'மஞ்சள் மத்தாப்பூ' நாவலிலிருந்து ஒரு பகுதி
நீலக்கடலில் நீந்திக் களிக்கும் மீன்கள் போல நீல வானில் வெள்ளி நட்சத்திரங்கள் உதிக்கத் தொடங்கிய பின்மாலைப் பொழுது.

டப்பாவில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருந்த ரவையை உப்புமாவாகக் கிளறி இறக்கிய அபிராமி வாசலுக்கு வந்தாள்.

நான்கு குடித்தனங்கள் இருக்கும் குடியிருப்பு. எந்தக் காலத்திலேயோ குறைந்த வாடகைக்குக் கிடைத்த இடம். எத்தனை வசதிக் குறைச்சல் இருந்தாலும் வீட்டுக்காரரிடம் வீம்பும் பேச முடியாது. வேகம் காட்டி வெளியே போகவும் முடியாது. வயதுக்கு வந்த பெண்களை வைத்துக் கொண்டு எங்கே போவது?

"என்ன அபிராமி... பசங்க யாரையும் காணோம்?" பக்கத்து வீட்டுப் பாட்டி கேட்டாள்.

"வெளியில் போனா சீக்கிரமா வீட்டுக்கு வரணும்னு எது நினைக்குது? பெரிசுங்கதான் அப்படின்னா இந்தப் பொடிசும் அதையேதான் செய்யுது. விளையாடப் போய் எவ்வளவு நேரமாவுது? இன்னும் காணோம்." அபிராமி 'உச்' கொட்டினாள்.

"எங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? அப்பனும் ஆத்தாவும் வேலைக்குப் போயிட்டு ராத்திரிதான் வராங்க. இதுங்க அதுக்குத் தகுந்தா மாதிரி ஒரு டைம் டேபிள் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வருதுங்க. நான் எதையாவது சொன்னா என் பிள்ளையும் மருமகளும் நம்பறதில்லை. இந்தப் பசங்களும் மதிக்கறதில்லை. அதனால நான் வாயே தொறக்கறதில்லை. ஏதாவது ஏடாகூடம்னா தடதடன்னு வெளியே போகச் சொல்லிட்டா எங்கடி போறது? அநாதைப் பொணமா கிடந்து கார்ப்பரேஷன் காரங்கதான் வந்து வாரிக்கிட்டுப் போகணும். ஒத்தைப் பிள்ளையைப் பெத்தா இதுதான் பாடு... உனக்குப் பரவாயில்லை. பிள்ளை குட்டிகளைப் பெத்தெடுத்த மகராசி..."

"நீங்கதான் மாமி மெச்சிக்கணும். ஒண்ணைப் பெத்தவளுக்கு உரியில சோறு... நாலைப் பெத்தவளுக்கு நடுத்தெருவில சோறுன்னு சொல்லி இருக்காங்களே... எங்க வீட்டுல என்ன வாழுது? பெரியவளைப் பொண்ணு பார்க்க வந்துட்டு இளையவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனாங்க... பெரியவளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடறதுன்னு தெரியலை. அடுத்து ரெண்டு தயாரா இருக்கு. போதும் போதாததுக்கு அந்திமத்தில பட்டம் கட்டினா மாதிரி இந்த பொடிப்பையன் பிறந்திருக்கான். என்ன போங்க" அபிராமி அலுத்துக் கொண்டாள்.

நீலகண்டன் கூப்பிட்டார்.

"அம்மா... பசிக்குது. என்ன இருக்கு?" என்று கத்திக் கொண்டே வந்த கோபி ஓடிப்போய் பாத்திரங்களை உருட்டினான்.

"போம்மா... எப்பப் பார்த்தாலும் இந்த உப்புமா தானா? எனக்கு வேணாம்" என்று கத்திவிட்டு மூலையில் உட்கார்ந்து அழுதான்.

அவனை சமாதானம் செய்ய முடியாமல் அபிராமி தவித்தாள். இந்த சூழ்நிலையில் நைசாக உள்ளே நுழைந்து விட்டார்கள் மல்லிகாவும் அல்லியும். யார் பேசுவது என்று புரியாத நிலையில், "கோபி..." என்று வித்யாவின் குரல் கேட்டது.

"எதுக்காக நீ அழுதிருக்கேன்னு சொன்னின்னாதான் உன்கூட பேசுவேன்!" வித்யா கேட்டாள்.

சின்ன சங்கடத்துடன் கோபி விவரம் சொன்னதும், "சரி கோபி... இப்படியே கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம். வா..." என்று கிளம்பினாள்.

வித்யா கைப்பையை அபிராமியிடம் நீட்டினாள். "அம்மா... என் பிரண்டு வீட்டுல நிறைய இருக்குன்னு மணத்தக்காளிக் கீரை பறிச்சிக்கிட்டு வந்திருக்கேன். காலையில் பண்ணிடும்மா. செலவும் மிச்சம்... உடம்புக்கும் நல்லது."

அபிராமி உடனே மறுத்தாள்."மணத்தக்காளிக் கீரை சிறு கசப்பா இருக்குமேடி. பசங்க சாப்பிடாது..."

அதைக் கேட்டு வித்யா சிரித்தாள். "பசங்க. சாப்பிடாதா? இல்லை நீ சாப்பிட மாட்டியா? ஏம்மா உன்னோட பழக்க வழக்கத்தையெல்லாம் இதுகள் மேல திணிக்கறே? இன்னிக்கு விக்கற விலைவாசியில் பத்து வருஷத்துக்கு முன்னால நீ தின்ன மாதிரி ஒரு கவளம் கூட இப்ப தின்ன முடியாது. நான் சொன்னதை மட்டும் நீ செய். மைதிலி கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்கற வழியைப் பாரு... கோபி... நீ வாடா..." வித்யா வெளியே போனதும் அபிராமி வெடித்தாள்.

"பார்த்தீங்களா அவ பேசிட்டுப் போறதை? ஒரு வரி வார்த்தைக்கு ஒரு மகாபாரதம் படிச்சிட்டுப் போறாளே. எனக்கென்ன. நான் மணத்தக்காளி கூட்டு வைக்கிறேன். யாருமே தின்னாம வீணாத்தான் போகப் போவுது."

"உன்னோட புலம்பலை நிறுத்திடு அபிராமி. காலத்தை அனுசரிச்சி குடும்பம் நடத்தறதைப் பாரு. என்னமோ வித்யா நல்லவளா இருக்கறதால நமக்கு இந்த சோறாவது கிடைக்குது... தன்னைப் பொண்ணு பார்க்க வந்திட்டு தங்கச்சியை பண்ணிக்கிட்டுப் போனவனைக்கூட அவ தப்பா பேசறதில்லை. அந்தக் கடனைத் தன் தலையில் போட்டுக்கிட்டு அடைக்கப் பார்க்கற இந்த நேரத்தில் நீ ஏதாவது, ஏடாகூடமா பேசி உள்ளதைக் கெடுத்திடாதே." நீலகண்டன் அன்பு பாதியும், எச்சரிக்கை பாதியுமாக சொன்னார்.

மல்லிகாவுக்கு எரிச்சல் வந்தது. "ரெண்டு பேரும் உங்க புராணத்தை நிறுத்துங்க. நீங்க எதைச் செய்து தந்து நாங்க தின்னாம எழுந்து போயிருக்கோம்? எங்களுக்கு வேண்டியது பசிக்கு சோறு. ருசிக்கு பாதாம் அல்வா இல்லை. இன்னும் ஒரு தரம் சாப்பாட்டைப் பத்திப் பேச்சு வந்தது... நான் சும்மா இருக்க மாட்டேன். கத்தி எடுத்து ஒரே போடா போட்டிடுவேன். காலம் கெட்ட காலத்தில இத்தினி பிள்ளைங்களைப் பெத்திட்டோமேன்னு வெட்கப்படுங்க. அதை விட்டிட்டு பேச வந்திட்டீங்க."

அவள் அப்படி பேசினது நீலகண்டனையும் அபிராமியையும் மிரள வைத்தது. இனிமேல் எதையுமே பேச முடியாது. பெண்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்பது புரிந்து இருவரும் அவமானத்தில் தலை குனிந்து கொண்டார்கள்.

"என்னடி இப்படி பேசிட்டே?" என்று அல்லி கேட்டபோது, "பின்ன என்னடி? பெத்தா மட்டும் போதுமா? பிள்ளைகளுக்குன்னு ஏதாவது சேத்து வைக்கணும். நல்ல சாப்பாடு போட்டு படிக்க வைச்சி ஒரு வழி காட்டணும். எதுவும் முடியலை இல்லே? அப்புறம் எதுக்குடி இவளுக்கு வாய்? நாளைக்குக் காலையில கீரைக் கூட்டாவது கிடைக்கப் போவுது, எனக்கு ஒரு நல்ல நேரம் வரும். அப்ப நான் அக்கா மாதிரி இதுகளை இழுத்துக்கிட்டு ஓட மாட்டேன். கழட்டிவிட்டுட்டு 'அக்காடா'ன்னு நடந்திடுவேன்." என்றாள் மல்லிகா.

அதற்குள் வித்யா வரும் சத்தம் கேட்டது. வேகமாக உள்ளே வந்த கோபி, "அம்மா உப்புமா குடும்மா. இனிமே எதையும் வேணாம்னு சொல்ல மாட்டேன்" என்றபடி தட்டை எடுத்தான்.

வித்யா சொன்னாள், "இவனை பக்கத்திலிருக்கிற காலனிக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன். தங்க இடமில்லாமல், உடுத்திக்க சரியான உடுப்பு இல்லாம, தின்ன அவன் வேணாம்னு சொன்ன உப்புமாக்கூட இல்லாம இருக்கற சின்னப் பிள்ளைங்களைக் காட்டினேன். கற்பூரமாட்டம் புரிஞ்சிக்கிட்டான். இனிமே எதையும் சாப்பிட மாட்டேன்னு சொல்ல மாட்டான்."

மேகலா சித்ரவேல்

© TamilOnline.com