போஜராஜனின் அரசவையில் இருந்த காளிதாசனை, அவனது திறமையில் பொறாமை கொண்ட மூத்த கவிஞர்களும் பண்டிதர்களும் அவமதித்தனர். அவனது வறுமையே அவனை மட்டமாகப் பார்க்கப் போதுமான காரணமாக இருந்தது. குளம் நிரம்பி இருந்தால் அதைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு தவளைகள் கத்தும். அது வற்றிப் போனால் ஒரு தவளையும் அங்கே வராது. மூத்தவர்கள் அவனைப் பற்றி அவதூறு பரப்பி அவனை அரசவையில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.
பொறாமையும் கர்வமும் இல்லாத ஒரே நபரைக் காளிதாசன் அறிவான் - அது காளிமாதா தான். அவன் காளி கோவிலுக்குச் சென்று, தனக்குக் கவிஞர்களிடையே உயர்ந்த இடத்தைக் கொடுக்குமாறு அன்னையிடம் பிரார்த்தனை செய்தான். நெடுநேரம் பிரார்த்தனை செய்தபின், கருவறையில் இருந்து ஒரு குரல் கேட்டது. தண்டி, பவபூதி ஆகியோரைச் சிறந்த மேதைகள் மற்றும் பண்டிதர்கள் என்று அது புகழ்ந்தது. காளிதாசனின் திறமை குறித்து அது ஏதும் கூறவில்லை! இது அவனைப் புண்படுத்திச் சினமடையச் செய்தது. அவன் தனது கோபத்தைக் கடுமையான சொற்களால் வெளிப்படுத்தி, எத்தனை கசப்பானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்லவேண்டும் என்று காளியை வற்புறுத்தினான்.
அந்தக் குரல் "த்வமேவாஹம், த்வமேவாஹம், த்வமேவாஹம் ந சம்சயஹ" (நீயே நான், நீயே நான், நீயே நான், சந்தேகமில்லை) என்று அறிவித்தது. இதைவிடப் பெரிய அந்தஸ்து காளிதாசனுக்கு வேறென்ன வேண்டும்? ஒவ்வொரு சாதகனும் இந்த விடையையே பெறுவான்; இதுவே சத்தியம், இதுவே எதார்த்தம், அவனுக்கான பரிசு, இறுதிநிலை.
காளிதாசன் மிகத் திறமையான கவிஞன் என்பதையும், அவன் தனது எதிரிகளின் திட்டங்களைத் தனது தந்திரத்தால் தோற்கடித்தான் என்பதையும் விவரிக்கும் கதைகள் பல உண்டு. ஆனால் அவனது பக்தி அவனது யுக்தியைவிட (சாமர்த்தியத்தைவிட) மிகவும் பெரியது.
நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2022
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |