2023 ஜனவரி 21-ஆம் நாளன்று அலபாமா மாகாணம் பர்மிங்ஹாம் நகரில் அலபாமா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடியது. நூற்றுக்கணக்கான அலபாமாவாழ் தமிழர்கள் தமது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்ப் பள்ளி மாணாக்கரின் நாடகம், பட்டிமன்றம், பாரம்பரிய விளையாட்டுகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழாவின் ஓர் அங்கமாக 'குறள்வழி நின்றவர்கள்' நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப்பட்டது. இந்நூலைப் பன்முகக் கலைஞர் திரு. விகாஷ் அச்சுதராமையா மற்றும் அவரது பேராசிரியர் முனைவர். நாகராஜன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். வரலாற்று நிகழ்ச்சி அல்லது வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக் கொண்டு திருக்குறளுக்குப் புதிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு என்று சங்கப் பொருளாளர் திருமதி. நித்யா ரெங்கசாமி நயம்பட அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, நூலாசிரியர் திரு. விகாஷ் அச்சுதராமையா, நூல் உருவான கதை மற்றும் நூலைப் பற்றிய முன்னோட்டத்தைச் சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த தீந்தமிழில் உரைத்தார்.
மூத்த உறுப்பினர் திரு. வேல் பத்மநாதன் நூலை வெளியிட, முதல் சில பிரதிகளைச் சங்கத் தலைவி திருமதி. வினோ சிவம், செயலாளர் திரு. கமல் பாலசுப்ரமணியன், பொருளாளர் திருமதி. நித்யா ரெங்கசாமி மற்றும் மூத்த உறுப்பினர் மரு. மணிவண்ணன் நீலமேகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியர்களைப் பாராட்டிப் பேசிய வினோ சிவம், நூலில் உள்ள கதைகள் மற்றும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அலபாமா குழந்தைகளை வைத்து சிறு நாடகங்ளை அரங்கேற்ற ஆவன செய்து நூலாசிரியர்களுக்கும் நமக்கும் பெருமை சேர்ப்போம் என்றார்.
ஒரு நூல் எழுதுவது அவ்வளவு எளிதானதல்ல, அதுவும் திருக்குறள் தொடர்பான நூல் என்றால் அது எவ்வளவு சிறப்பானது என்று கூறி நூலாசிரியர்களை வாழ்த்தினார் திரு. கமல் பாலசுப்ரமணியன்.
நூல் மதிப்புரை வழங்கிய மரு. மணிவண்ணன் நீலமேகம், நூலில் தான் ரசித்த இரு நிகழ்வுகளைச் சுவைபடக் கூறி, அதற்குரிய குறள்களைக் கோடிட்டுக் காட்டினார். இவ்வரிய படைப்பையும் நூலாசிரியர்களையும் புகழ்ந்தார்.
இந்நூல் அதே நாளில் இந்தியாவில் கோவையிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறளின் குரல் நாடுகள் கடல்கள் பல கடந்து அமெரிக்கத் திருநாட்டில் அலபாமாவில் ஓங்கி ஒலித்தது என்றால் அது மிகையில்லை.
விகாஷ் ரயாலி, பர்மிங்ஹாம், அலபாமா |