அருண் தனது வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு இருந்தான். தான் சொன்னபடி அம்மா செய்தித்தாளில் 6ஆம் பக்கத்தை எடுத்துப் பார்க்கிறாரா என்று பார்த்தான். அவனுக்கு உள்ளூர ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. ஆனாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'எத்தனாவது பக்கம், கண்ணா?'
'ஆறாவது பக்கம் அம்மா.'
கீதா மெதுவாக 6ஆம் பக்கத்தைப் பிரித்துப் பார்த்தார். அதில் முழுப் பக்க விளம்பரம் இருந்தது. அது ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் போல இருந்தது. மனதுக்குள்ளேயே படித்தார்.
'எர்த்தாம்டன் நகர வாசிகளே,
நமது நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள பாலைவனமான இடத்தில் அருமையான வீடுகளில் வசிக்கவேண்டுமா? நகர நெரிசலில் இருந்து காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வாழ அருமையான இடம் வேண்டுமா? பாலைவனமான இடத்தில், நன்கு பராமரிக்கப்படும் நல்லதொரு திட்டத்தில் பங்குபெற உங்களுக்கு வாய்ப்பு வேண்டுமா?
இதோ இதுவரை கிடைத்திடாத வாய்ப்பு…
எர்த்தாம்டன் நகர ஊராட்சி மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளின் உதவியுடன் நாங்கள் ஒரு வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவுள்ளோம். ஆமாம், குறைந்த வருமானம் உள்ளவர்களும் வளமுடன் வாழ நாங்கள் வீடு கட்டிக் கொடுக்கப் போகிறோம்.
வீடுகளைச் சுற்றிப் பாலை மரங்கள் சூழ, இயற்கை எழில் மிகுந்த ஒரு சோலையை நாங்கள் உருவாக்க உள்ளோம். இதில் இருந்து வரும் வரிப் பணத்தில் நாங்கள் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு ஒரு பெரிய பகுதியைக் கொடுத்து உங்களது ஊரைப் பராமரிக்க உதவி செய்ய உள்ளோம்.
இந்த அரிய வாப்ப்பை விட்டுவிடாதீர்கள். உங்கள் நகரத்தின் வளம் உங்கள் கைகளில். இப்பொழுதே கீழே குறிப்பிடப் பட்டுள்ள ஃபோன் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.'
கீதா, விளம்பரத்தைப் படித்து முடித்தார். அவருக்கு எதுவும் முக்கியமாகப் படவில்லை. அருணிடமே கேட்டுக்கொள்ளலாம் என்று காத்திருந்தார். அந்த மாதிரி நிறைய விளம்பரங்களை அவர் பார்த்திருக்கிறார்.
அருண் கடகடவென்று வீட்டுப்பாடத்தை முடித்தான். முடித்த கையுடன் அம்மாவிடம் 'அம்மா, விளம்பரம் படிச்சீங்களா?' என்று கேட்டான்.
'ஆமாம். எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியலையே. இந்த மாதிரி ரியல் எஸ்டேட் விளம்பரம் அடிக்கடி வரதுதானே.'
'இதுல ஏதும் உங்களுக்கு வித்தியாசமா படலை?'
கீதாவுக்கு அந்தச் சமயத்திலும் அருணின் வீட்டுப்பாடம் பற்றிய நினைவுதான். 'ஹோம்வொர்க் பண்ணிட்டயா?' என்றார்.
அருணுக்கு எரிச்சல் வந்தது. பட்டென்று தன் கையில் இருந்த பேனாவைத் தூக்கி எறிந்தான். உணவு மேசைமீது இருந்த நோட்டுப் புத்தகங்களை ஒரு தள்ளு தள்ளினான்.
'ஹோம்வொர்க், ஹோம்வொர்க்... அம்மா என்மேல நம்பிக்கையே கிடையாது இல்ல? உனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாகூட என்னோட ஹோம்வொர்க் பத்திதான் உனக்கு நினப்பு. Why are you this obsessed?'
அருண் கோபத்தில் பொரிந்து தள்ளினான். கீதாவிடம் ஒன்றும் பேசாமல் வாசல் பக்கமாகப் போனான்.
'I am going for a walk. Don't text and bug me. I want some peace.'
டமால் டமால் என்று சத்தம் கேட்டது. கோபத்தோடு கதவைத் திறந்து கொண்டு வீட்டின் வெளியே சென்றான். பக்கரூ அவனோடு வெளியே போகப் பார்த்தது. அதை அருண் ஒரு முறை முறைத்தான். பாவம், அப்படியே பயந்துபோய்த் தன் இருப்பிடம் பார்த்து ஓடிவிட்டது.
'Stay inside!' அருண் போட்ட அதட்டலில் பக்கரூ இன்னும் பயந்து போனது.
கீதாவுக்கு, தான் கொஞ்சம் அதிகமாகச் செய்துவிட்டோமோ என்று வருத்தம் வந்தது. தனது கணவர் ஒரு விளையாட்டுப் பிள்ளை மாதிரி அருணோடு நடந்து கொள்ளும் போது, தான் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பதில் தப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. அருணுக்கு தன் மாதிரி பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், பள்ளிக்கூட விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்று நினைத்தார். அதுவும் இல்லாமல், அருணின் பிடிவாத குணத்தையும் கட்டுப்படுத்த எண்ணினார். எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும், அந்தப் பிடிவாதம் எங்கிருந்து வந்ததோ?
மீண்டும் செய்தித்தாளை எடுத்து அந்த விளம்பரத்தைப் படித்துப் பார்த்தார். ஒன்றும் வித்தியாசமாகப் படவில்லை. அருணையே கேட்டுக்கொள்ளலாம் என்று இருந்தார்.
சிறிது நேரம் கழிந்தது. அருண் திரும்பி வந்தான். கீதா சமையலறையில் மும்முரமாக இருந்தார். வந்தவன் அப்படியே மாடிக்குப் போனான். அவனது நோட்டுப் புத்தகங்கள் போட்டது போட்டபடி இருந்தன. அவன் கண்டுகொள்ளவே இல்லை. எப்படியும் சாப்பிடும் நேரத்தில் அந்த இடத்தைச் சுத்தம் செய்யத்தானே வேண்டும்.
அருணை ஓரக்கண்ணால் கீதா பார்த்துக் கொண்டுதான் இருந்தார். எப்படியும் சாப்பிட அவன் கீழே வந்துதானே ஆகவேண்டும். அப்பொழுது பேசிக் கொள்ளலாம் என்று இருந்தார்.
கீதா செல்பேசியில் கணவர் ரமேஷிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதைப் பார்த்தார். அதில் தான் இரவு தாமதமாக வரப்போவதாகச் செய்தி அனுப்பி இருந்தார். பொதுவாக அந்த மாதிரி சமயங்களில் ரமேஷ் வெளியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவார். கீதாவுக்கும் கொஞ்சம் வேலை குறைச்சல்.
மணி 7 அடித்தது. Pavlov's dog போல மாடியிலிருந்து இறங்கி வந்தான் அருண். வந்தவன் சமையல் அறைக்குள் நுழைந்து தானே ஒரு தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அடுப்பின் மீதிருந்த பாத்திரத்தில் இருந்து சாப்பாட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான்.
'ம்… பாஸ்தா சூப்பர்.” தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அம்மா எங்கே என்று ஒரு நோட்டம் விட்டான். அவர் ஒரு மூலையில் நின்று கொண்டு மறுநாள் காலைக்கு வேண்டியதைப் பண்ணிக் கொண்டிருந்தார்.
அம்மாவிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், டைனிங் டேபிளுக்குப் போனான். அங்கிருந்த நோட்டுப் புத்கங்களை ஒருபுறமாக ஒதுக்கிவிட்டுத் தட்டை வைத்துச் சாப்பிட ஆரம்பித்தான். அத்தோடு தனது செல்பேசியில் TikTok பார்த்துக் கொண்டு இருந்தான். அந்தச் சத்தம் கீதாவிற்கு எரிச்சலை அதிகமாக்கியது. தான் பின்பற்றிய ஜென் முறை தியானம் அதன் எல்லையைத் தொட்டுவிட்டது. மூச்சை ஆழமாக இழுத்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பார்த்தார்.
'அருண்!'
கத்திய கத்தலில் பூகம்பமே வெடித்தது போல இருந்தது. அவர் போட்ட கத்தலின் அதிர்ச்சியில் பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஒரு மாதமாக பின்பற்றிய ஜென் முறைகள் எல்லாம் காற்றோடு போயின. அன்று ஒரு நல்ல உரையாடல் நடக்க இருந்தது. அது தவிடு பொடியாகிப் போனது.
'அருண், என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல? பெரிய ராஜான்னு நினைப்பா உனக்கு? என்ன திமிர். என்ன திண்ணக்கம்.'
என்ன தோன்றியதோ தெரியவில்லை கீதாவுக்கு, ஆத்திரத்தில் அருணின் தட்டை பட்டென்று எடுத்தார். அது அருணின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்தது.
'அம்மா, உங்களுக்கு ஒரு நாகரிகம் கிடையாதா? வாயால பேசு அப்படின்னு 100 தடவை சொல்லுவீங்களே, அது இதுதானா? எப்படி நான் சாப்பிடும்போது நீங்க என் தட்டைப் பிடுங்கலாம்?'
அருண் தன் பக்கம் நியாயம் இருப்பதாக விவாதம் செய்தான். கீதாவும் விட்ட பாடில்லை. அவரின் கோபம் எங்கோ போய்விட்டது.
'அருண், நீ இந்த நோட்டுப் புத்தங்களை எல்லாம் எடுத்து வைக்கலேன்னா, உனக்கு இன்னைக்கு டின்னர் கிடையாது. என்னையா நீ டெஸ்ட் பண்ணுற?'
'நான் சாப்பிடாட்டினா, நீங்களும் சாப்பிட முடியாது.' அருண் சொல்லிக் கொண்டே சமயலறைக்குள் ஓடி, அங்கிருந்த பாஸ்தா பாத்திரத்தை எடுத்து அப்படியே கொட்டப் போனான். 'நான் சாப்பிடலைன்னா, இப்ப யாருக்கும் சாப்பாடு கிடையாது.'
கீதா ஒரு தாவலில் அருண் அருகே போய் அவன் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினார். அவனைப் பளார் என்று ஒரு அறை விட்டார்.
அருண் கோபம் கலந்த அழுகையோடு மாடியில் தன் அறைக்கு ஓடிப் போனான்.
கீதா பத்து முறை எண்ணி, தனக்குத் தானே ஆழ்ந்த மூச்சு விட்டுக்கொண்டார்.
(தொடரும்)
ராஜேஷ் |