ஒரு மழைநேர இரவில்
நள்ளிரவு. மழை விடாமல் பெய்துகொண்டு இருந்தது. கணேஷின் கார் கலிஃபோர்னியாவின் மெர்செட் காட்டுப் பகுதியில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது. கார் திடீரென வேகம் குறைந்தது. ஒரு பக்கமாக இழுத்தது. என்ன ஆனது என்று கணேஷ் இறங்கிச் சென்று பார்த்தான். காரின் முன்பக்க டயர் பங்க்சர் ஆகியிருந்தது. கார் ட்ரங்கில் மாற்று டயர் இருக்கிறதா என்று பார்த்தான். இருந்தது, ஆனால் அதை மாற்றுவதற்கான கருவிகள் இல்லை. இந்த அடர்ந்த மலைப்பகுதியில் வண்டி நின்றுவிட்டதே! கூட ஷாலினி வேறு இருக்கிறாள். பயம் கவ்வியது.

அவன் கார் காப்பீட்டு நம்பருக்கு ஃபோன் செய்தான். "இது லாங் வீக் எண்ட். இந்த நடு இரவில் சேவை செய்ய ஆள் இல்லை; ஆள் வர 5 மணி நேரம் ஆகும்" என்று பதில் வந்தது. "வரும் வழியில் பண்ணை ஒன்றைப் பார்த்தேன்" என்று ஷாலினி சொல்ல, கணேஷ் "அப்படியா?" என்று கேட்டான். "அப்போது நிச்சயம் இங்கு வீடு ஏதாவது இருக்கும். அந்தப் பக்கம் போய் பார்க்கலாம்" என்று ஷாலினி சொன்னாள். இருவரும் காரிலிருந்து இறங்கி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்கள்.

தூரத்தில் ஒரு அழகான பண்ணை வீடு தெரிந்தது. உடனே கணேஷ் அந்த வீட்டிலிருப்பவர்களிடம் உதவி கேட்கலாம் என்று தன் காதலி ஷாலினியிடம் சொல்லிக்கொண்டே, அந்த வீட்டை நோக்கி நடந்தான். "இது சரியா? முன்பின் தெரியாதவர்கள், நடு இரவில் வீட்டைத் தட்டினால், கதவைத் திறப்பார்களா?" என்று கணேஷ் ஷாலினியைக் கலக்கத்துடன் பார்த்தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் தட்டினான். இரண்டு மூன்று முறை கதவைத் தட்டியதும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் ஒரு இந்தியர் என்றவுடன் கணேஷ் ஷாலினி இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி.

கணேஷ் அவரைப் பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொண்டான். அவரும் கலக்கத்துடன், இந்த நேரத்தில் வந்து கதவை தட்டுகிறார்களே என்ற சந்தேகத்துடனே, தன் பெயர் விக்ரம் என்று அறிமுகம் செய்து கொண்டார். கணேஷுக்கு ஒரே மகிழ்ச்சி. "சார், நீங்க தமிழரா?" என்று கேட்டான். "ஆமாம்! கோயம்புத்தூர் என் சொந்த ஊர்" என்று அவர் சொன்னார். கணேஷ் தான் சென்னையைச் சேர்த்தவன் என்றும், காதலி ஷாலினி கேரளாவைச் சேர்ந்தவள் என்றும், சான் ஃபிரான்சிஸ்கோவில் வசித்து வருவதாகவும் சொன்னான். இருவரும் யோசெமிட்டே போய்விட்டு வரும் வழியில் கார் பழுதடைந்து விட்டதாகச் சொல்லி, இரவு அங்கே தங்குவதற்கு உதவுமாறு கேட்டான். விக்ரம், சரி இவர்கள் நம்மிடம் உதவிக்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தார்.

விக்ரம் அவர்களை உள்ளே அழைத்து "ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்று கேட்டதுதான் தாமதம், ஷாலினி அவரசமாக "உம்" என்று தலையை வேகமாக ஆட்டினாள். கணேஷ் உடனே வேகவேகமாக "இல்லை வேண்டாம்" என்றான். அதற்கு விக்ரம் "பரவாயில்லை, கொஞ்சம் சாப்பிடுங்கள்" என்று கூறி அமரச் சொன்னார். இருவருக்கும் தோசையை ஊற்றிப் பரிமாறினார். மிகுந்த பசியில் இருந்ததால் வேக வேகமாகச் சாப்பிட்டனர்.

சாப்பிட்டுக் கொண்டே "நீங்கள் எப்படி இந்த ஊரில், நம்ம மக்கள் இங்க ஐ.டி.யில் தானே இருப்பாங்க? நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்று கணேஷ் கேட்டான். அதற்கு விக்ரம் "நானும் ஒரு காலத்தில் ஐ.டி.யில் தான் இருந்தேன். என் வாழ்வில் நடத்த ஒரு சம்பவம் என்னை இயற்கை விவசாயியாக மாற்றியது. ஆமாம், நான் இந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். அதோடு மட்டுமல்லாமல் ஆர்கானிக் பால் வியாபாரமும் செய்கிறேன்" என்றார் விக்ரம். "ஆமா, உங்க பேர் என்ன சொன்னிங்க? நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்து வரீங்க? இங்க என்ன செய்றீங்க?" என்று கேட்டு, அவர்கள் பதிலுக்காக உற்று நோக்கினார் விக்ரம்.

கணேஷ் சொல்ல வாய் எடுக்க, ஷாலினி "நாங்கள் இருவரும் சான் ஃபிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறோம், ஒரே ஐ.டி. கம்பெனியில் தான் வேலை பார்க்கிறோம். கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்" என்று சொன்னாள். கணேஷ், "ஆமாம், எங்கள் பெற்றோர்கள் இங்க வருவதற்கு எல்லாம் ரெடி பண்ணிவிட்டோம். இன்னும் 4 மாதத்துல கல்யாணம்" என்று சொன்னான். அதைக் கேட்டதும், விக்ரம் "கங்கிராட்ஸ்" என்று சொல்லி, இருவருக்கும் இன்னும் ஒவ்வொரு தோசையை வைத்தார். அருகில் அமர்ந்து சட்னி வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்புடன் உபசரித்தார்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் மூவரும் பேசிக்கொண்டு இருக்க, இவர்கள் பேச்சுக் குரல் கேட்டு விக்ரமின் மனைவி வித்யா பாதி தூக்கத்தில் எழுந்து வந்தாள். மிகுந்த குழப்பத்துடன் "யார் இவங்க? எப்படி இந்த நேரத்தில்?" என்று பார்வையிலே விக்ரமிடம் கேட்டாள். விக்ரம் புரிந்துகொண்டு, "இவர்கள் இருவரும் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து வருகிறார்கள். மற்றதெல்லாம் நான் உன்னிடம் ரூமில் வந்து சொல்கிறேன் மா" என்றார். அப்படியே கணேஷ், ஷாலினியைப் பார்த்து "நீங்கள் அந்த ரூமில் போய்ப் படுத்துக்கங்க" என்று ஓர் அறையைக் காட்டினார். கணேஷும் ஷாலினியும் அந்த அறையை நோக்கிச் சென்றார்கள்.

அடுத்த நாள் காலை 6 மணி. வித்யா காஃபி போட்டு முதல் வேலையாக ஷாலினி, கணேஷிடம் கொண்டு வந்து கொடுத்தாள். ஷாலினி காஃபியை எடுத்து கொண்டு, "ரொம்ப நன்றி வித்யாக்கா" என்று சொன்னாள். கணேஷ், "விக்ரம் எழுந்துட்டாரா?" என்று கேட்டான். அதற்கு வித்யா "நேரா காப்பி போட்டுட்டு உங்க ரூமுக்குத்தான் வந்தேன். இன்னும் அவருக்கு காப்பி எடுத்துப் போகல. ஆனா மணி 6 ஆச்சுல, மனுஷன் கட்டாயம் எழுந்து இருப்பார்" என்று சொன்னாள்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ஷாலினி, கணேஷ் இருக்கும் அறையை நோக்கி விக்ரம் வந்தார். உடனே வித்யா "உங்களுக்கு 100 ஆயுசு. இப்பத்தான் கணேஷ் தம்பி உங்கள கேட்டுச்சு. நீங்களே வந்துட்டீங்க" என்றார்.

காபியைக் குடித்துக்கொண்டே கணேஷ் விக்ரமிடம், "சார் உங்களிடம் ஜாக்கி அண்ட் டூல்ஸ் இருக்கா? காரைச் சரி செய்யணும்" என்று தங்கிலீஷில் கேட்டான். "இருக்கு கணேஷ், முதல்ல இந்த காஃபியை ரசிச்சு குடிங்க" என்று விக்ரம் சொன்னார். உடனே எல்லாரும் கலகலவெனச் சிரித்தார்கள். "சரி அப்ப டிபனுக்கு என்ன செய்ய?" என்று வித்யா கேட்டார். உடனே கணேஷ் "எதுக்கு சிரமம்? நாங்க காஃபி குடிச்சுட்டு, காரைச் சரி செய்துட்டு கிளம்பறோம்" என்றான்.

உடனே விக்ரம் "அது எல்லாம் ஒண்ணும் சிரமம் இல்லை. நீங்க காஃபி குடிச்சுட்டு குளியுங்க, அப்பறம் மத்தத எல்லாம் பாத்துக்கலாம்" என்று சொன்னார். வித்யா போய் இருவருக்கும் குளிக்க டவல் கொண்டு வந்து கொடுத்தார். ஷாலினி மறுப்புச் சொல்லாமல் டவலை வாங்கிக்கொண்டு குளிக்கச் சென்றாள். வித்யா "சரி, நான் போய் பிரேக்பாஸ்டுக்கு இட்லி, தேங்காய்ச் சட்னி செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

"வாங்க டூல்ஸ் எடுத்துட்டு வர்றேன், காரைச் சரி செய்துடலாம்" என்று விக்ரம் சொன்னார். இருவரும் சேர்ந்து கார் டயரை மாற்றினார்கள். கணேஷ் "அப்பாடா! காரை சரி செய்தது பெரிய ரிலீஃபா இருக்கு, ரொம்ப நன்றி சார்!" என்று சொன்னான். விக்ரம் சிரித்துக்கொண்டே, "இதுக்கெல்லாம் எதுக்குப்பா நன்றி. சின்ன உதவிதானே" என்று சொன்னர்.

இருவரும் பேசிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்கள். வீட்டின் முன்புறம் முழுக்கப் பெரிய தோட்டம் அதில் இல்லாத செடிகளே இல்லை. கணேஷ் "வாவ்! எவ்வளவு பெரிய தோட்டம் இருட்டில் வந்ததால் இதையெல்லாம் சரியாகப் பார்க்கவில்லை" என்றான். செடிகளின் பெயர், என்ன பயன் தரும் என்று விலாவாரியாக விக்ரமிடம் நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டு இருந்தான். "அப்புறம் சொல்லுங்க சார் எப்பிடி ஐ.டி.யிலிருந்து இயற்கைவழி விவசாயம் ஆரம்பிச்சீங்க?" என்றான் கணேஷ்.

"அதுவா அது ஒரு பெரிய கதை. எங்களுக்கு ஒரே பையன். 9 வயசுவரை வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்தது. அப்பறந்தான் அவனுக்கு அடிக்கடி தசைவலி வந்தது. பல டாக்டர்களைப் பார்த்தும் என்ன வியாதி என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசிலதான் மயோசிடிஸ் என்று தெரிய வந்துது. அதுவரை அப்படி ஒண்ணு இருப்பதே தெரியாது. அதைச் சரி செய்ய இயலாது என்றும் ரெமிஷனுக்கு வேண்டுமென்றால் கொண்டுவரலாம் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். அந்தச் சின்ன வயதில் அவனுக்குத் தொடர்ந்து 6 மாதம் ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. அதனால் அவனுக்குப் பல பாதிப்புகள் வந்தன. அது மட்டுமல்லாமல் அவனுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இம்யூனோ சப்ரசிவ் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளவேண்டி இருந்தது. அவன் பட்ட அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு தந்தையாக அவனுக்கு நான் சிறப்பான சிகிச்சையை மட்டுமல்லாது அவனை விரைவில் இந்த நோயின் தாக்கத்தில் இருந்து சரிசெய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்."

"சரியான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் இருந்தால் அதைச் சரி செய்யலாம் என்று பல இணையதளங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன். நாம் இன்று சாப்பிடும் உணவு எவ்வளவு விஷத்தன்மை கொண்டது! நாம் வாழும் இந்தப் பரபரப்பான வாழ்க்கை முறையும் எவ்வளவு மன அழுத்தம் தருவது! இதை நான் உணர்ந்தேன். அதன் பிறகுதான் இந்த ஆர்கானிக் மில்க் ஃபார்ம் மற்றும் ஆர்கானிக் தோட்டத்தை ஆரம்பித்தேன்" என்று விலாவரியாகச் சொன்னார். சில வருடங்களில் அவன் பிரச்சனை படிப்படியாகச் சரியானது என்றும் இப்போது அவன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும் சொன்னார்.

அதைக் கேட்டு கணேஷ் "என்ன சார் சொல்றீங்க! ஷாலினிக்கும் இதே பிரச்சனை உள்ளது. எங்களுக்கும் நீங்க செய்த வழிமுறைகளைச் சொல்லுங்க சார்" என்று வேண்டிக் கொண்டான். அதற்கு விக்ரம் கட்டாயம் உதவி செய்வதாகக் கூறினார்.

அப்போது அங்கு வந்த வித்யா "சரி, சிற்றுண்டி ரெடி. சாப்பிட வாங்க!" என்று சொன்னார்.

எல்லாரும் சாப்பிட்டார்கள். பிறகு கணேஷ் ஷாலினியிடம் "நாம் கிளம்பலாமா?" என்று கேட்டான். உடனே வித்யா "இருங்க கொஞ்ச நேரம் கழித்துக் கிளம்பலாம் நீங்க எங்க பண்ணை, தோட்டம், பின்னாடி ஓடற ஆறு இதெல்லாம் பாத்துட்டுப் பொறுமையா போகலாம்" என்று சொன்னார். "என்னது ஆறு உங்க வீடு பின்னாடி இருக்கா! பாக்கலாமா?" என்று ஷாலினி கேட்டாள். வித்யா, "ஆத்துத் தண்ணி நல்லா வெதுவெதுனு இருக்கும். குளிக்கறதுனா கூட குளிச்சுட்டு வாங்க, நான் பஜ்ஜி போட்டு எடுத்து வரேன்" என்றார்.

மூவரும் ஆற்றங்கரையில் பாய் விரித்து அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் வித்யாவும் வர, எல்லாரும் பஜ்ஜியைச் சாப்பிட்டுவிட்டு, நதி நீரில் குளித்து மகிழ்ந்தனர். பிறகு பண்ணை, தோட்டம் எல்லாம் சுற்றிப் பார்க்க மணி நண்பகல் 12 ஆனது. கணேஷ் "ரொம்ப அருமை. நாங்க பாத்த சுற்றுலா இடத்தைவிட உங்க வீடு, பண்ணை தோட்டம், ஆறு எல்லாம் சூப்பரா இருந்தது. ரொம்ப நன்றிங்க நாங்க கிளம்புறோம்" என்றான்.

விக்ரமைப் பார்த்து "ரொம்ப நன்றிங்க விக்ரம் சார்! யாருனு தெரியாத எங்களைத் தங்க வச்சது எல்லாம் ரொம்பப் பெரிய விஷயம் சார்" என்று நன்றி பொங்கக் கூறினாள் ஷாலினி. ஷாலினியும் கணேஷும் "நீங்க சான் ஃபிரான்சிஸ்கோ வரும்போது எங்களைப் பார்க்க வாங்க. கல்யாண பத்திரிகை ரெடி ஆனதும் உங்களுக்குத்தான் முதலில் வந்து வைப்போம்" என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

இருவரும் காரில் போகும்போது கணேஷ் விக்ரம் சொன்ன விஷயத்தை ஷாலினியிடம் சொல்லி, "அவர் உனக்கு இருக்கும் பிரச்சனைக்கு உதவி செய்வதாகச் சொன்னார் ஷாலினி. சும்மா ஒண்ணும் இங்க கார் பிரேக் டௌன் ஆகலை. எல்லாம் கடவுள் செயல்" என்று சொல்லிச் சந்தோஷப்பட்டான். "நாமும் நகர வாழ்க்கையை விட்டு இயற்கையுடன் இயைந்து, நம்ம வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றி வாழப் பழகுவோம்" என்று கணேஷ் சொன்னான்.

இந்துமதி ஜெயபால்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com