ஆதி ரத்னேஸ்வரர் ஆலயம், திருவாடானை
ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானையில் உள்ளது.

தலப் பெருமை
மூலவர்: ஆதி ரத்னேஸ்வரர். அம்பாள்: சிநேஹவல்லி. தலவிருட்சம்: வில்வம். தீர்த்தம்: சூரிய புஷ்கரணி. தேவாரப் பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் தலங்களில் இது ஒன்பதாவது தலம். பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களில் இதுவும் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை, சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில் பாடியுள்ளார்.

ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்துமே சிறப்புடையனவாக உள்ளன.

மூர்த்தியாக இறைவன் சுயம்புலிங்கமாக, ஆதி ரத்னேஸ்வரர், அஜகஜேஸ்வரர், திருவாடானை நாதர் என்ற பெயர்களுடன் திகழ்கிறார். அம்பாள்: சிநேஹவல்லி; அன்பாயிரவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். தீர்த்தங்கள்: சூரிய புஷ்கரணி, வருண வாரணி, மார்க்கண்டேய தீர்த்தம், அகத்திய தீர்த்தம்.



புராணக் கதை
அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், 'திருவாடானைக்கு வா சொல்லித் தருகிறேன்' என்றார். அதன்படி அர்ஜுனன் இத்தலம் வந்து வழிபட்டு அதனைத் தெரிந்து கொண்டான். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம் .

சூரியனின் கர்வம் போக்கிய தலம்
ஒருமுறை சூரியனுக்கு, தான் மிகவும் பிரகாசம் உடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. பின்னர், இறைவன் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி ஈர்க்கப்பட்டு சூரியனுக்குச் சுய ஒளி போய்விட்டது. அதனால் வருந்திய சூரியன் நந்தியிடம் பரிகாரம் கேட்டார். 'சுயம்பு மூர்த்தியாகத் திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை, நீல ரத்தினக் கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும்; ஒளி திரும்பக் கிடைக்கும்' என்றருளினார் நந்தியம் பெருமான். அதன்படி சுயம்பு மூர்த்தியாகத் திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை, நீல ரத்தினக் கல்லில் ஆவுடை அமைத்துப் பூஜித்தார் சூரிய பகவான். அதனால் இறைவனுக்கு ஆதி ரத்னேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இழந்த ஒளியைத் திரும்பப் பெற்றார் சூரிய பகவான்.

சிவபெருமான் மீது உச்சிக் காலத்தில் பாலாபிஷேகம் செய்தால், இறைவன் நீல நிறத்தில் காட்சி அளிப்ப்பது இத்தலத்தின் சிறப்புக்களில் ஒன்று. இங்கு சுக்கிரனுக்குரிய அதிதேவதையாக அம்பாள் சிநேஹவல்லி உள்ளாள். அதனால், இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத் தலமாகக் கருதப்படுகிறது.



வருணனுடைய மகன் வாரணி, துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். அப்போது அவனுடன் வந்த நண்பர்கள் அங்குள்ள பூ, பழங்களை அள்ளி வீசி விளையாடினர். அவர்கள் விளையாட்டால் முனிவரின் தவம் கலைந்தது. சினமுற்ற முனிவர், 'வாரணி, நீ வருணனின் மகனாக இருந்தும் பொருந்தாத காரியத்தைச் செய்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும் கொண்டவனாக மாறுவாய்' என்று சாபமிட்டார்.

வாரணி தன் தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு வேண்டினான். முனிவரும் 'சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது, அத்தலத்து இறைவனை நீ வழிபட்டால் பாவ விமோசனம் கிடைக்கும்' என்றார். அதன்படி வாரணி இத்தலத்தில் குளம் அமைத்து, தினமும் வழிபட்டான். மகிழ்ந்த இறைவன் அவன்முன் தோன்றிச் சாபம் நீக்கினார். 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'ஊழிக்காலம் முடியும்வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும்' என்று கேட்டான். இறைவன் அவ்வாறே அருள் புரிந்தார். ஆடு + ஆனை பூஜித்த தலம் என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது. தமிழில் திருவாடானை (திரு + ஆடு + ஆனை) என்று அழைக்கப்படுகிறது.

வீடி னார்மலி வேங்க டத்துநின்
றாட லானுறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே.

- திருஞானசம்பந்தர் தேவாரம், இரண்டாம் திருமுறை

- சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com