கேப்டன் லக்ஷ்மி சேகல்
நேதாஜியின் 'ஜான்சி ராணி பெண்கள் படை'யின் முதல் கேப்டன்; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் என்பது உள்பட பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கேப்டன் லக்ஷ்மி. இவர் அக்டோபர் 24, 1914 அன்று சென்னையில், சுவாமிநாதன் - ஏ.வி. அம்முக்குட்டி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சுவாமிநாதன் வெளிநாட்டில் சட்டம் பயின்றவர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர். தாயார் அம்முக்குட்டி சமூகசேவகி. காங்கிரஸ் இயக்க ஆதரவாளர். சுதந்திரப் போராட்ட வீரர். இருவரது அரவணைப்பில் வளர்ந்த லக்ஷ்மிக்கு இளவயதில் இருந்தே சமூகசேவை மீதும் தேச விடுதலை மீதும் தணியாத ஆர்வம்.

ஒருநாள் தாயார் அம்முக்குட்டி, லக்ஷ்மியின் அறைக்குள் புகுந்து அவருடைய துணிகளை எல்லாம் எடுத்து தெருவில் போட்டுக் கொளுத்தினார். லக்ஷ்மிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பின்னர்தான் அது 'சுதேசி இயக்கம்' காரணமாகச் செய்யப்பட்டது என்பதும், அந்நியப் பொருள்களைப் புறக்கணித்து நம்முடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்வது அதன் முக்கியக் கொள்கை என்பதும் அவருக்குத் தெரியவந்தன. அதுமுதல் தானும் அந்நியப் பொருள்களைப் புறக்கணித்து வாழ ஆரம்பித்தார்.

கல்வி
தொடக்கக் கல்வியை மிஷனரி பள்ளியில் பயின்ற லக்ஷ்மி, உயர் கல்விக்கு லேடி வெலிங்டன் கல்லூரி சென்றார். பின்னர் ராணி மேரி கல்லூரியில் இடைநிலைக் கல்வி பயின்றார். மருத்துவர் ஆகும் என்ற விருப்பத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1938ல் டாக்டர் படிப்பை நிறைவு செய்தார் லக்ஷ்மி. சென்னையின் புகழ்பெற்ற கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். சிறந்த மருத்துவர் என்ற நற்பெயர் பெற்றார். ஆனாலும் அவர் உள்ளத்தில் சுதந்திரக் கனல் தகித்துக் கொண்டிருந்தது.

நேதாஜி அருகே கேப்டன் லக்ஷ்மி



சிங்கப்பூரில் மருத்துவ சேவை
மருத்துவப் பணி தொடர்பாக 1940ல் சிங்கப்பூருக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தார். 1942-ல் நடந்த பிரிட்டிஷ் - ஜப்பான் போரில், காயம்பட்ட வீரர்களுக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளித்து வந்தார். அங்குதான் அவருக்கு நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் (இந்திய தேசியப் படை) பணியாற்றிய வீரர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களது செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன.

சுபாஷுடன் சந்திப்பு
இந்நிலையில் சிங்கப்பூருக்கு வந்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை லக்ஷ்மி சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு லக்ஷ்மியின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது. ஏற்கனவே இருந்த தேசப்பற்று, சமூக ஆர்வம், உதவும் மனப்பான்மைக்கு சரியான களமாக இந்திய தேசியப்படை (ஐ.என்.ஏ) இருக்கும் என முடிவுசெய்த லக்ஷ்மி, இந்திய தேசியப் படையில் இணைந்தார்.

கேப்டன் லக்ஷ்மி
பெண்களாலேயே நடத்தப்படும் ஒரு தனிப் பிரிவைத் தொடங்கும் எண்ணத்தில் இருந்தார் நேதாஜி. பல்வேறு திறமைகளும் துணிச்சலும் கொண்டிருந்த லக்ஷ்மியையே அதன் கேப்டனாக நியமித்தார். லக்ஷ்மி, கேப்டன் லக்ஷ்மி ஆனார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் லக்ஷ்மியின் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றிணைந்தனர்.

சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் சிலகாலப் பயிற்சிக்குப் பின் கேப்டன் லக்ஷ்மியின் தலைமையிலான படை நேரடியாகக் களத்தில் இறங்கியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மணிப்பூர் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய தேசியப்படை முன்னேறியது. ஆனால் தொடர்ந்து பெய்த மழை மற்றும் உணவு, தளவாடப் பற்றாக்குறையால் இவர்களது படைகள் நாளடைவில் பின்வாங்கின.

கேப்டன் லக்ஷ்மி இளம்பருவத்தில்



கைதும் விடுதலையும்
பிரிட்டிஷ் அரசு கேப்டன் லக்ஷ்மி உள்ளிட்ட போராளிகளைக் கைது செய்தது. விசாரணைக்காக போர்க் கைதிகளாக ரங்கூனுக்குக் கொண்டு சென்றது. அங்கு லக்ஷ்மி வீட்டுச் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணைகளுக்குப் பின் 1946ல் கேப்டன் லக்ஷ்மியை பிரிட்டிஷ் அரசு விடுதலை செய்தது.

திருமணம்
அதன்பின் இந்தியா திரும்பிய லக்ஷ்மி, தனது சமூக, மருத்துவப் பணிகளைத் தொடர்ந்தார். தன்னுடன் ஐ.என்.ஏ.வில் கர்னலாகப் பணியாற்றிய பிரேம் குமார் சேகல் என்பவரை, 1947ல் திருமணம் செய்துகொண்டார். கணவருடன் கான்பூரில் தங்கித் தனது மருத்துவச் சேவையைத் தொடர்ந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தார். சமூகப் பணிகளையும் தொடர்ந்து செய்தார்.

சமூகப் பணிகள்
லக்ஷ்மி சேகலுக்கு கம்யூனிஸ்ட் போராளியும், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரியுமான சுஹாசினி நம்பியார் மூலம் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து படித்த பல புத்தகங்களின் தாக்கத்தால் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டார். பங்களாதேஷ் பிரச்சனையால் கல்கத்தாவில் பங்களாதேஷிகள் அகதிகளாக வந்து தங்கியபோது அவர்களுக்கு மருத்துவ சேவையுடன் உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க லக்ஷ்மி உழைத்தார். அது போல போபால் விஷவாயுக் கசிவின் போதும் லக்ஷ்மி அங்கு சென்று மருத்துவ முகாம்களை அமைத்து உதவினார்.

கணவர் பிரேம் குமார் சேகல்



அரசியல் பணிகள்
லக்ஷ்மி ராஜ்ய சபா உறுப்பினராகவும் சில வருடங்கள் பணியாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவரது தன்னலமற்ற தேச சேவைக்காக இந்திய அரசு 1998-ல் இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது. 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து லக்ஷ்மி சேகல் போட்டியிட்டார். தனது வாழ்க்கை அனுபவங்களை, 'புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.

மறைவு
இறுதிக்காலம் வரை சமூக விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் உழைத்த லக்ஷ்மி, ஜூலை 23, 2012 அன்று, கான்பூரில் காலமானார். இவரது உடல் கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அவரது கண்கள் பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்தப்பட்டன.

தமிழர்கள் மறக்கக்கூடாத தமிழ்ப் பெண் போராளி கேப்டன் லக்ஷ்மி சேகல்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com