தென்றல் பேசுகிறது...
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அமெரிக்காவுக்குத் தலைகுனிவு. அமெரிக்கா அண்மைக் காலம்வரை ஒப்பற்ற முன்னோடியாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. காரணங்கள் பல. புதுமை படைக்க அஞ்சாதவர்கள், துணிச்சலான சிந்தனையாளர்கள், அறிவியலில் உயர்திறன் கொண்டவர்கள் எனப் பலர் அமெரிக்காவின் ஒளிப்பந்தத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த நாட்கள் இன்று கனவாகத் தோன்றுகின்றன. குடிவரவு நுழைவாயிலை ஓங்கிச் சாத்தினோம்; இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டுத் தொழில்களை ஊனமாக்கினோம்; அரசியல் நாணயத்தை அடையாளம் இல்லாமல் சிதைத்தோம்; பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் என்ற கருத்தை வன்முறையால் காணாமல் போக்கினோம். ஆனால், டோனல்டு ட்ரம்ப்புக்குத் தெளிவான தீர்ப்பு ஒன்றைக் கொடுத்ததன் மூலம் இதற்கெல்லாம் ஒரு பிராயச்சித்தம் வந்துள்ளது என்று நம்பலாம். அறிவார்ந்த, தேசத்தை நேசிக்கும் குடிமக்களாக நாம் இந்தத் தண்டனையை ஒரே குரலில் வரவேற்போம்.

★★★★★


பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் கடும் உணவுப் பற்றாக்குறை. ஃபிரான்சு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா - உக்ரெய்ன் போர் குறைகிற அடையாளமே தெரியவில்லை. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் காளிஸ்தானி தீவிரவாதிகள் இந்திய கான்சுலேட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், இந்தியர் சொத்துக்கள் ஆகியவற்றுக்குச் சேதம் விளைவிக்கின்றனர். பல நாடுகளிலும் பிரிவினை வாதமும், வன்முறையும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. ஒழுக்கத்தைத் தராத கல்வியும், நேர்மையற்ற வழிகளில் பெறப்படும் செல்வமும் இந்த வன்முறைகளைக் கொழுந்து விட்டெரியச் செய்கின்றன. பாரதப் பிரமர் கூறும் 'வசுதைவ குடும்பகம்' என்கிற சிந்தனை வரும்போது, 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்' என்பதை யாவரும் உணரும்போது மட்டுமே இணக்கமும் அமைதியும் அதிகரிக்கும். உலகம் அமைதிச் சோலையாகும். நம்புவோம், நல்லதைச் சொல்வோம், செய்வோம்.

★★★★★


இவர் நடிப்பிலும் குரல்வழியே நூல்களுக்கு உயிர் கொடுத்து உலவ விடுவதிலும் வல்லவர். விரிகுடாப் பகுதியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா 'பொன்னியின் செல்வன்' காவியத்தை ஒலிநூலாக்கிய கடும் உழைப்பாளர். ஊக்கமும் குன்றாத ஆர்வமும் இருந்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதை இவரது நேர்காணல் கூறுகிறது. வழக்கம்போல 'அலமாரி'யைத் திறந்தால் அற்புதங்கள் காத்திருக்கின்றன. தோரண வாயிலில் தயங்கி நிற்காமல் நுழையுங்கள் உள்ளே, சுவையுங்கள் அனைத்தையும்.

வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் வாழ்த்துகள்!

தென்றல்
ஏப்ரல் 2023

© TamilOnline.com