எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்
மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ வழிகாட்ட மகான்கள், யோகிகள், ஞானிகள், சித்தர்களின் அவதாரங்கள் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட மகா சித்தர்களுள் ஒருவர்தான் எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள். பெயருக்கேற்றவாறு இவர் மானுடர்களின் எச்சிக்கலையும் போக்கக் கூடியவர்.

தோற்றம்
இவர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியான ஈரோட்டின் அருகே உள்ள 'துடுப்பதி' என்னும் ஊரில் பிறந்தவர். இயற்பெயர் முத்துகிருஷ்ணன். இளவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாய் வாழ்ந்தார். இந்தியா முழுமையும் சுற்றினார். வயிற்றுப் பிழைப்பிற்காக சமையல் உதவியாள் தொடங்கி, ஏவலாளர் வரை பல்வேறு பணிகளைச் செய்த போதிலும், எதிலும் மனம் தோயவில்லை.

ஆன்மிகப் பயணம்
ஆகவே, காசி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற பகுதிகளுக்குப் பயணித்தார். சாதுக்களை தரிசனம் செய்தார். அவர்களோடு தங்கி உதவியாளராகப் பணியாற்றினார். இமயமலை வாழ் சாது ஒருவரால் இவருக்கு பல்வேறு சித்துக்கள் கைவந்தன. ஆயினும் மனம் அமைதியுறவில்லை. வாழ்க்கையின் பரம சத்தியத்தைத் தேடி யாத்திரையைத் தொடர்ந்தார்.



குரு தீட்சை
முத்துகிருஷ்ணன், பம்பாய்க்குச் சென்றார். உணவு உடைக்காக உழைத்துச் சாப்பிட்டு வந்தார். ஓய்வு நேரத்தில் ஆலயங்களுக்குச் செல்வதும், தனித்திருந்து தியானிப்பதும் வழக்கமாயின. இந்நிலையில் பம்பாய் கணேஷ்புரியில் வசித்துவந்த ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள், முத்துக்கிருஷ்ணனின் உண்மைத் தேடலையும், ஆன்ம பரிபக்குவத்தையும் உணர்ந்து கொண்டார். குரு உபதேசம் செய்து, தனது சீடர் ஆக்கிக்கொண்டார். முத்துக்கிருஷ்ணன், 'ஆறுமுக சுவாமிகள்' ஆனார். வாழ்வின் உயர் உண்மைகள் அவருக்கு குருவால் உணர்த்தப்பட்டன.

பல ஆண்டுக் காலம் குருவுடன் தங்கியிருந்து ஆன்ம சாதனைகளைத் தொடர்ந்த ஆறுமுக சுவாமிகள், ஒரு கட்டத்தில் குருவிடமிருந்து விடைபெற்றார். நாடெங்கிலும் அலைந்து திரிந்தார். இறுதியில் தமிழ்நாட்டை அடைந்தார். திருவண்ணாமலை உட்படப் பல இடங்களுக்குச் சென்றார். பல மலைக்குகைகளில் தவம் செய்தார்.

சித்தரும் மஹாபெரியவரும்
இப்படிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள், ஒருசமயம் மயிலாடுதுறைக்கு வந்தார். அப்போது அங்கு ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர் திக்விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரை அன்பர்கள் பூர்ண கும்ப மரியாதையோடு ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்ரீ ஆறுமுக சுவாமிகளும் அவர்களின் கூட்டத்தில் இணைந்தார். இடுப்பில் சிறிய துண்டுடனும் வெற்று மார்புடனும் அவர் அந்தக் கூட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதைப் பார்த்த அங்குள்ளவர்களின் சிலர், அவரைப் பைத்தியம் என்றும், பரதேசி என்றும் நினைத்தனர். அக்கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறு விரட்டினர். உடனே சுவாமிகளும் பெரியவரைப் பின்தொடராமல் அங்கேயே ஒதுங்கி நின்றுவிட்டார்.

காஞ்சிப் பெரியவர் உடனே அங்கேயே நின்று, அந்த அன்பர்களை நோக்கி, "அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், அவர் யாரென்பதும், எதற்காக நம்கூட வந்து கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?" எனக் கண்டித்துவிட்டு, சித்தரிடம் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். ஆறுமுக சித்தரோ எதுவுமே நடக்காததுபோல் சிரித்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார்.



விராலிமலைச் சித்தர்
பல இடங்களிலும் அலைந்து திரிந்த சுவாமிகள் விராலிமலைக்குச் சென்றார். அந்த மலைப்பகுதியில் இருந்த குகையை வாழ்விடமாகக் கொண்டார். ஏற்கனவே தனது தவம் மூலம் மூத்த தேவி மற்றும் வராஹியின் அருள் பெற்றிருந்த சுவாமிகள், முருக உபாசனை செய்து அருள் பெற்றார். தனது குகையில் வேல் ஒன்றை நட்டு வழிபட்டு வந்தார்.

நெடுநெடுவென உயரம். முழங்கால்வரை நீண்ட கைகள். மெல்லிய தேகம். முகத்தில் புரளும் தாடி. ஒளிவீசும் கண்கள். அரைகுறையான கிழிந்த பச்சைநிற ஆடை என விராலிமலைப் பக்கத்தில் வலம்வந்த சித்தரை, ஆரம்பத்தில் அப்பகுதி மக்கள் பலரும் பித்தர் என்றே கருதினர். ஆனால், தான் பார்க்கும் நபர்களில், தகுதியுள்ள ஒரு சிலரிடம் மட்டும், அவர்கள் வாழ்வில் நடந்த, வரப்போகிற நிகழ்வுகள் சிலவற்றைக் கூறி எச்சரித்தார் சுவாமிகள். அவர்களுக்கு அறிவுரை கூறினார். சுவாமிகள் கூறிய விஷயங்கள் அப்படியே பலிக்க ஆரம்பித்ததால், சுவாமிகள் ஓர் அவதார புருடர் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். குகையை நாடிவந்து வணங்கினர்.

சுவாமிகளைக் கண்டு வணங்கிச் செல்பவர்களின் வாழ்வினிலே மகத்தான மாற்றங்களும் ஏற்றங்களும் தொடர்ந்து ஏற்படவே, அவரைக் காணக் கூட்டம் பெருகிற்று. பல்வேறு மூலிகைகளையும் அதன் ரகசியங்களையும் பற்றி நன்கு அறிந்திருந்த ஆறுமுக சுவாமிகள், அதனைக் கொண்டு பலரது நோய்களை நீக்கினார். அதனால் மக்கள் அவரை அன்புடனும் பக்தியுடன் 'விராலிமலைச் சித்தர்' என்று போற்றி வழிபட்டனர்.

ஆலயத் திருப்பணிகள்
சுவாமிகள் தன்னை நாடி வந்த பக்தர்களைக் கொண்டு விராலிமலை ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். பல்வேறு அறப்பணிகளைச் செய்ய அவர்களைத் தூண்டினார்.

எச்சிக்கலும் போக்கி
சுவாமிகள் எங்கு, எப்போழுது வெளியே சென்றாலும், சில நாய்கள் அவரைச் சுற்றிக் கொண்டே இருக்கும். மனிதர்களின் கர்மவினையை மாற்றும் மகத்தான ஆற்றல் கொண்டிருந்த சுவாமிகள், தம்மை நாடி வருவோரைப் பற்றிய விவரங்களை தமது ஞான திருஷ்டியால் முன்னரே அறிந்து கொண்டு, அவர்களுக்கு அருள் புரிவார். அதே சமயம் கயவர்களையும், தீயவர்களையும் தம் அருகே வரவிடாமல் திட்டி விரட்டி விடுவார். அடியவர்களின் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள் நிகழ்த்தியுள்ளார்.

மனிதர்களின் எச்சிக்கலையும் போக்கும் மகத்தான சக்தி கொண்ட இம்மகானை மக்கள் அன்போடு 'எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்' என்று அன்போடு அழைத்தனர். ஆனால், நாளடைவில் இது மருவி, 'எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சுவாமிகள்' என்று வழங்கப்படுவதாயிற்று.



கோட்டையூர்
தம்மை நாடி வந்த பலருக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்த ஆறுமுக சுவாமிகள் தனவணிகர் குடும்பத்தைச் சேர்ந்த சிலரை ஆட்கொண்டார். அவர்கள் சுவாமிகளின் ஆலோசனைப்படி தங்கள் வாழ்க்கையை நடத்தி உயர்ந்தனர். இந்நிலையில், தன் வாழ்வின் இறுதிநாள் நெருங்குவதை அறிந்தார் சுவாமிகள். தனது சமாதி வைக்கப்படுவதற்கான நிலத்தையும் தாமே தேர்ந்தெடுத்தார்.

கோட்டையூர். காரைக்குடி அருகே உள்ள ஓர் ஊர். தன வணிகர்கள் (நகரத்தார்), கோட்டையைப் போன்ற பெரிய பெரிய வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்ததால் இப்பெயர் பெற்றது. 'சொற்கேட்ட விநாயகர்' என பெருமையுடன் அழைக்கப்படும் மிகுந்த வரப் பிரசாதியான 'சொக்கட்டான் விநாயகர்' இவ்வூரில்தான் அமைந்திருக்கிறார். இவ்வூரையே தனக்கான சமாதித் தலமாகத் தேர்ந்தெடுத்தார் சுவாமிகள்.

ஆவ்வூரை ஒட்டியுள்ள அழகாபுரிப் பகுதியை அடுத்த சக்திநகர் என்ற இடத்தில் தனக்குச் சமாதி அமைக்க வேண்டும் என்றும், அதற்கான குழியும் அங்கே அமைந்திருக்கும் என்றும் அடியவர்களிடம் கூறினார். அடியவர்கள் அவ்வாறே அப்பகுதிக்குச் சென்று பார்க்க அதேபோன்று அக்குழி அமைந்திருப்பதைக் கண்டனர். சுவாமிகளின் ஆணைப்படி சமாதி செய்விக்க அந்நிலத்தை விலைக்கு வாங்க முற்பட்டனர்.

ஆனால் அதன் உரிமையாளர்கள் அதனை விற்கச் சம்மதிக்கவில்லை. பலமுறை எடுத்துக் கூறியும் உரிமையாளர்கள் பிடிவாதமாக இருந்தனர். அடியவர்கள் சுவாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறினர்.

சுவாமிகள் அவர்களிடம், "இப்பொழுது சென்று அந்நிலத்தைக் கேளுங்கள். கொடுத்து விடுவார்கள், என் சமாதி அங்குதான் எழுப்பப்பட வேண்டும். வரும் வைகாசி விசாக தினத்தன்று நான் சமாதி அடைந்து விடுவேன். ஆனாலும், அதன் பிறகு என்னை நாடி வருபவர்களின் அனைத்துச் சிக்கல்களையும் போக்கி அவர்கள் வாழ்வில் நன்மை விளையச் செய்வேன். நான் மறைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு இப்பகுதி பொலிவடையும். சீரும் சிறப்பும் மிக்க அழகிய நகராகவும் உருவாகும்" என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார்.

மீண்டும் சென்று அடியவர்கள் உரிமையாளரிடம் நிலத்தைக் கேட்டனர். சித்தரின் ஆசிபெற்றுச் சென்றதால் அந்த அருள் வேலை செய்தது. அதியசப்படும் வகையில் நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை விற்கச் சம்மதித்தார்.



மகாசமாதி
ஆறுமுக சுவாமிகள் தாம் கூறியவாறே முருகனுக்கு மிகவும் உகந்த தினமான வைகாசி விசாகத்தன்று, (மே 18, 1981) பௌர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர நாளில் மகாசமாதி அடைந்தார்.

சமாதி அமைவிடம்
புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது கோட்டையூர். அவ்வூரில்தான் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் சமாதி ஆலயம் அமைந்துள்ளது. கோட்டையூர் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்குப் பின்புறம், அழகாபுரி-சக்திநகர் பாதையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது. தினந்தோறும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில் குருபூஜை மிகச்சிறப்பாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு சாது வழிபாடு நடக்கிறது. அன்று இங்கு வந்து இரவில் தங்குவதும், அன்னதானம், இனிப்பு வகைகளைத் தானம் செய்வதும் அளவற்ற நற்பலனைத் தருகிறது.

எச்சிக்கலும் போக்கும் சித்தர் ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள் திருவடிகளே சரணம்!

பா.சு. ரமணன்

© TamilOnline.com