பட்டுப்புடவை சலசலக்க பச்சிளம் சிறுவர்களின் உற்சாகக் கூக்குரல் கூரையைத் தொட்டுக் கலகலக்க, மேலே தெளித்த பன்னீர் குளுகுளுக்கப் பொஙகல் களை கட்டியது அந்த மண்டபத்தில். எலும்பைத் துளைக்கும் ஒட்டாவா (கனடா) குளிரைப் பொருட்படுத்தாமல் நிரம்பி வழிந்தது மண்டபம். பொங்கல் திருநாளைக் கொண்டாடக் குழுமி இருந்தனர் மக்கள்.
திருமதி சுஜாதா ரங்கநாதன் சுவைபட நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். தமிழ் வாழ்த்துக்குப் பின் இந்திய ஹை கமிஷனர் ஸ்ரீ சஞ்சய் குமார் சிறப்புரை ஆற்றினார்.
பிறகு ஜகதீஸ்வராலயா குழுவினர் அருமையாக இரு நடனங்களை வழங்கினர். ஆவிதா நரேந்திரன் மற்றும் குழுவினர் ஆடிய பழனிமலை நடனம் கண்ணுக்கு விருந்து. ஒவியன் இளம்பிள்ளை நடனக் குழுவின் நடனம் தேர்ந்த நடனமாக இருந்தது. அஜந்தன், நிலவநிலவன் இருவரும் தேர்ந்த கலை ரசிகர்கள் என்பதை நிரூபித்தனர். லலிதா ராஜேந்தர் குழுவின் நடனம் அழகுக்கு அழகு சேர்த்தது. அதற்கு டாக்டர் ரஷ்மியின் மாணவர்கள் பாடல் பாடினர்.
பாக்யா நடனக் குழுவினரின் பரதநாட்டியம் வெகு அழகு. அடுத்து வந்த கிராமிய நடனம் நம்மை ஒரு கிராமத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது. இடுப்பில் கூடையை வைத்துக் கொண்டு ஆடியது பலரையும் தங்கள் இருக்கையிலேயே ஆட வைத்தது. பின்னர் வந்த கதக் நடனம் மிகச் சிறப்பு. நிகிலாவும் விருதாவும் மிக அழகாக மிருதுவாக ஆரம்பித்தார்கள். கதக்கிற்கே உரிய தாளக்கட்டுடன் உழைத்து ஆடினார்கள். இறுதியில் பாவாடை குடை விரிக்கச் சுற்றி சுழன்றபோது நாமே சுற்ற ஆரம்பித்த ஒரு நிலைக்கு ரசிகர்கள் சென்று விட்டார்கள்.
பிறகு வந்தது நகைச்சுவை நாடகம். ஆதியும் தமிழரசி நாராயணனும் பொறுப்பேற்று அளித்தனர். சிறு நாடகம் பெரிய கருத்துடன் இருந்தது. எல்லோரும் இயல்பாக நடித்தது மிகச்சிறப்பு. அதிலும் மைதிலியின் நடிப்பு உச்சம். ஒவ்வொரு வார்த்தைக்கும் கண்ணாலேயே பதிலளித்தது அபாரம். பண்பட்ட நடிப்பு. மனைவிக்கும் உதவுவது ஆண்மகனின் கடமை என்ற கருத்தை எடுத்துச் சொன்னது நாடகம். பிருஹனும் நுதல்வியனும் அழகாக வயலின் வாசித்தார்கன். பின் தமிழ் ஜாமர்ஸ் அளித்த மெல்லிசை நடைபெற்றது. ரஷ்மி மற்றும் பலர் திறமையைக் காட்டி நன்கு பாடினார்கள். அருமையான விருந்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.
அலமேலு மணி, ஒட்டாவா, கனடா |