க. பூரணச்சந்திரன்
க. பூரணச்சந்திரன் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர். இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், விமர்சகர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். மார்க்சீய நோக்கில் பல திறனாய்வுகளை மேற்கொண்டவர். நவீன நாடக வளர்ச்சிக்காகப் பல பணிகளை முன்னெடுத்தவர். வேலூர் மாவட்டத்தின் ஆர்க்காட்டில், 1949 மே 14ஆம் நாளன்று பிறந்தார். திமிரியில் பள்ளிப் படிப்பை முடித்தார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். படிக்கும்போதே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டங்கள் பெற்றார். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபா நடத்திய பிரவீண் (வித்துவான்) தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'தமிழ்ப் பொழில்' இலக்கிய ஆய்விதழைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். கர்நாடக இசை கற்றவர்.

அவரது மாணவி பேரா. அரங்கமல்லிகா கவுரவிக்கிறார்



பள்ளி ஒன்றில் சில ஆண்டுகள் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிய பூரணச்சந்திரன், பின் திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரியில் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 2007-ல் பணி ஓய்வு பெற்றார். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். மனைவி சு. செல்வநாயகி. பிள்ளைகள்: செவ்வேள் (மகன்); சிந்தனா (மகள்)

க. பூரணச்சந்திரன், இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். ஆர்க்காட்டில் இருந்த 'தலைமைத் தமிழ் வளர்ச்சி மன்றம்' என்ற அமைப்பில் சேர்ந்து கவிதைகள் வாசித்தார். உள்ளூர் நூலகத்தில் கிடைத்த 'காஞ்சி', 'மன்றம்', 'திராவிடநாடு' போன்ற இதழ்கள் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தன. கல்கி, மு.வ., சாண்டில்யனின் படைப்புகள் இவரைக் கவர்ந்தன. சார்லஸ் டிக்கன்ஸின் 'ஆலிவர் டுவிஸ்ட்', ஹார்டியின், 'Tess of the D'Urbervilles' போன்ற நாவல்கள் ஆங்கில இலக்கிய உலகத்தை இவரது கண்முன் விரித்தன. திருச்சியில் செயல்பட்டு வந்த 'சினிஃபோரம் ' என்ற அமைப்பில் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் செயலாற்றினார். அதன்மூலம் உலகத் திரைப்பட அறிமுகத்தைப் பெற்றார். திருச்சி 'வாசகர் வட்டம்' மூலம் பல இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார்.



திருச்சியில் செயல்பட்டு வந்த 'திருச்சி நாடக சங்கம்' மூலம் பூரணச்சந்திரனுக்கு பல்வேறு அனுபவங்களும் அறிமுகங்களும் கிடைத்தன. 'பாதல் சர்க்கார் நாடக விழா' ஒன்றை 'திருச்சி நாடக சங்கம்' மூலம் பொறுப்பேற்று நடத்தினார். ஆறு நாடகக் குழுக்களைக் கொண்டு பாதல் சர்க்காரின் ஆறு நாடகங்களை அரங்கேற்றினார். பரீக்‌ஷா ஞானி, மு. ராமசாமி, சே. இராமானுஜம் போன்றோர் மூலம் நாடகங்கள் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தார். 'நிகழ்', 'காலச்சுவடு', 'தமிழ் நேயம்' போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய முதல் நூல் 'பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை' என்பது. தமிழ், ஆங்கிலம், இந்தி நன்கு அறிந்திருந்த பூரணச்சந்திரன், 1982 முதல் மொழிபெயர்ப்புகளில் ஈடுபட ஆரம்பித்தார். முதல் மொழிபெயர்ப்பு நூல் '365 நாட்களில் குழந்தையின் வளர்ச்சி' என்ற மருத்துவ நூல். தொடர்ந்து இலக்கியம் மற்றும் இலக்கியமல்லாத பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தான் மொழிபெயர்க்கும் நூல், இலக்கியமோ, இலக்கியமல்லாததோ எதுவாயினும், சமூகப்பயன் உள்ளதாகவோ, சமூகச் சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவோ இருக்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்.

விருதுகள்
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ஆனந்தவிகடன் விருது - ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் 'சிறைப்பட்ட கற்பனைகள்' நூலை மொழிபெயர்த்ததற்காக. (2011)

சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது - சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நூலை மொழிபெயர்த்தற்காக. (2015)

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ஆனந்தவிகடன் விருது - வெண்டி டோனிகரின் 'இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு' நூலைத் தமிழில் தந்ததற்காக. (2016)

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது - மனு ஜோசப்பின் 'Serious Men' நூலை 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக. (2016)

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தி.சு. நடராசன் அறக்கட்டளை வழங்கிய 'திறனாய்வுச் செம்மல்' விருது. (2018)

'நல்லி - திசை எட்டும்' மொழியாக்க விருது (2018)


பூரணச்சந்திரன், முப்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது, 'சல்மான் ருஷ்டி'யின், 'நள்ளிரவின் குழந்தைகள்' என்னும் நூல். 1983-ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இலக்கிய விமர்சன வரலாறு' என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார். தொடர்ந்து மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தும், மார்க்சீய நோக்கிலும் பல திறனாய்வு நூல்களை எழுதினார். 'தமிழ் இலக்கியத்தில் மேற்கத்திய கொள்கைகளின் தாக்கம்', 'இரண்டாயிரத்திற்குப் பின் இந்திய இலக்கியம்', 'நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்', 'இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்' போன்றவை இவரது ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தகுந்தவை. 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாறு' என்ற நூலும் முக்கியமானது. நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்.



க. பூரணச்சந்திரன், ஆரம்பத்தில் கவிதைகள் எழுதியிருந்தாலும் சிறுகதை, புதினம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டவில்லை. இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தே இயங்கினார். தனது மொழிபெயர்ப்பு மூலம் பல புதிய கலைச்சொற்களை உருவாக்கினார். 'பின்னூட்டம்' என்ற சொல் பூரணச்சந்திரன் உருவாக்கியதுதான். கத்தோலிக்கத் திருச்சபை அமைப்பு, இலக்கியப் பரிச்சயத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கில் பல ஊர்களில் நடத்திய 'எழுத்துப்பட்டறை' நிகழ்வில் கலந்துகொண்டு, கவிதை, சிறுகதை, புதினம், நாடகங்கள் பற்றி வகுப்பெடுத்தார். தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரியில் மாணவர்களுக்கு 'வெகுஜனத் தொடர்பியல்' என்பதுபற்றி வகுப்பெடுத்தார். பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல மாணவர்கள் இவரை வழிகாட்டியாகக் கொண்டு இளமுனைவர் (M.Phil) மற்றும் முனைவர் (Ph.d) பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

பணி ஓய்வுக்குப் பின் க. பூரணச்சந்திரன், தன் பெயரில் நிறுவப்பட்டுள்ள, 'பூரணச்சந்திரன் அறக்கட்டளை' மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, இலக்கியத் திறனாய்வு போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்:
பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை
அமைப்பியமும் பின்னமைப்பியமும்
செய்தித்தொடர்பியல் கொள்கைகள்
கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும்
இந்திய மொழிகள்-ஓர் அறிமுகம்
தமிழ் இலக்கியத்தில் மேற்கத்திய கொள்கைகளின் தாக்கம்
நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
கவிதையியல்
கதையியல்
பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்
தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு: 1900 முதல் 1980 வரை

மொழிபெயர்ப்புகள்:
குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
கீழையியல் தத்துவம்
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
உலகம் வெப்பமயமாதல்
நீட்சே
உலகமயமாக்கல்
நொறுங்கிய குடியரசு
இறையியல்
இசை
பயங்கரவாதம்
சமூகவியல்
பொறுப்புமிக்க மனிதர்கள்
பின்நவீனத்துவம்
காந்தியைக் கொன்றவர்கள்
நள்ளிரவின் குழந்தைகள்
நில அமைப்பும் தமிழ் கவிதையும்
விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
சிறைப்பட்ட கற்பனைகள் (வரவர ராவ்)
ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
புவி வெப்பமயமாதல்
டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்
பேற்றுச் செவிலியர் கையேடு
தலைமுடி இழப்பு மருத்துவம்
மூல வியாதி
ஐம்பது உடல்நலக் குறிப்புகள்
இயற்கை ஞானம்
மரபணு மாற்றிய உணவுகள்
மேயோ கிளினிக்

பதிப்பித்த நூல்கள்
கலைக்கோட்பாடு
உரசல்கள்
அமுதம்
வெள்ளிமணிகள்
நாற்றுகள்
தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும்


அரவிந்த்

© TamilOnline.com