விட்டோபா சுவாமிகள்
பல்வேறு மகான்கள், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் அவதார புருஷர்களாய் உதித்து, மணம் வீசிய பூமி பாரதம். அத்தகைய ஞானிகளில் ஒருவர் ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்.

தோற்றம்
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். எங்காவது வெறித்து நோக்கிக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் வாய் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். கை தாளம் போட்டுக் கொண்டிருக்கும். பார்ப்பவர்கள் அவரைப் பைத்தியம் என்றும் மந்தபுத்தி உள்ளவர் என்றும் விமர்சிப்பர். அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல், தன் போக்கிலேயே அவர் வாழ்ந்தார்.

பக்தி
பண்டரீபுர விட்டலன் அவர்கள் குலதெய்வம். அதனால் எப்பொழுதும் 'விட்டோபா விட்டோபா' என்றே தோதி சொல்லிக் கொண்டிருப்பார். அவர் வசித்த சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சுற்றி வருவார். ஏதாவது ஆலயத்தைக் கண்டால் உடனே உள்ளே சென்று உட்கார்ந்து கொள்வார். தன்னை மறந்து வெகுநேரம் தியானத்தில் இருப்பார். ஆலயப் பணியாளர்கள், பூஜை முடிந்து கதவைச் சாத்த வந்தாலும், அது பற்றிய அக்கறையோ கவலையோ இன்றித் தன்னை மறந்த நிலையில் இருப்பார்.

தந்தை கொண்டல்ராவ் மகனின் நிலையை எண்ணி வருந்தினார். தாயற்ற குழந்தையான அவனுக்கு ஏதோ குறை என்று கருதி பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

வெளியேற்றம்
தோதி ஒரு சமயம் கடை வீதியில் சுற்றிவிட்டு அழுக்கு ஆடைகளுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டினுள் அமர்ந்து 'விட்டோபா விட்டோபா' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அவனது சித்திக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. அவன் குளிக்க வேண்டும் என்பதற்காக தலையில் எண்ணெய் வைக்கப் போனாள். தோதியோ அதில் கவனமில்லாது தன்னுள் ஆழ்ந்திருந்தார். அதனால் கோபமுற்ற சித்தி தோதியின் கன்னத்தில் ஓங்கி அறை ஒன்று கொடுத்தாள். 'சீ, ஓடிப் போ' என்று சொல்லித் தள்ளிவிட்டாள்.

அந்தக் கோலத்திலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டார் தோதி. விஷயமறிந்த தந்தை மனம் வருந்தினார். சென்னையின் பல இடங்களிலும் தேடினார். தோதி கிடைக்கவே இல்லை.

பயணம்
வீட்டைவிட்டு வெளியேறிய தோதி, எங்கெங்கோ சுற்றித் திரிந்தார். பின் வாலாஜாவை அடைந்தார். அங்கே சிலகாலம் இருந்தார். பின் வேலூருக்குச் சென்று அங்குச் சில நாட்கள் கடைவீதியில் சுற்றித் திரிந்தார். யாரேனும் உணவளித்தால் சாப்பாடு. இல்லையென்றால் பட்டினி. அப்படியே பல இடங்களுக்கும் கால் நடையாகவே பயணம் செய்து திருவண்ணாமலையை அடைந்தார்.

போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம்



அண்ணாமலையில்...
திருவண்ணாமலைக்குச் சென்ற தோதி கடைவீதியில் சுற்றிக் கொண்டிருப்பதையும், தொடர்ந்து கிரிவலம் வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார். பரட்டைத் தலை, அழுக்கு உடையுடன் இருந்த அவரை அண்ணாமலை வாசிகளும் பைத்தியம் என்றே கருதி விலகிச் சென்றனர். திருவண்ணாமலையில் சில காலம் சுற்றித் திரிந்துவிட்டு, அருகே உள்ள பர்வத மலைக்குச் சென்றார் தோதி. அங்கே யாரும் அறியாமல் தனித்திருந்து சில காலம் தவம் செய்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்றார். பல சித்தர்களின் தரிசனமும் கிடைக்கப் பெற்றார். பின்னர் அடுத்த ஊரான போளூருக்குப் புறப்பட்டார்.

பேசு.. பேசு...
போளூர் செல்லும் வழியில் ஒரு கிராமம் வந்தது. அந்த ஊரில் சென்று தங்கினார். அந்தக் காலகட்டத்திலும் அவர் மௌனமாகவே இருந்தார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். யாராவது உணவு கொடுத்தால் உண்பார். இல்லாவிட்டால் பட்டினிதான். அது கோவிலோ, வீட்டுத் திண்ணையோ, சாக்கடையோ, எந்த விருப்பு, வெறுப்பும் இன்றித் தன்னிச்சையாகத் தங்குவார். அமர்வார். படுத்துக் கொள்வார். யாராவது எதுவும் விசாரித்தாலும் பதில் கூறமாட்டார். மௌனமாகவே இருப்பார்.

அவரது இந்த நிலை அவ்வூரில் உள்ள சில போக்கிரிகளுக்கு வேடிக்கையாக இருந்தது. அவர்கள் தோதியைக் கிண்டல் செய்தனர், சீண்டினர். ஒருநாள்... அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவரைப் பேசுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவரோ எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர்கள் பலமுறை வற்புறுத்தியும் அவர் எதுவும் பேசாததால், அவர்களின் ஒருவன், ஆத்திரத்துடன், 'இப்பொழுது நான் இவரைப் பேச வைக்கிறேன் பார்!' என்று கூறி இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சி வந்து அவரது நாக்கில் சூடு போட்டான். மற்றவனோ குறடால் சுவாமிகளின் இரு தாடைகளையும் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தான். தோதியின் முகத்திலிருந்து ரத்தம் கொட்டியது. வலி பொறுக்காமல், அவர் 'விட்டோபா, விட்டோபா' என்று கதறினார். கண்ணீர் விட்டார். உடனே அந்தப் போக்கிரிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ஆனால்... அவர்கள் செய்த தவறுக்கு ஓரிரு நாட்களிலேயே பலன் கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் திடீரென காலரா நோய் வந்து ஒருவர்பின் ஒருவராகப் பலியாகினர். அவர் ஒரு சித்தர் என்றும், மகத்தான ஆற்றல் பெற்ற அவருக்குத் துன்பம் விளைவித்ததால்தான் போக்கிரிகளுக்கு இந்நிலை ஏற்பட்டது என்பதையும் ஊர் மக்கள் உணர்ந்து கொண்டனர். தோதியைத் தொழுது அவர்களின் அடாத செயலுக்காக தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். அவ்வூரிலேயே வசிக்குமாறும் வேண்டிக் கொண்டனர். அவர் 'விட்டோபா, விட்டோபா' என அரற்றியதால், அவரை அன்றுமுதல் 'விட்டோபா சுவாமிகள்' என்று அழைக்க ஆரம்பித்தனர். அம்மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவ்வூரில் சில காலம் வசித்தார் விட்டோபா சுவாமிகள். பின் போளூருக்குச் சென்றார்.

போளூரில் தவ வாழ்க்கை
போளூரில் செக்கடி மேடு என்ற பகுதியில் விட்டோபா சுவாமிகள் தங்கினார். அது ஊரின் ஒதுக்குப்புறமான இடம். சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும். பன்றிகள் வாழும் அந்தப் பகுதியிலேயே அவர் வசித்தார்.

பசித்தால் ஊரில் ஏதாவது ஒரு வீட்டின்முன் போய் நிற்பார். கையை இரண்டு முறை மெல்லத் தட்டுவார். அவர்கள் அது கண்டு உணவு கொண்டு வந்து அளித்தால் உண்பார். இல்லாவிட்டால் அன்று முழுவதும் பட்டினிதான்.

விட்டோபா சுவாமிகளின் நிலை கண்டு மிகவும் இரக்கப்பட்ட ஒரு பெண்மணி தினமும் யாசகத்திற்காக அவர் வந்தபொழுது, வணங்கி உபசரித்து உணவளித்தாள். அவரும் ஒரு கவளம் உணவு மட்டுமே வாங்கி உண்டுவிட்டு நகர்வார். அவருக்கு உணவளிக்காமல் தான் உண்ணுவதில்லை என்ற உறுதியில் இருந்தாள் அந்தப் பெண்மணி.

கோபுரத்தில் சுவாமிகளின் சிற்பம்



நிற்காதே, போ!
ஒருநாள்.. வழக்கம் போல உணவிற்காக அந்த வீட்டுக்குச் சென்றார் விட்டோபா. அப்பொழுது அந்தப் பெண்மணி ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்ததால் அங்கேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே அந்தப் பெண்ணின் கணவர் வந்தார். அவர் விட்டோபா சுவாமிகளையும், அவரது கோவணம் அணிந்த தோற்றத்தையும் பார்த்து, 'யாரோ பைத்தியக்காரன் போலிருக்கிறது' என்று நினைத்தார். மிகவும் சினத்துடன், தன் கையில் வைத்திருந்த பிரம்பை ஓங்கி, 'போ.. போ.. இங்கே நிற்காதே, போ' என்று கூறித் திட்டித் துரத்திவிட்டார்.

சுவாமிகளும் பதில் ஒன்றும் கூறாமல் உடனே நகர்ந்துவிட்டார். வெளியில் சென்றிருந்த அவரது மனைவி வெகு நேரம் கழித்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நடந்த சம்பவம் அவளுக்குத் தெரியாது என்பதால், விட்டோபா சுவாமிகள் அன்று உணவிற்காக வராதது குறித்து மிகவும் கவலைப்பட்டாள்.

செக்கடி மேட்டுச் சித்தர்
மாலைப் பொழுதும் ஆயிற்று. தன் அலுவலகத்திற்குச் சென்று எழுதுவதற்கு உட்கார்ந்தார் அந்தப் பெண்ணின் கணவர். ஆனால் கை எழுத வரவில்லை. சிறிது நேரத்தில், கை முழுவதும் வலி அதிகமானது. சற்று நேரத்தில் அந்த வலது கை முற்றிலும் உணர்ச்சியற்றுச் செயல்பாட்டை இழந்தது. உடனடியாக ஊர் மருத்துவரிடம் சென்று காண்பித்தார்கள். பலனில்லை. அவரை அவரது வீட்டிற்கு வந்து கிடத்திவிட்டுச் சென்றனர் அவரது நண்பர்கள். செய்தி அறிந்த அவரது மனைவி, கதறினாள். அழுதாள். நன்றாக இருந்த கணவருக்கு திடீரென இவ்வாறு ஏற்பட என்ன காரணம் என்பது புரியாது திகைத்தாள்.

இறுதியில் அந்த மனிதர் நடந்த உண்மைகளைக் கூறினார். 'தான், வீட்டிற்கு வந்த ஒரு பரதேசியை, பிரம்பை ஓங்கித் திட்டி விரட்டி விட்டதாகவும், அதனால்தான் அந்தக் கைக்கு இப்படி ஆகி இருக்குமோ' எனத் தாம் சந்தேகப்படுவதாகவும் கூறினார்.

அப்பொழுதுதான் அந்தப் பெண்மணிக்கு நிலைமை புரிந்தது. வந்தது விட்டோபா சுவாமிகளாகத்தான் இருக்கும், அவருக்குச் செய்த அபராதம்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டாள். உடன் சுவாமிகள் இருக்கும் செக்கடி மேட்டுக்குத் தன் கணவரை அழைத்துக் கொண்டு ஒரு வண்டியில் புறப்பட்டாள்.

விட்டோபா சுவாமிகள் சமாதிக் கோவில்



விட்டோபா சுவாமிகள் சாக்கடை அருகே உட்கார்ந்து கொண்டு, கைத்தாளம் போட்டுக் கொண்டு, ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

அது சாக்கடை என்றும் பாராமல், சுவாமிகளின் காலில் விழுந்தாள் அந்தப் பெண்மணி. தன் கணவர் அறியாது செய்த தவறை மன்னிக்குமாறு விட்டோபா சுவாமிகளிடம் வேண்டினாள். சுவாமிகளும் தலையசைத்தபடி அவளது கணவரின் கையைப் பார்த்தார். 'ஜாவ்... ஜாவ்...' என்றார். பின் தன் பாட்டுக்கு முணுமுணுப்பையும், கைத் தாளத்தையும் தொடர்ந்தார்.

சுவாமிகள் 'ஜாவ்' என்று சொன்ன உடனேயே அந்த நபரின் கைக்கு உணர்வு வந்தது. சிறிது நேரத்தில் கையை அசைக்க முடிந்தது. பின் அது வழக்கம்போலச் செயல்பட்டது. இது கண்டு மகிழ்ந்த கணவன் - மனைவி இருவரும், சுவாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். அவரது அடியவராகினர். அதுமுதல் விட்டோபா சுவாமிகளின் பெருமை ஊர் முழுவதும் பரவிற்று.

'செக்கடி மேடு' என்ற இடத்தில் சித்தர் விட்டோபா சுவாமிகள் இருந்து வந்ததால் அது முதல் அவர் 'செக்கடி மேட்டுச் சித்தர்' என்று பக்தர்களால் அழைக்கப்பட்டார்.

சுவாமிகளின் தவ வாழ்க்கை
தான், தனது என்ற உணர்வுகள் அற்று பிரம்மத்திலேயே லயித்திருந்தார் விட்டோபா சுவாமிகள். அவரது பெருமை அறிந்து பலரும் அவரை நாடி வந்தனர். வணங்கினர். அவருக்கு பழம் போன்றவற்றைப் படைத்தனர். ஆனால் சுவாமிகள் அவற்றைக் கையால்கூடத் தொடமாட்டார். அருகில் உள்ள ஏழைகளுக்கும், மாடு மேய்க்கும் சிறுவர்களுக்குமே அது உணவாயிற்று. யாருமற்ற சமயத்தில் நாய்களும் காக்கைகளும் அவற்றை உட்கொள்ளும். சுவாமிகள் உணவு, உடல் பற்றிய சிந்தனை அற்றவராகவே இருந்தார்.

சித்துக்கள்
சுவாமிகளின் உயர்நிலையை அறிந்த அன்பர்கள், அவர் தங்குவதற்கு எனத் தனியாக ஆசிரமம் ஒன்று அமைத்துத் தந்தனர். சுவாமிகளும் அந்த ஆசிரமத்தில் சென்று தங்கினார். தம்மை நாடி வந்தோரின் பிணிகளைத் தீர்த்து அருள் புரிந்தார். பலர், சுவாமிகள் கையால் திருநீறு பெற்று நோய்நீங்கப் பெற்றனர். சுவாமிகள் சித்தாற்றல்களிலும் வல்லவராக இருந்தார். பல்வேறு சித்துக்களை அவர் நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்த சுப்பராய முதலியாரின் தீராத வயிற்றுவலியை நீக்கினார். ஒரு பெண்ணுக்கு இருந்த தீராத மேகநோயை நீக்கினார். புரோகிதர் ஒருவரது மனைவியின் மரணத்தை முன்கூட்டியே அவருக்கு உணர்த்தி, அவர் ஞான வைராக்கிய நிலையை அடையச் செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 25 வருடங்கள் போளூரில் இருந்தவாறே பல்வேறு அற்புதச் செயல்களை விட்டோபா சுவாமிகள் நிகழ்த்தினார்.



சமாதி
பொது சகாப்தம் 1910ல், ஐப்பசி மாதமும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் சுவாமிகள் மகாசமாதி ஆனார். அவர் சமாதி ஆன அதே சமயம், திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் சேஷாத்ரி சுவாமிகள், விடியற்காலை வேளையில் திடீரென வானத்தைப் பார்த்தவாறே 'இதோ விட்டோபா போறான், விட்டோபா போறான்... ஜோராப் போறான்' என்று சொல்லிக்கொண்டே, சிவகங்கைக் குளம் வரை சிறிது தொலைவு தொடர்ந்து ஓடினார். அதனைப் பார்த்த மக்கள் அனைவரும், 'இவர் ஏதோ உளறுகிறார்' என்று நினைத்தனர். சில மணி நேரத்திற்குப் பின், 'போளூரில் விட்டோபா சுவாமிகள் மறைந்து விட்டார்' என்ற செய்தி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தது. சேஷாத்ரி சுவாமிகள் முன்னரே அது குறித்துச் சொன்ன அதிசயத்தை நினைத்து மக்கள் ஆச்சரியமுற்றனர்.

விட்டோபா சுவாமிகளின் உடல் திருமந்திர முறைப்படி அமர்ந்த நிலையிலேயே சமாதி செய்விக்கப்பட்டது. சிறு சிவலிங்கமும் சமாதி மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவரது குருபூஜை ஆராதனை ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் நடக்கிறது.

சமாதி அமைவிடம்
திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ள போளூரில், கடைவீதி மற்றும் மார்க்கெட்டுக்கு அருகில் விட்டோபா சுவாமிகளின் சமாதி ஆலயம் அமைந்துள்ளது.

பா.சு. ரமணன்

© TamilOnline.com