆயுதச் சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தார். பின் அதிலிருந்து விலகி இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றார். அங்கும் நாடோடியாகச் சுற்றியவர் பின் இந்தியா திரும்பினார். காந்திஜியின் வார்தா ஆசிரமத்தில் சில காலம் தங்கிப் பணி செய்தார்.

துறவு
காரைச் சித்தர் இந்தியாவில் திருப்பதிக் காடுகளில் ஒரு வருடம் தனியாக வாழ்ந்தார். பின் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தார். இமயமலையில் சில வருடங்கள் வசித்தார். சாதுக்கள் தரிசனம் பெற்றார். தனக்கான சரியான குருவைத் தேடி அலைந்தார். ஒருநாள் தேடலில் லக்ஷ்மண் ஜூலாவில் தன் குருநாதரைக் கண்டடைந்தார். அவருடன் குருகுல வாசம் செய்தார். அவரிடமிருந்து தீக்ஷை பெற்றுத் துறவியானார்.



சித்து விளையாட்டுக்கள்
காரைச் சித்தர் பின்னர் தமிழகம் வந்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாடோடியாகச் சுற்றினார். இறுதியில் தன் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு ஒட்டாமல் தனியாக வசித்தார். பல்வேறு சித்துகளைச் செய்தார். தம்மைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்த நோயாளிகளுக்குச் சந்தனம் அளித்து நோய்களைத் தீர்த்தார். அவர் காரைக் கோட்டையைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைக் 'காரைச் சித்தர்' என்று அழைத்தனர்.

ஒரு சமயம் குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்போது அங்கே வந்த காரைச் சித்தர், நீரோட்டத்தை நிறுத்தி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தார். பின் அங்கு மூங்கிலால் பாலம் அமைக்கச் செய்து மக்களின் சிக்கலைப் போக்கினார். தற்போது அங்கு காங்க்ரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

காரைச் சித்தர் ரசவாதம் அறிந்தவர். ஒரு சமயம் அவரது சித்தாற்றலைப் பரிசோதிக்க வெளிநாட்டவர் சிலர் வந்திருந்தனர். அப்போது சுவாமிகள் ஆலங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தார். சித்தர் பல் துலக்கிக் கொண்டே அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். திடீரென அக்குச்சியை அவர்கள்மீது வீசினார். அவர்கள் திடுக்கிட்டனர். அக்குச்சி கீழே விழுந்து வெள்ளிக்குச்சியாக மாறி இருந்தது. அவர்கள் ஆச்சரியமுற்றனர். காரைச் சித்தர் மீண்டும் அவர்களிடம் பேசிக் கொண்டே வேறொரு குச்சியை அவர்கள் மீது வீசினார். இப்போது அது தங்கமாக மாறி இருந்தது. காரைச் சித்தரின் அற்புதச் சித்தாற்றலை நேரடியாக உணர்ந்த அவர்கள் அவரைப் பணிந்து விடைபெற்றனர்.



சுவாமிகளது சொந்த ஊரில் உறவினர்கள் சிலரின் நிலங்கள் இருந்தன. அங்கிருந்த போக்கிரி ஒருவன் மாந்திரீகத்தால் அவர்களுக்குத் தொல்லை அளித்து வந்தான். அவர்கள் காரைச் சித்தரிடம் முறையிட்டனர். உடனே அவர்களுடன் அந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரைக் கண்ட அப்போக்கிரி சித்தரை வெட்ட அரிவாளைத் தூக்கினான். சித்தர் அவனை உற்றுப் பார்த்தார். அவ்வளவுதான். அவனால் கைகளை அசைக்கவே முடியவில்லை. ஓங்கிய கை அப்படியே நின்றுவிட்டது. அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் மன்னிப்பு வேண்டிய பிறகு சித்தர் மீண்டும் அவனை உற்றுப் பார்த்துச் சிரித்தார். அவனது கை மீண்டும் முன்போல் செயல்பட்டது. சுவாமிகளின் சித்தாற்றலை அறிந்தவன் அது முதல் யாருக்கும் தொந்தர்வு கொடுக்காமல் அமைதியாக வாழ்ந்தான்.

சித்தர் அஷ்டமா சித்திகளில் வல்லவர். கூடுவிட்டுக் கூடு பாய்தல், ககனவெளியில் நடமாடுதல் உள்படப் பல்வேறு சித்துக்கள் கைவரப் பெற்றவர். ஒரு கோயிலில் இறை பூசனைக்குப் போதிய பூக்கள் இல்லை என்று சொல்லப்பட்டபோது ஒரு செடியைப் பூக்க வைத்து மலர்களைப் பூசைக்கு அளித்தார். ரசவாதம் நன்கு அறிந்திருந்த சித்தர் அதனை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். ஏழை, எளிய மக்களுடன் பழகி அவர்களுக்குப் பல விதங்களில் உதவியாக இருந்தார். அவர்களுக்குக் குடிசை கட்டிக் கொடுப்பதில் தொடங்கி, மரத்திலிருந்து தேங்காய் பறித்துப் போடுவது வரை பல பணிகளைச் செய்தார்.

தெய்வீகப் பணிகள்
காரைச் சித்தர், வலங்கைமான் அருகே உள்ள குடமுருட்டிக்கு அருகில் ஆண்டாங்கோயிலில் சாந்தவெளி ஆற்றங்கரையில் வீர ஆஞ்சநேயருக்கு ஆலயம் எழுப்பினார். அங்கு ஒரு மடைப்பள்ளியை நிறுவி அனைவருக்கும் உணவளித்தார். அங்கிருந்தவாறே தம்மை நாடி வந்த பலரது பிணிகளை நீக்கினார்.



பக்தர்கள்
எஸ். அம்புஜம்மாள், எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி, ச.து.சு. யோகியார் உள்ளிட்ட பலர் சித்தரின் பக்தர்களாக இருந்தனர். எஸ். அம்புஜம்மாள், காரைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதினார்.

நூல்
'கனகவைப்பு' என்னும் நூலைக் காரைச் சித்தர் இயற்றினார். அந்நூலை அவர் சொல்லச் சொல்ல ச.து.சு. யோகியார் எழுதியதாகவும், காரைச் சித்தர் அதில் திருத்தங்கள் சொன்னதாகவும் அந்நூலில் குறிப்பு காணப்படுகிறது.

சமாதி
1964ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 24ம் நாள் காரைச் சித்தர் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி ஆலயம், அவர் வாழ்ந்த விசலூர் கிராமத்தில் உள்ள சாந்தவெளியில், அவர் அமைத்து வழிபட்ட வீர ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பீடத்தில் காரைச் சித்தரின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்றும் தன்னை வணங்கும், நம்பும் பக்தர்களின் வாழ்க்கைக்குச் சுவாமிகள் வழிகாட்டி உதவுகிறார். (காரைச் சித்தர் வலைதளம்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com