ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி
"மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது, "அன்பு மகனே, நான் தினமும் பூஜை செய்துவிட்டு, எல்லோருக்கும் நைவேத்யத்தை விநியோகிப்பேன். நானும் அம்மாவும் இல்லாதபோது, நீயும் அப்படியே செய்யவேண்டும்" என்று கூறினார். நிச்சயம் அப்படியே செய்வதாகச் சங்கரர் வாக்களித்தார். ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, தேவியின் முன்னர் வைத்து, "தாயே, நான் படைக்கும் இதனை ஏற்றுக்கொள்" என்று பிரார்த்தித்தார். வெகுநேரம் வேண்டியபோதிலும் அன்னை வரவில்லை, பாலைப் பருகவும் இல்லை. அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.

அவர் மீண்டும், "அம்மா, அம்மா! என் தந்தை தினமும் படைக்கும் பாலை நீங்கள் ஏற்கிறீர்கள். நான் நிவேதனம் செய்வதை நீங்கள் ஏற்கவில்லை, என் கைகள் என்ன பாவம் செய்தன?" என்று கேட்டார். இதயத்தின் ஆழத்தில் இருந்து அவர் பிரார்த்தனை செய்தார். அவர் உயிரையும் தியாகம் செய்யத் தயாரானார். "என் தந்தை இந்தப் பாலை தேவிக்கு நிவேதனம் செய்யச் சொன்னார். ஆனால் அவள் இதை ஏற்காத காரணத்தால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் இறப்பதே மேல்" என்று அவர் தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். அவர் வெளியே சென்று தன்னை மாய்த்துக்கொள்ள ஒரு பெரிய கல்லை எடுத்து வந்தார்.

ஜகன்மாதா மிகவும் கருணை மிக்கவள். சங்கரரின் சிரத்தையைப் பார்த்து நெகிழ்ந்து போனாள். அவள் பாலை எடுத்து முழுவதும் குடித்துவிட்டு, காலிக் கிண்ணத்தை அவர்முன் வைத்தாள். ஜகன்மாதா அந்தப் பாலைக் குடித்ததில் அவருக்கு மிகவும் சந்தோஷம், ஆனால் கிண்ணத்தில் எதுவும் மிச்சம் இருக்கவில்லை.

தந்தை திரும்பி வந்ததும் நைவேத்யப் பால் எங்கே என்று கேட்பார் எனச் சங்கரர் நினைத்தார். எல்லாப் பாலையும் தானே குடித்துவிட்டதாகத் தந்தை நினைத்து கோபப்படக் கூடும் என்று அஞ்சினார். எனவே தேவியிடம், "அம்மா, குறைந்தது ஒரு துளிப் பாலாவது கொடு, அப்போதுதான் நான் என் தந்தைக்கு அதைக் கொடுக்க முடியும்" என்று வேண்டினார். தேவி வரவில்லை. அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிரார்த்தனை செய்தார்.

மனம் உருகிய அன்னை அங்கே தோன்றினாள். ஆனால் தான் பருகிய பாலைத் தரமுடியாததால் அவள் தனது பாலினால் கிண்ணத்தை நிரப்பினாள். அந்த தெய்வீகப் பாலைச் சுவைத்த காரணத்தால், சங்கரர் மிகவுயர்ந்த ஞானத்தை அடைந்தார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆக, தேவியின் கருணா ரசம், சங்கரரின் கல்விச் சாரம் ஆனது. தந்தையை மகிழ்விக்கச் சங்கரர் மிகக் கடுமையாக முயற்சித்த காரணத்தால் அவரால் தன்முன் ஜகன்மாதாவையே தோன்றவைக்க முடிந்தது. தந்தையாரின் கட்டளைக்குச் சிறிதும் பிசகாமலும் சிரத்தையோடும் கீழ்ப்படிய வேண்டுமென்பதை இந்தக் கதையில் இருந்து நாம் கற்க வேண்டும்.

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2022

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com