ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்
தமிழுக்கும் கன்னடத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன். தமிழிலிருந்து கன்னடத்திற்கும், கன்னடத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைத் தந்திருக்கும் இவர், டிசம்பர் 12, 1911ல், கரூரை அடுத்துள்ள வாங்கல் கிராமத்தில் பிறந்தார். தந்தை சம்ஸ்கிருத பண்டிதர் ஏ.வி. ராமநாதன். 'ராஜமந்திர பிரவீணா' எனப் போற்றப்பட்டவர். மைசூர் மாநில கவுன்சில் உறுப்பினராக இருந்தார். மைசூர் அரசின் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். பிற்காலத்தில் பரத்பூர் சம்ஸ்தானத்தின் திவானாகவும் இருந்தார். தாயார் சீதாலட்சுமி.

இளவயதிலேயே அறிவார்ந்த சூழலில் வளர்ந்தார் ஜெயலக்ஷ்மி. தந்தையின் பணி நிமித்தம் பல்வேறு ஊர்களில் வசித்தார். பள்ளிப் பருவம் பல இடங்களில் கழிந்தது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றார். தந்தை பண்டிதர் என்பதால் பன்மொழி இதழ்கள் வீட்டிற்கு வரும். அவற்றை வாசித்து இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தமிழ் மற்றும் கன்னடத்தில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். மகளின் ஆர்வத்தைத் தந்தை ஊக்குவித்தார். ஸ்ரீநிவாஸனுடன் திருமணம் நிகழ்ந்தது. கணவரும் மனைவியின் திறமையை அறிந்து ஊக்குவித்தார். பல இதழ்களைச் சந்தா கட்டி வரவழைத்தார்.

ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் படைப்புகள் சில
புஷ்பஹாரம்
லக்ஷ்மி கடாக்ஷம் முதலிய கதைகள்
பிரேமா முதலிய கதைகள்
தீபாவளி மற்றும் பிற கதைகள்
பூமாவின் புன்னகை
ஐரோப்பா, அமெரிக்கப் பயண அனுபவம்
அமெரிக்கா சுற்றுலா
ராமச்சந்திரன் ருக்மணி
குழந்தைப் பாதுகாப்பு
மூன்று முத்துக்கள்


ஜெயலக்ஷ்மி, கன்னடத்தில் எழுதிய முதல் நாவல், 'கிராமோத்தாரக ராமச்சந்திரா' இவரது 18ம் வயதில் இது வெளியானது. தவிர, போலாரா விட்டல்ராவ் மற்றும் ஹுருளி பீம்ராவ் ஆகியோர் வெளியிட்ட 'கந்தர்வா' இதழில் இரண்டு நாவல்களும் பல சிறுகதைகளும் வெளிவந்தன. 'பிரஜாமாதா', 'ஜனவாணி', 'சுபோதா', 'ஜீவன்', 'சரஸ்வதி' போன்ற இதழ்களிலும் எழுதினார்.

மைசூர் அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்த கே.எஸ். வேங்கடரமணி, ஜெயலக்ஷ்மியின் திறமை அறிந்து அவரைத் தமிழில் எழுத ஊக்குவித்தார். தான் ஆசிரியராக இருந்த 'பாரதமணி' இதழில் ஜெயலக்ஷ்மியின் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டார். தொடர்ந்து சுதேசமித்திரன் இதழில் சிறுகதைகள் எழுதினார் ஜெயலக்ஷ்மி. அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'புஷ்பஹாரம்' என்ற தொடரை சுதேசமித்திரனில் எழுதினார். அது பின்னர் நூலாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பாரிஜாதம், வசந்தம், ஜகன்மோகினி, மங்கை, நவசக்தி, ஆனந்தவிகடன், கல்கி, பாரததேவி, கலைமகள், உதயா, காவேரி போன்ற இதழ்களில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் வெளியாகின. ஜகன்மோகினி, மங்கை போன்ற பெண்களுக்கான இதழில் சிறுகதைகளோடு கூடவே உடல்நலம், மனநலம் சார்ந்த பல கட்டுரைகளையும் எழுதினார். 'ஐந்து கடிதங்கள்', 'அன்புக் காணிக்கை', 'தெய்வசித்தம்', 'பச்சைப் பாவாடை', 'மறுமலர்ச்சி', 'மாலதி', 'கடவுள் எங்கே' , 'அசட்டுப் பெண்' போன்றவை ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸனின் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளாகும்.



இவரது பெரும்பாலான சிறுகதைகள் பிராமண, மத்தியதர மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டவை. நகைச்சுவையாக எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார். காங்கிரஸ் இயக்கப் பிரசாரத்திற்கும் தனது கதைகளைக் கருவியாகக் கையாண்டார். ஏ.என். கிருஷ்ணராவ், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவுடு நரசிம்ம சாஸ்திரி, வெங்கடராமையா சீதாராமையா, ஜி.பி. ராஜரத்தினம் உள்ளிட்ட பலரது படைப்புகளை ஜெயலக்ஷ்மி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் 'சுப்பண்ணா'வைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது. அதுபோல ராஜாஜி உள்ளிட்டோரின் படைப்புகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். சிறார்களுக்காகவும் பல படைப்புகளைத் தந்துள்ளார். 45க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார்.

ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், கன்னட மொழி இலக்கியப் பங்களிப்புக்காக கன்னட சாகித்ய பரிஷத்தின் சிறந்த எழுத்தாளர் விருது, கர்நாடக சாகித்ய அகாடமியின் கெளரவ விருது, குழந்தைகள் இலக்கியப் பங்களிப்புக்காக குழந்தை இலக்கிய மாநாட்டில் 'உத்தம மகிளா சாஹிதி' விருது, பெங்களூரு வானொலியின் 'சிறந்த எழுத்தாளர்' விருது, 'லிபி பிரஜ்ஞா விருது' போன்றவற்றைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதும் இவருக்குக் கிடைத்தது. இவருக்கு 'வித்யா ரத்னம்' என்ற பட்டத்தை தபோவனம் ஞானானந்த சுவாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார்.

தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், மார்ச் 3, 2011 அன்று காலமானார்.

அரவிந்த்

© TamilOnline.com