முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
★★★★★
கேள்வி: நான் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர்நிலை மேலாண்மைப் பதவியில் சௌகரியமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால் என் நண்பர்கள் சிலர் தாமே நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றிபெற்று, செல்வந்தர் ஆகியுள்ளார்கள். எனக்கும் ஒரு நல்ல யோசனை உள்ளதால் நானும் ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் குதிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆரம்பித்தால் எவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்கும்? அதைப்பற்றி உங்கள் பரிந்துரை என்ன? கதிரவனின் பதில்: ஆரம்பநிலை நிறுவனத்தில் வெற்றி காண்பது நீங்கள் நினைக்கும் அளவு அவ்வளவு எளிதல்ல என்று முன்பு கூறினோம். நிறுவனம் எதிர்கொள்ளும் இன்னல்களையும் பட்டியலிட்டோம். இதோ அந்த இன்னல் பட்டியல்:
* சொந்த/குடும்ப நிதி நிலைமை மற்றும் தியாகங்கள் * நிறுவனர் குழுவைச் சேர்த்தல் * உங்கள் யோசனையைச் சோதித்துச் சீர்படுத்தல் * முதல்நிலை நிதி திரட்டல் * முதல்நிலை திசை திருப்பல் (initial pivoting) * முதல் சில வாடிக்கையாளர்கள் * விதைநிலை நிதி திரட்டல் * வருடம் மில்லியன் டாலர் விற்பனை நிலை * சந்தை மெத்தனம், சந்தை மாற்றம், அதனால் திசை திருப்பல் * முதல் பெருஞ்சுற்று நிதி திரட்டல் * குழு கோளாறு அல்லது கருத்து வேறுபாடு; குழு பிரிவு * வெற்றிக் கோட்டைத் தாண்டத் தடங்கல்கள்
முன்பகுதியில் குடும்ப நிதிநிலை இன்னல்கள் என்னென்ன நேரக்கூடும் என்று விவரித்தோம். ஏற்கனவே நிறையக் குடும்பநிதி திரட்டியிராவிட்டால், கணவன் மனைவியரில் ஒருவராவது நிலைத்த வேலையில் சம்பாதிக்கவில்லையென்றால் நிறுவனத்தை ஆரம்ப்பிப்பதே கடினம் என்று விளக்கினோம். இப்போது நிறுவனக் குழுவைச் சேர்க்கும் முயற்சியில் நேரக்கூடிய இன்னல்களைப் பற்றி விவரிப்போம்.
தனிமரம் தோப்பாகாது என்பது ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு மிக முக்கியமான விஷயம்! எனக்குத் தெரிந்து ஒரே ஒரு நிறுவனரால் ஆரம்பிக்கப்பட்டு பெருவெற்றி கண்ட ஆரம்பநிலை நிறுவனமே இல்லை. அமேஸான் பேஸோஸ், டெஸ்லா மஸ்க் போன்றவர்கள் கூட தனிப்பட்ட முறையில் பெரும்பெயர் பெற்றிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நிறுவியவர்கள் உள்ளனர் என்பதுதான் உண்மை. மைக்ரோஸாஃப்ட், ஆப்பிள், போன்ற நிறுவனங்களில் உடன் நிறுவியவர்களும் பெயர் பெற்றனர். எப்படியாயினும் உங்களுடன் சேர்ந்து நிறுவனராகப் பணியாற்ற ஒருவரேனும் அத்தியாவசியம் என்பது என் கருத்து. என் ஆரம்பநிலை அனுபவத்தில் ஒவ்வொரு நிறுவனத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது.
ஆனால் நிறுவனம் எப்படிப்பட்ட சுக துக்கங்களை அனுபவித்தாலும் உங்கள் தோளோடு தோள் சேர்த்து, சற்றும் சளைக்காமல் மிக நெருங்கிய தோழராகச் செயல்படும் இணைநிறுவனர் ஒருவர் கிடைப்பது எளிதல்ல. எதோ நீங்கள் மிக அதிர்ஷ்டக்காரர் என்றால் முதலிலேயே வெகுகாலமாக உங்களுடன் சேர்ந்து பணியாற்றிய ஒருவரோ அல்லது ஒரு குழுவோ உங்களுடன் சேர்ந்து நிறுவ முன்வரக் கூடும். ஸிஸ்கோவில் பணியாற்றிய நான்கு பேர் சேர்ந்து வரிசையாக நிறுவனங்களை ஆரம்பித்து ஸிஸ்கோவுக்கே விற்று வெற்றிகரமாக வலம் வந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
என் சொந்த அனுபவத்திலும், முதலிலேயே இணைந்து பணியாற்றியது கடைசியாக ஃபேப்ரிக் (The Fabric) ஆரம்பிக்கும் போதுதான். அதற்கு முன், குடும்ப சினேகிதராக இருந்தவர்களுடன் நிறுவனம் ஆரம்பித்தேனே ஒழிய அவர்களுடன் இணந்து பணியாற்றியது அபூர்வம்தான். ஆன்க்கீனா நிறுவனத்தில்கூட நான்கு இணைநிறுவனர்களில் ஒருவர்தான் முன்பு இணைந்து பணியாற்றியவர்.
அப்படி முன்பே இணைந்து பணியாற்றிய இணைநிறுவனர் இல்லாவிட்டால் அப்படி ஒருவரைத் தேடிக் கண்டெடுப்பது மிகக் கடினம்! நான் இணை நிறுவியுள்ள கிட்டத்தட்ட இருபது ஆரம்பநிலை நிறுவனங்களின் அனுபவத்திலேயே அப்படித்தான்!
முதலாவதாக, உங்கள் திறன்களே அல்லாமல் நிறுவனத்துக்குத் தேவையான மாற்றுத் திறன்கள் கொண்ட இணை நிறுவனரைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் சமூக நண்பர் அல்லது நண்பர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் குழாமிலிருந்து ஒருவர் கிட்டினால் அது நல்லது. கூடிய சீக்கிரமே அப்படிப்பட்ட இணைநிறுவருடன் இணைந்து பணிபுரியப் பழகிவிட வாய்ப்புள்ளது. கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது விட்டுக் கொடுத்து வேலை செய்யும் பழக்கம் சற்று எளிதாக வரக்கூடும். ஆனால் சில சமயங்களில் கருத்து வேறுபாட்டால் அத்தகைய நண்பரே நிறுவன உறவை முறித்துக் கொண்டு விலகவும் நேரிடலாம். துராதீனமாக அப்படியாகிவிட்டால், முன்பிருந்த நட்பேகூட முறிந்து விடலாம். அது உறவாகவோ குடும்ப நட்பாகவோ இருந்தால் நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தினரும் கூட மனக்கசப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
முன்பே இணைந்து பணியாற்றியிராவிடில், இணைநிறுவனர்களில் ஒருவர் மற்றவரின் குணாதிசயங்களோடு ஒத்து நடந்து கொள்வதற்கு சில காலமாகும். அப்படிப் பழகி, பரஸ்பர சுமுகமாகப் பணியாற்றும் நிலை அடைவதற்குள் கருத்து வேறுபாடு அல்லது குணாதிசய வெறுப்பு பெரிதாகி வெடித்து முன்பு கூறியபடி ஒருவர் நிறுவனத்திலிருது விலகும் நிலையைச் சென்றடைய அதிக வாய்ப்புள்ளது.
நல்ல வேளையாக நான் முதலில் இணை நிறுவிய நிறுவனங்களில் குழுப் பிரச்சனை எழுந்தபோதும் சமாளித்து வெற்றியடைய முடிந்தது. ஆனால் ஃபேப்ரிக் நிறுவனம் இணைநிறுவிய நிறுவனங்களில் குழுப் பிரச்சனையால் தோல்வியடைந்ததை நாங்களே அனுபவித்துள்ளோம்.
ஃபேப்ரிக் முதலில் இணைநிறுவிய வெலோக்ளௌட் (velocloud) நிறுவனக் குழு நன்கு இணைந்து செயல்பட்டுப் பெரும்வெற்றி கண்டது. ஆனால் மற்ற சில நிறுவனங்களில் நிறுவனர் குழு பிரச்சனையால் தோல்வியடைய நேர்ந்தது.
ஒரு நிறுவனத்தில் நிறுவன ஆரம்ப முயற்சியில் சில காலம் இணைந்து செயல்பட்ட ஒரு குழுவில் ஒருவர் தானே முதன்மை மேலாளர் (CEO) பதவியில் செயல்பட்டாக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். மற்றவர்கள், அவர் விற்பொருள் மேலாண்மை (product management) பணிக்குத்தான் அனுபவம் பெற்றவர் என்று எண்ணினர். அப்படி ஆரம்பித்து, சில காலத்துக்குப் பிறகு அவரே திறன் நிரூபித்தோ அல்லது வேறோரு அனுபவமுள்ள முதன்மை மேலாளரைச் சேர்த்தோ செயல்படலாம் என்று எண்ணினர். ஆனால் பிடிவாதம் பிடித்த அவர் குழுவுக்குள் அரசியல் நடத்திப் பல பிரச்சனைகளை எழுப்பியதால் நிறுவனமே ஆரம்பிக்க முடியாமல் போயிற்று!
ஆரம்பகாலக் குழுக்களுக்குள் எழக்கூடிய மற்ற பிரச்சனைகளைப் பற்றியும், அடுத்த இன்னலைப் பற்றியும் வரும் பகுதியில் விவரிப்போம்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |