வடுகு
சென்னையிலிருந்து கிளம்பியது முதல் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை அழைப்பு வந்துகொண்டேயிருக்க, எதையும் தவிர்க்காமல் பேசியபடியே வந்துகொண்டிருந்தேன்.

அனைத்து அழைப்புகளிலும், "இப்ப எங்கப்பா வந்துருக்க?" என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது. நானும் சலிக்காமல், "தாம்பரம் தாண்டிட்டேன்", "மதுராந்தகம் வந்துருக்கேன்", "இப்ப திண்டிவனம்" என்றபடியே காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன்.

விழுப்புரத்தைக் கடந்தபொழுது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லும்மா."

"மருது, பாத்து ஜாக்கிரதையா வாப்பா. சீக்கிரம் வரணும்னு வெரட்டிகிட்டு வராத. எப்புடியிருந்தாலும் நாளைக்கிதான் எடுக்கப் போறோம். பொறுமையாவே வா. யாராச்சும் ஃபோன் பண்ணினா வண்டி ஓட்டிகிட்டே எடுக்காத. அப்பறம் பேசிக்கலாம்," சொல்லிவிட்டு மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் அம்மா.

"சரிம்மா"

தாத்தா முத்துவடுகு சிவலோக பதவி அடைந்ததை அறிந்ததும் அறையில் அமர்ந்து கட்டுப்பாடிழந்து அழுது தீர்த்துவிட்டு, தாமதிக்காமல் சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டிருந்தேன். உடனடியாகக் கிளம்பச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லைதான். ஆனால் அவர்தான் எனது உயிராயிற்றே? விஷயம் கேள்விப்பட்ட பிறகு எப்படி பச்சைத்தண்ணீர் இறங்கும்? கிளம்பிவிட்டேன்.

எனது அன்பு அம்மாவைப் பெற்றவர் அவர்.

எனக்கோ... மிகச்சிறந்த நண்பன், வழிகாட்டி, குரு, பொழுதுபோக்கு இன்னும் எல்லாமுமாக இருந்தவர். இப்பொழுதும் கண்கள் அணை கட்டுகின்றன. கண்களைத் துடைத்துக்கொண்ட படியேதான் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

'வயசாயிருச்சு', 'எந்தக் குறையும் இல்லாம வாழ்ந்து முடிச்சுட்டாரு', 'கஷ்டப்படாம போயிட்டாரு' என்ற வார்த்தைகளுடனே தாத்தாவின் மறைவை மற்றவர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடக் கூடும். சிலமணி நேரமோ அல்லது சில மணித்துளிகளோ கவலைதோய்ந்த முகத்தை வைத்துக் கொண்டிருந்துவிட்டு பின்னர் கறிவிருந்துக்கு அனைவரும் தயாராகி விடுவார்கள் என்பது தெரியும்.

ஆனால், எனக்கு சத்தியமாக சாத்தியமில்லை. இந்த இழப்பிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள எத்தனை மாதங்களாகும் என்பது தெரியவில்லை. அம்மாவையும் அப்பாவையும்விட நான் மிக அதிகமாக நேசித்த ஒரு ஜீவன் வடுகு தாத்தா. அதனை வெறும் நேசிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.

பள்ளிக்குச் செல்ல மறுத்து மற்ற குழந்தைகள் அடம்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், என்னை எப்பொழுது பள்ளிக்கு அனுப்புவீர்கள் என்று அடம்பிடிக்க வைத்தவர் தாத்தா. ஒன்றரை வயது குழந்தை மனதிற்குள் அழகாய்ப் புகுந்து பள்ளிக்குச் செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டு, கையில் கிடைத்த பைகளை எல்லாம் மாட்டிக்கொண்டு 'டாட்டா.. ஸ்கூலுக்கு போறேன்' என உளறவைத்தவர் அவர்.

'உன்னைப்போல நிறைய குட்டி ராஜாக்கள் நிறைந்த ஒரு மிகப்பெரிய மாயாஜாலக் கட்டிடம் பள்ளிக்கூடம். அங்கு போய்விட்டால் வீட்டுக்கு வரவே உனக்கு இஷ்டமில்லாமல் போகும்' என ஆரம்பித்தவர், எனக்குள் பள்ளியைப் பற்றி மிகப்பெரிய கனவை, ஆவலை உண்டாக்கி வைத்திருந்தார்.

பள்ளிக்கு என்னை அழைத்துச் செல்வதையும் அழைத்து வருவதையும் தன் வாழ்க்கையின் மிக முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்.

மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது வழிநெடுகிலும் வகுப்பில் நடந்த கதைகளை மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே வர, ஒன்றுவிடாமல் காதுகொடுத்துக் கேட்பார். எல்லா விவரிப்புக்கும் இன்னொரு குழந்தைபோல் நான் எதிர்பார்க்கும் அத்தனை முகபாவனைகளையும் கொடுத்து என்னை மகிழ்விப்பார். அன்றாடம் அவரிடம் சொல்வதற்கு என்னிடமும் விஷயங்கள் இருந்துகொண்டே இருந்தன.

ஆனா ஆவன்னாவும் ஏபிசிடிகளும் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்டது குறைவுதான். வீட்டில் தாத்தாவின் தினசரி மாலை வகுப்பே எனக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்தது. அவரிடமே அதிகம் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். எனது மகிழ்ச்சிக்காக அக்கம்பக்கத்தில் எனக்குப் பிடித்த சிறுவர்கள் இரண்டு மூன்று பேரையும் டியூஷன்போல் சேர்த்துக்கொண்டார்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஒழுக்கங்களையும் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பதில் தாத்தாவிற்கு நிகர் அவரேதான். தன்னை வளர்த்தது போலவே தனது குழந்தையையும் அவர் நெறிப்படுத்துவதில் அம்மாவுக்கு அளவுகடந்த பூரிப்பு.



வகுப்புகள் மேலே செல்லச் செல்ல, கல்வி, அறிவு, கீழ்ப்படிதல் போன்றவற்றோடு நல்ல முதிர்ச்சியையும் பெற்று, எல்லா ஆசிரியர்களுக்கும் ரொம்பப் பிடித்தவனாகிப் போனேன்.

படித்த நேரம் போக மீதி நேரங்களில் என்னை தெருவில் இறங்கி விளையாட அனுமதித்தார். டயர், பம்பரம், கோலி என எந்த விளையாட்டுக்கும் தடை போட்டதில்லை. எனது பார்வைக்கு எட்டாத ஏதோவோர் இடத்திலிருந்து என்னைக் கண்காணித்தபடி பத்திரமாகவும் சுதந்திரமாகவும் விளையாட வைத்திருந்தார். பட்டம் விடுவதற்கு மட்டும் சற்று தூரத்திலிருந்த பள்ளி மைதானத்திற்கு அழைத்துச் செல்வார். நூலில் விழும் சிக்கலையெல்லாம் பொறுமையாக எடுத்துக் கொடுப்பார்.

கடைக்குச் செல்லும்பொழுது உடன் அழைத்துச் செல்வார். பார்த்ததையெல்லாம் கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் என்னிடம் இல்லாத காரணத்தால், பொருட்களை வாங்கி முடித்ததும் அவராகவே கடலை மிட்டாய் அல்லது சாப்பிட உகந்த ஏதாவதொரு தின்பண்டத்தை வாங்கித் தருவார்.

தாத்தாவின் வளர்ப்பு, தெருவில் பலரிடமிருந்தும் பொறாமையைக் கொண்டுவந்து சேர்த்தது. 'அந்த மருதுப்பய பெரிய மனுஷன் மாதிரி பேசறான், நல்லா படிக்கறான். நம்ம வீட்லயும் ஒண்ணு இருக்கே, எதுக்கும் லாயக்கில்லாம!' என்பது போன்ற அங்கலாய்ப்பு அடிக்கடி அவர்களிடம் மேலோங்கும். வாரம் தவறாமல் நடுவீட்டில் உட்கார வைத்து மிளகாயும் உப்பும் சேர்த்துச் சுற்றி அடுப்பில் போடுவாள் அம்மா. வெடியைப் போல் அப்படித் தெறிக்கும்.

விபரம் தெரிய ஆரம்பித்த வேளையில் நல்லது கெட்டதுகளை தெளிவாகப் பிரித்தறியும் பக்குவத்திற்கு என்னைப் பழக்கி, அனைத்தையும் பசுமரத்து ஆணிபோல் பதிய வைத்திருந்தார்.

'அந்த ஜெனரேஷன்லாம் போயிருச்சுப்பா. இப்ப இருக்கறதுங்கள்லாம்..' என்ற வழக்கமான புலம்பல்களுக்கு விதிவிலக்காக என்னை வளர்த்தெடுத்திருந்தார் வடுகு தாத்தா. அவரது வளர்ப்பு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே எனக்குச் சிக்கலாக இருந்தது. அது, அலுவலகம்.

நான் சரியாக இருப்பதும், அடுத்தவர்கள் சரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் மேலிருந்து கீழிருப்பவர்வரை யாவரையும் முகம் சுளிக்க வைத்தது. 'ஒண்ணாம் நம்பர் பெருசுப்பா அவன். ஓவரா டார்ச்சர் பண்றான்' என்ற வார்த்தைகள் எனக்குப் பின்னால் ஒலித்துக் கொண்டிருந்தன. அதைப்பற்றி என்றைக்கும் நான் கவலைப் பட்டதில்லை. 'நேர்மையை நெனைச்சு கர்வத்தோட இரு. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாத' என்ற தாத்தாவின் வார்த்தைகளை நானே நினைத்தாலும் என்னைவிட்டு வெளியேற்ற முடியாது என்பதைப் புரிந்து வைத்திருந்தேன்.

நேற்று காலையில் நான் அழைத்த பொழுதுகூட தாத்தா நன்றாகவே பேசினார். என்னைப் பிரியப்போகும் எந்த அறிகுறியும் தென்படவில்லை. கொலஸ்ட்ரால் குறித்தும் தேவையற்ற இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பது குறித்தும் அண்மையில் அவர் கண்ட காணொலி ஒன்றைக் குறித்து அளவளாவினார். என்னை எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளச் சொன்னார்.

வடுகு தாத்தா என்னை வளர்த்ததைக் கண்டு எனது தாய் பூரித்ததுபோல் எனக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்பியிருந்தேன். அது இப்படியொரு பேராசையாக, நிராசையாகப் போகுமென்று நினைக்கவில்லை.

வடுகு தாத்தா முதியவரல்ல. மனித உணர்வுகளை முழுதாக உள்வாங்கிக்கொண்ட, எல்லா காலங்களிலும் எல்லோருடனும் இயைந்து வாழ்க்கை நடத்தத் தெரிந்திருந்த, முதிர்ச்சியடைந்த ஓர் இளைஞர். எந்தத் தலைமுறையோடும் பயணிக்க முடிந்தது அவரால். எதையும் பயிற்றுவிக்காமல், தன்னை வேடிக்கை பார்ப்பதன் மூலமே வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள வைக்கும் தனித்துவமான நபராகவே வலம் வந்துகொண்டிருந்தார் அவர்.

குடும்ப உறவுகளுக்குள் குறைகாணாத மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அந்த அபூர்வமான மனிதர்களில் வடுகு தாத்தாவே முதன்மையானவராகத் தெரிந்தார் எனக்கு.

இன்றளவும் என் தாயிடமோ தந்தையிடமோ அவர் எந்தக் குறையையும் கண்டதில்லை அல்லது எதையும் கூறியதில்லை.

அவ்வாறே அம்மாவும் அப்பாவும் தாத்தாவின்மீது கொண்டிருந்த மரியாதைக்கும் அளவில்லாமல் இருந்தது. தாத்தாவுக்கான வசதிகளாகட்டும், அல்லது அவர்களது பொதுவான செயல்பாடுகளாகட்டும், அவர் வாய் திறந்து எதையும் கேட்குமளவிற்கோ பேசுமளவிற்கோ வைத்துக்கொண்டதில்லை அவர்கள். பொக்கிஷம்போல் பார்த்துக்கொண்டார்கள்.

முதுமை என்பது அன்பு, அரவணைப்பு, அனுபவம் போன்றவற்றின் மொத்த வெளிப்பாடு என்பதையும், எவரையும் எதிர்பார்க்காமல் வாழப் பழகிவிட்டால் எவர்மீதும் கோபமோ வெறுப்போ தோன்றாது என்பதையும் தனது நடுத்தர வயதிலேயே நன்றாகச் சிந்தித்து உணர்ந்திருந்தார் வடுகு தாத்தா.

முதுமை தன்னை மரணத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக என்றைக்கும் அவர் அஞ்சியதில்லை. வாழ்ந்து முடித்துவிட்ட சலிப்புகளையோ, இயலாமையின் வெளிப்பாடுகளையோ என்றைக்கும் எவரும் அவரிடம் கண்டதில்லை. ஒவ்வொரு விடியலும் அவருக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது. தளர்வை அவர் உணர்ந்ததில்லை.

நடைமுறை வாழ்க்கையையும் யதார்த்த வாழ்வையும் நன்றாகப் புரிந்து வைத்திருந்த அவரது முகத்தில் இப்பொழுதும் நிச்சயமாக அமைதியே நிறைந்திருக்கும். உறக்கத்திலேயே காற்றில் கலந்திருக்கிறார். தனது அமைதியான உறக்கம் நீடிப்பதாகவே நினைத்துக்கொண்டு படுத்திருப்பார்.

கண்ணாடிப் பெட்டிக்குள் அசைவற்றிருக்கும் வடுகு தாத்தாவைப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு எனக்குள் சக்தி இருக்குமென்பதுதான் தெரியவில்லை. கூடியவரை அவரைப் பார்த்து அழாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். காரணம், எனக்கு விபரம் தெரிந்து நான் அழுது அவர் பார்த்ததில்லை.

மீண்டும் ஃபோன் ஒலிக்கிறது. அப்பாதான்.

"நெருங்கிட்டேம்ப்பா.."

சந்துரு மாணிக்கவாசகம்,
சென்னை

© TamilOnline.com