ஆடவர் விளையாட்டாகவே கருதப்பட்டு வந்த கிரிக்கெட்டை மகளிரும் சிறப்பாக விளையாடத் தொடங்கி, உலக அளவில் இந்திய மகளிர் அணி வெற்றிகளைக் குவித்து வந்தது. இதன் மகுடமாக 2023 ஜனவரி மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) மகளிர் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரை அறிவித்துள்ளமை வரவேற்கத் தக்கது. T20 வடிவத்தில் தொடர் சுழல்முறையில் (round robin) கோப்பையைக் கைப்பற்றுவதற்காக ஐந்து அணிகள் பங்கேற்று இதில் ஆடவுள்ளன. ஸ்பான்சர், ஒளிபரப்பாளர் மற்றும் உரிமைதாரர்களாக பைஜூஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மாஸ்டர் கார்டு எனப் பெரிய நிறுவனங்கள் மகளிர் ப்ரீமியர் லீகை முன்னெடுத்துச் செல்வதற்குக் கரம் நீட்டியுள்ளன. இந்தியாவிலும் உலக அளவிலும் மகளிர் கிரிக்கெட் இதனால் பெரிய ஊக்கமும் தர மேம்பாடும் பெறுவதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெருமளவில் வெல்ல வாய்ப்புள்ளது. தென்றல் இதனை வரவேற்கிறது.
★★★★★
2023-24 பட்ஜெட்டைச் சமர்ப்பித்த பிறகு, பாரதத்தின் மிகச்சிறந்த நிதியமைச்சர் தமிழரான நிர்மலா சீதாராமன்தான் எனச் சத்தியம் செய்யப் பலர் தயாராகி விட்டனர். நிதியைக் கையாள்வதில் கட்டுப்பாடு, பொருளாதாரச் சமநிலை இவற்றைக் குறி வைக்கும் அதே நேரத்தில், மூலதனச் செலவை (Capital Expenditure) 10 லட்சம் கோடி ரூபாயாக 33% அதிகரித்திருப்பதும், பற்றாக்குறையை 6.4 சதவிகிதத்திலிருந்து, 5.9 சதவிகிதமாகக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதும் உண்மையிலேயே கத்திமேல் நடக்கும் சாகசம்தான். வந்தே பாரத் போன்ற அதிவிரைவு சொகுசு ரயில்கள் பலவற்றை அறிமுகப் படுத்தியுள்ள நிலையில் ரயில்வே துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தனிநபர் வருமானத்தில் 5 லட்சம் ரூபாய் வரிவிலக்கு என்றிருந்ததை 7 லட்சமாக உயர்த்தி இருப்பதும் மிக முக்கியம். வரிக்கு உட்பட்ட வருமானம் (taxable income) ரூ. 5-10 லட்சம் இருந்தால் அதற்கு 20% வரி என்று இருந்ததை ரூ 9-12 லட்சத்துக்கே 15% ஆகவும், பிற படிநிலைகளிலும் குறைத்திருப்பது இந்தப் பணவீக்கச் சூழலில் நடுத்தர வர்க்கம் பெறுகிற பெரிய நிவாரணம் ஆகும். நிறைய எழுதலாம். இது ஒரு சாதனை பட்ஜெட் என்று சொல்லி நிறுத்திக் கொள்வோம். பாராட்டுவோம்.
★★★★★
சிற்பம், ஓவியம் என்று படைப்புலகில் பெயர் பெற்றுத் திகழும் என்.எஸ். சபாபதி அவர்களின் மாய உலகினுள் உங்களைத் தென்றல் அழைத்துச் செல்கிறது. எல்லோரும் ChatGPT பற்றியே பேசுகிறார்களே என்று நாம் போய் அந்தச் செயற்கை நுண்மதிக் கருவியிடம் ஒரு 'சுய அறிமுகம்' கேட்டோம், அதற்கு இசைந்து நம்மிடம் அது பேசியது. அலமாரியில் நீங்கள் 'மட்டப்பாறை சிங்கத்தைச்' சந்திக்கப் போகிறீர்கள். வள்ளிமலை முருகனையும் போளூர் விட்டோபா சுவாமிகளையும் தரிசிக்கப் போகிறீர்கள். 'சோமாலியப் பூனைகள்' சிறுகதை உங்களைத் தவிப்பில் ஆழ்த்தும். இதோ உயர்கிறது திரைச்சீலை. நுழையுங்கள் 'தென்றல்' வீசும் சோலையில்.
வாசகர்களுக்குத் தைப்பூசம், மஹா சிவராத்திரி வாழ்த்துகள்!
தென்றல் பிப்ரவரி 2023 |