இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழியாக்கம் செய்யப்படும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. 1989 முதல் இவ்விருது அளிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய 'யாத்வஷேம்' நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
மைசூரில் பிறந்த நல்லதம்பி, தனியார் நிறுவனம் ஒன்றில் அகில இந்திய மேலாளராக முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். இவரது காஞ்சன சீதை, கப்பரை, காச்சர் கோச்சர், மொட்டு விரியும் சத்தம் போன்ற தமிழ் மொழியாக்கங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சங்கக் கவிதைகள் சிலவற்றைக் கன்னட எழுத்தாளர் திருமதி. லலிதா சித்தபசவய்யாவுடன் இணைந்து கன்னடத்தில் பெயர்த்துள்ளார். சிறுகதைகள் எழுதியுள்ளார்.
'யாத்வேஷம்' நாவலை விருதுக்குரிய நாவலாக, ஆர். மணவாளன், பேராசிரியர் வி. ஜெயதேவன், டாக்டர் டி. விஷ்ணுகுமாரன் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. விருது செப்புப் பட்டயமும், சால்வையும், ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது.
கே. நல்லதம்பிக்குத் தென்றலின் வாழ்த்துக்கள். |