இந்த வருடம் நன்றியறிதல் நாள் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
கலிஃபோர்னியா மாநிலம் பள்ளதாக்குக்கும் பாலைவனத்துக்கும் இடையில் இருக்கிறதென்றால், நெவடா மாநிலம் சியரா நெவடா மலைத்தொடர்களை ஒட்டி இருக்கின்றது. போகும் வழியெல்லாம் பாலைவனச் சோலைகள், புதுப்புது வடிவங்களில் குன்றுகள், மலைகள்.
சாதாரணமாக மலை முழுவதும் காய்ந்த புற்கள் படர்ந்து வைக்கோல் போர்வை போர்த்தியது போலத் தோன்றும். வசந்த காலத்தில் மலையின் நிறமே பசுமை ஆகிவிடும். இப்போது இலையுதிர் காலம். சில மரங்கள் இலைகளின்றிப் பனி உடையை உடுத்தி இருந்தன. சில மலைகளில் ஆங்காங்கே வட்டப் புள்ளிகள் போலப் புதர்கள் தழைத்திருக்க, மாம்பழக் கலரிலே புட்டா போட்ட, கோபுர அடுக்கு பார்டர் கொண்ட பட்டுப் புடவை என் நினைவுக்கு வந்தது.
நவம்பர் 24 காலை 5 மணிக்கு சான் டியகோவில் இருந்து புறப்பட்டோம். ஆங்காங்கு ஓய்வுப் பகுதிகளில் இளைப்பாறியபடி 7 மணி நேரம் பயணித்தோம். போகும் வழியில் இருந்த ஏரியின் அழகிலே மயங்கினோம். இறங்கிச் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். இறுதியாக மேமத் ஏரியை (Mmmoth Lakes) அடைந்தோம். சாமான்களை நாங்கள் தங்கவிருந்த குடிலில் இறக்கி வைத்துவிட்டு, சூடாக டீ போட்டு ஃப்ளாஸ்க்கில் எடுத்துக்கொண்டு 2 மணி அளவில் ஏரியின் அழகை ரசிக்கச் சென்றோம்.
பனி பொழிந்து பஞ்சுப் பொதியாகப் படர்ந்திருந்தது. சில இடங்களில் ஏரிநீரும் லேசாகப் பனியில் உறைந்து இருந்தது. குளிர் காலமானதால் மலைப் பகுதிகளில் மாலை நேரத்திலேயே இருள் கவிந்தது. ஆள் நடமாட்டமே இல்லை.
அடடா, என்ன அழகு! வளைந்து நெளிந்து போகும் பாதை. இயற்கையில்தான் எத்தனை வண்ண ஜாலங்கள்! பனி இல்லாத மார்கழியா? வழியெங்கும் ஓங்கி உயந்த மர வகைகள். .பனி பெய்து மலையெங்கும் வெள்ளைப் போர்வை! "மண்ணும் நீரும் எரியும் நல்வாயுவும் விண்ணுமாய் விரியும் எம்பிரான்" என்றல்லவா நம்மாழ்வார் இறைவனையே வர்ணிக்கிறார்?
உயரம் அதிகம் இருக்குமிடத்தில் ஆர்ப்பாட்டம் இருப்பதில்லை. சில வருட வாழ்க்கை, ஒரே ஒரு வெற்றிக்கே உயர உயரக் குதிக்கும் மனிதர்களுக்கு அருகில் மலைகள் மௌனமாக உயர்ந்து நிற்கின்றன. எத்தனையோ நூற்றாண்டுகளாக நின்றும், எது நடந்தபோதும், நம் முப்பாட்டனுக்கு முப்பாட்டனைப் பார்த்த மலை அப்படியே நின்று கொண்டிருக்கிறது. சரிதானே? ஏரியின் அழகைச் சொல்ல வார்த்தையே இல்லை! மாலை 5 மணிக்கே இருட்டிவிடவே, தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினோம்.
நவம்பர் 25. அதிகாலையில் சூரியோதயத்தின் அழகைக் காண கான்விக்ட் லேக் (Convict lake) சென்றோம். மெய்மறந்து நின்று ரசித்தோம். பார்க்கப் பார்க்க சலிக்காத அழகு! அருவி, மலை, சலசலக்கும் நீரோடை. திரும்பிப் போய் சமைத்துச் சாப்பிட்டோம்.
மீண்டும் ஃப்ளாஸ்க்கில் டீ தயாரித்து எடுத்துக்கொண்டு காரில் கிளம்பினோம். வழியில் ஓர் இடத்தில் வெந்நீர் ஊற்றைப் பார்த்தோம். அருகில் செல்லத் தடை இருந்ததால், தள்ளி நின்றே புகைப்படம் எடுத்தோம். பின்னர் மோனோ ஏரியை அடைந்தோம். அதிகம் நீர் இல்லாவிட்டாலும் உப்புப் படலங்களை ஏரியின் ஓரத்தில் காண முடிந்தது. மோனோ ஏரி கலிஃபோர்னியாவின் மிகப் பழமையான அமெரிக்க ஏரிகளில் ஒன்று. இதை 'பயங்கரமானது' என்று வர்ணித்தாலும் தவறில்லை. காரணம் இதுதான்: ஆவியாதல் காரணமாக ஏரி நீரின் அளவு குறைகிறது. அதில் நதிநீர் எதுவும் வந்து சேருவதில்லை. இந்த அடர்ந்த நீரில் சிலவகை உப்புநீர் இறால் மீன்கள், ஈக்கள் மற்றும் ஆல்கா ஆகியவை மட்டுமே வாழ்கின்றன. இந்த நீரின் நச்சுத்தன்மை பருவம், ஆழம் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதால் தள்ளி இருந்துதான் இதை ரசிக்கலாம்.
இங்கிருந்து 2 மணி நேரம்தான் டாஹோ ஏரி (Lake Tahoe). அங்கும் சென்று பார்க்கலாமே என்று நினைத்துக் கிளம்பியது எவ்வளவு அசட்டுத் துணிச்சல்! நிறையச் சவாலான கொண்டை ஊசி வளைவுகள்! அவற்றைச் சமாளித்து எமரால்டு ஏரியை அடைந்தோம். அழகோ அழகு!
மெல்ல மெல்ல மாலை 4.30க்கு இருள் கவியத் தொடங்கியது .. கொஞ்சம் பயம் கவ்வியது. தெரியாத ஊரில், இருட்டில் அதுவும் மலைப்பகுதியில் கார் ஓட்டுவது அசட்டுத் தைரியம் அல்லவா! மேலும் கும்மிருட்டு, ஆள் நடமாட்டமே இல்லை. முன்னும் பின்னும் வாகனங்களும் அவ்வளவாக இல்லை. மலைச் சாலையில் சில இடங்களில் தடுப்புகள்கூடக் கிடையாது. படு ஜாக்கிரதையாக, கூகுள் ஆண்டவரின் வழிகாட்டலில் சென்று சேர்ந்தோம்.
நவம்ப 26 அதிகாலை. மீண்டும் கான்விக்ட் ஏரியை நோக்கிப் படையெடுக்க எண்ணிக் கிளம்பினோம். பனி கண்ணைக் கட்டியது. கிளம்பவே தோன்றவில்லை. மீண்டும் தங்குமிடம் போய்க் குளித்து, சுடச்சுட மிளகுக் குழம்பு, சுரைக்காய் கூட்டு, ஜீரக ரசம் செய்து ரசித்துச் சாப்பிட்டோம். 11 மணிக்குக் கிளம்பினால் போகுமிடம் எல்லாம் பனிப்பொழிவு எங்களைத் துரத்தவே, வெறுத்துப் போய் மீண்டும் தங்குமிடம் திரும்பினோம். மறுநாள் கிளம்ப வேண்டும். சாமான்களைக் கட்டி வைத்தோம்.
நவம்பர் 27. காலை 10 மணி வாக்கில் கிளம்பி ஊரைப் பார்த்துப் பயணித்தோம். சில்வர் லேக், ஜூன் லேக் வழியில் தரிசனம். மறக்க முடியாத 3 நாட்கள், பறந்தே போய்விட்டன!
அகிலா கோபால், சான் டியகோ, கலிஃபோர்னியா
மேலும் படங்கள்
|