காணப்படாத நிச்சயங்கள்!
தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான்.

மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள் ஒன்றையொன்று நேசமாய்க் கூப்பிடும் சத்தமும், மென் தென்றல் காற்றும் அவனை மெதுவாகத் தாலாட்டியது.

இயற்கையின் இந்த ஆர்ப்பாட்டமில்லாத அபரிமிதமான அன்பில் அமிழ்ந்து, இத்தனை அழகாய் இத்தருணத்தை சமைத்த இறையை எண்ணி அவன் கண்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தன. அவன் உதடு மெதுவாகப் பாடியது" "என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்."

தாவீது அன்பானவன், பிரியமானவன், செல்லமானவன் என்றெல்லாம் அவன் தாயால் அருமையாக நேசிக்கப்படுபவன். ரூத் மகராசியின் பேரன். ஜெஸ்ஸியின் எட்டாவது சின்னப் பிள்ளை. ஓங்கு தாங்காக உயரமாக அவன் அண்ணமார்கள் இருக்க, ஒல்லியாக, கொஞ்சம் குள்ளமாக இஸ்ரவேல் படைகளுக்கு எந்தவிதத்திலும் ஒத்துவராத உடற்பாங்கின் காரணமாக, வீட்டிலேயே அம்மாவுக்கு ஒத்தாசையாகக் காரியங்களைக் கவனித்து வந்தான்.

அன்று காலையில் நிகழ்ந்ததையும், தனக்குள் ஒளிந்திருந்த பராக்கிரமத்தை வெளிக்கொணர்ந்த அந்த நிகழ்ச்சியின் அற்புதத்தையும் எண்ணி வியந்தபடி யோசனையில் கிடந்தான்.

ஆம், அன்றும் வழமைபோல ஆடுகளை மேய்த்தபடி வந்தவன் எல்லா ஆடுகளும் கண் பார்வையில் படும்படியான ஒரு நிழல்படிந்த குன்றின்கீழ் உட்கார்ந்துகொண்டு தானாகவே பாடல்களை இட்டுக்கட்டி பாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு இறையின்பால் ஓர் அலாதிப் பிரியம். அவன் பூட்டி ரூத், அவன் மூதாதையர்கள் நகோமி, ராகாப் கதைகளை அவன் தாய் தானியங்களைப் புடைக்கும்போதும், உடைக்கும்போதும் சொல்ல சொல்லக் கேட்டு, கடவுளைத் தன் நண்பனாக, பரோபகாரியாக, பாதுகாவலனாக, தலைவனாக மனதில் வரித்துப் பாடுவது அவன் வழக்கம்.

அப்படித் தன்னை மறந்து பாடிக் கொண்டிருக்கையில் ஓர் அமானுஷ்ய அமைதியையும், ஆடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ஒரே திக்கில் நகர்வதையும் கவனித்தான். ஏதோ ஆபத்தை அவை உணர்ந்திருப்பதையும் கண்டான்.

ஒரு மெல்லிய உறுமல் தாவீதின் இடப்புறத்தில் ஒலிக்க, அங்கே கர்ஜித்தபடி ஒரு சிங்கம். அதைக் கண்ட கணப் பொழுதில் தாவீது சிங்கத்தின்மேல் பாய்ந்து அதன் பிடரியைப் பற்றி அதன் கழுத்தில் ஏறினான். தடுமாறிய மிருகம் அவனை உதறத் தலையை இங்கும் அங்கும் அதிவேகமாக ஆட்ட, அவன் விரல்களைச் சிங்கத்தின் கண்களுக்கு இறக்கி அதைப் பறித்தெறிந்தான். அந்த எதிர்பாராத தாக்குதலில் சிங்கம் நிலைகுலைய இடுப்பில் ஆடுகளுக்கு மரக்கொப்பிலிருந்து இலைகளைப் பறித்துப் போடக் கொண்டுவந்த குறுவாளை அதன் நடுமண்டையில் முழுபலம் கொண்டு இறக்கினான். அத்தோடு சுருண்டு விழுந்து உருண்டோடி இறந்தது சிங்கம்.

தாவீதோ ஒரு சின்ன சிராய்ப்பும் இல்லாமல் தப்பியதை எண்ணி கடவுளின் கருணைக்கு நன்றி பாராட்டி இன்று தாயிடம் கதை சொல்ல, சுர மண்டலத்தில் பாட்டிசைக்க ஒரு காரியம் வாய்த்தது என எண்ணிக் கொண்டான். போனமுறை கரடியைக் கொன்ற கதையைச் சொன்னபோதே குலைநடுங்கிப் போனாள் அன்னை. இரவெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்லித் துதித்தாள், இன்று சிங்கத்தைப் பற்றிச் சொன்னால் என்ன செய்வாளோ என எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

முதிர்ந்த தந்தை ஜெஸ்ஸிக்கு தாவீதின் மேல் அத்தனை அபிப்பிராயம் இல்லை. அதைப்பற்றி தாவீதும் வருந்தவில்லை. தனக்கு இடப்பட்ட பணியைக் கருத்தாகச் செய்வதில்தான் அவன் கவனம்.

இப்படியாக அரசன் சவுல், யூதா (அன்றைய இஸ்ரவேல்) நாட்டை ஆண்டபொழுது, பெலிஸ்தியர்கள் படை கொண்டுவந்து யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஏலாவில் முகாமிட்டிருந்தனர். தாவீதின் மூன்று அண்ணன்மார்களான எலியாப், அபினதாப், சம்மா ஆகியோர் அரசன் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். பெலிஸ்தியர்கள் ஒரு மலையின் மேலும் அதை அடுத்த மலையில் இஸ்ரவேலர்களும் இருந்தனர். இம் மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கு இருந்தது.

பெலிஸ்தியர்கள் அனைவரும் இயற்கையிலேயே ஆஜானுபாகுவான உடற்கட்டைப் பெற்றவர்கள். முரட்டுக் குணம் வாய்த்தவர்கள். அப்படிப்பட்ட பெலிஸ்தியரின் படையில் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் 9 அடி உயரமானவன். வெண்கலக் கிரீடமும், போர்க்கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாய் இருந்தது அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது.

தினந்தோறும் அவன் வெளியே வந்து இஸ்ரவேல் படையினரைப் பார்த்து, உரத்த குரலில், "உங்களுடைய எல்லா வீரர்களும் போருக்குத் தயாராக ஏன் அணிவகுத்து நிற்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் வீரர்களா? இல்லை சவுலின் வேலைக்காரர்கள!" என இடிஇடியென நகைப்பான்.

"நானோ பெலிஸ்தன்! உங்களில் யாரேனும் ஒருவனைத் தேர்ந்தெடுத்து என்னோடு சண்டையிட அனுப்புங்கள். அவன் என்னைக் கொன்றுவிட்டால் பெலிஸ்தியர்கள் அனைவரும் உங்களது அடிமைகள். நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமைகள்! நீங்கள் எங்களுக்குச் சேவை செய்ய வேண்டும்" என்று சவால் விடுவான்.

சவுலும் அவனது வீரர்களுமோ கோலியாத்துடன் நேருக்குநேர் சண்டையிடப் பயந்து நடுங்கினார்கள். இவ்வாறு கோலியாத் இஸ்ரவேல் சேனையைக் கேலி செய்தபடி 40 நாட்கள் கடந்தன.

ஒருநாள் ஜெஸ்ஸி தாவீதிடம், "உன் சகோதரர்கள் ஏலா பள்ளத்தாக்கில் சவுலின் சேனையில் பெலிஸ்தியருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். கூடையில் வறுத்த பயிரையும், அப்பங்களையும் கொண்டுபோய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்குக் கொடு. இந்த பாலாடைக் கட்டிகளையும் கொண்டுபோய் உன் சகோதரர் குழுவின் தளபதியிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார்த்து வா. அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா!" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.



தாவீதும் தந்தையின் சொல்லைச் சிரமேற்கொண்டு அதிகாலையில் ஜெஸ்ஸி சொன்னபடி உணவை எடுத்துக்கொண்டு முகாமுக்குப் புறப்பட்டான். தாவீது வந்து சேர்ந்தபோது இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் தங்கள் போர் முழக்கங்களை எழுப்பி, அணிவகுத்து அன்றைய போருக்குத் தயாரானார்கள்.

தாவீது தான் கொண்டுபோனதைப் பொருட் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். அவர்களைக் கண்டுபிடித்து ஆவலோடு பேச ஆரம்பித்த பொழுது கோலியாத், பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலி பேசினான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டது மாத்திரமல்லாமல் இஸ்ரவேலர் படையினர் அவனைக் கண்டு பயந்து நடுங்குவதையும் கண்டான்.

அவர்கள் "கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும் மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் அரசன் அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தை அளிப்பான்" என்றார்கள்.

தாவீதோ வீரர்களிடம், "அவன் என்ன சொல்வது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தைக் களைபவனுக்கு விருது என்ன வேண்டிக் கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராக பேச அவன் எப்படி துணியலாம்?" என்று கேட்டான்.

தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, "நீ இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்குச் சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. சும்மா யுத்தத்தை வேடிக்கை பார்க்கத்தானே நீ இங்கு வந்தாய்!" என்று தம்பியைப் பார்த்துக் கத்தினான்.

எலியாப் மட்டுமல்ல தாவீதின் மற்ற அண்ணன்மார்களுக்கும் அவன்மீது கோபம்தான். அதற்கு ஒரு சில நாட்கள் முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் காரணம்.

இஸ்ரவேலர்களால் மிகவும் மதிக்கப்படும் தீர்க்கதரிசியான சாமுவேல் பெத்லேகேமிற்கு வந்த போது ஜெஸ்ஸி குடும்பத்தை ஆசிர்வதிக்க வந்தவர் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு எல்லாருக்கும் இளையவனான தாவீதைத் தான் தேடினார். ஆடு மேய்க்கப் போயிருந்தவனை ஆள் அனுப்பி வரச்செய்து, எண்ணையினால் அவன் தலையை அபிஷேகித்து விசேஷமாய் ஆசிர்வதித்தார்.

தீர்க்கதரிசி சாமுவேல் இஸ்ரவேல் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உடையவர், கடவுளின் கிருபை பெற்றவர், அவரோடு உரையாடும் இறையாற்றல் பெற்றவர் என்றெல்லாம் அறியப்பட்டவர். அது ஏன் இஸ்ரவேல அரசனான சவுலை அபிஷேகித்து அரியணையில் ஏற்றியவரே இவர்தான். அவரை எங்ஙனம் கோபிப்பது. அதனால்தான் மூன்று அண்ணன்மார்களுக்கும் தாவீதின்மீது அப்படி ஒரு பொறாமை, கோபம்.

அதுவுமல்லாமல் தாவீது தம்பூராவிலும், சுர மண்டலத்திலும் இசைக்கும் பாடல்கள் இனிமையானவை, மன அமைதியைத் தர வல்லவை எனக் கூறி, அரசன் சவுல் உறங்காமல் தவித்த நாட்களில் அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஆட்களை அனுப்புவான். இவ்வளவு போதாதா சகோதரர்களுக்கு தாவீதுமீது வெஞ்சினம் கொள்ள.

இந்தச் சூழ்நிலையில்தான் கோலியாத்தைக் குறித்த தாவீதின் கருத்து எலியாப்புக்குக் கோபமூட்டியது.

ஆனால் வீரர்கள் இப்படி தாவீது சொல்வதைக் கேட்டு சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். தாவீது சவுலிடம், "கோலியாத்திடம் யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!" என்றான்.

மிகுந்த மன உளைச்சலில் இருந்த அரசன் சவுல் தாவீதிடம் "தாவீதே! உன்னால் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டை போட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் பயிற்சி பெற்றுத் தேர்ந்த போர்வீரன். இது நடக்காத காரியம்" என்றான்.

ஆனால் தாவீது தாழ்மையோடு சவுலிடம், "அரசே! நான் ஓர் இடையன்தான். ஆடு மேய்ப்பவன்தான். ஆனால் ஒரு தடவை சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தாக்கியபோது, அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என்மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்துக் கிழித்துக் கொன்றேன். சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப் போலக் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தியனிடமிருந்தும் காப்பாற்றுவார்" என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசினான்.

சவுல் அவனுடைய வீரத்தையும், இறையின்பால் அவனுக்கிருந்த விசுவாசத்தையும் வியந்து, "தாவீதே! உலகைப் படைத்த கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ" என்று உத்தரவு வழங்கினான்.

சவுல் தன் சொந்த ஆடையைத் தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீரா மற்றும் பிற யுத்த சீருடைகளை அணிவித்தான். தாவீது வாளை எடுத்துக் கட்டிக்கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணியும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை.

தாவீது சவுலிடம், "இவற்றை அணிந்து என்னால் சண்டைபோட முடியாது. அணிந்து பழக்கமுமில்லை" என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றிவிட்டு, தன் கைத்தடியை மட்டும் எடுத்துக்கொண்டு 5 கூழாங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல்பையில் போட்டுக் கொண்டான். கையில் கவண் வில்லை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.

கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கோலியாத் தாவீதை யுத்தப் பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான்.

"ஆமாம், ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?" என்று கோலியாத் தாவீதைக் கேலி செய்தான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்து "இங்கே வா, உனது உடலைப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன் பார்!" என்று கர்ஜித்தான்.

தாவீது பதட்டம் ஏதுமில்லாமல் அவனிடம், "நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துக்கொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேலின் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வேன்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துகொள்ளும்! ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்கு பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்கள் எல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்" என்றான்.

கோபமுற்ற கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து ஒடி வந்தான். தாவீதும் அவனை நெருங்கி ஓடி வரும்பொழுது தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்துச் சுழற்றி எறிந்தான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கு நடுவில் பட்டது. கோலியாத்தின் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்து இறந்தான்.

இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி, அதைக் கொண்டே அவனது தலையைச் சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தைக் கொன்றான்.

மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள். இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள்.

இப்படியாக தாவீது தன்னுடைய நாட்டையும், மக்களையும் பெலிஸ்தியர்களிடம் இருந்து காப்பாற்றி இஸ்ரவேல் மக்களுக்கும், இறைவனுக்கும் பிரியமானவன் ஆனான்.

தாவீது அரசன் சவுலுக்குப் பின் அரச முடிசூட்டி யூதாவைச் சுற்றிலும் உள்ள இஸ்ரவேல் மக்கள் வாழும் நாடுகளை ஒன்றிணைத்து, வரலாற்றில் முதன்முறையாக ஒருங்கிணைந்த இஸ்ரவேல் என்ற நாட்டை ஸ்தாபித்து நகரங்களை நிர்மாணித்துச் செம்மையுற ஆண்டான்.

ஆனாலும் தாவீது தன் வாழ்நாள் முழுவதும் மிகுந்த பக்தியுடனும், மனத்தாழ்மையோடும், தன் வெற்றிகளுக்குரிய மகிமையைத் தன்னுடையதாகக் கொள்ளாமல் கடவுளுக்கே அத்தனை புகழும் உரித்தாகுக என சங்கீதம் என்ற நூலை இயற்றினான். இன்றும் அந்நூல் அனேக உள்ளங்களை ஆற்றவும், தேற்றவும், இறையிடம் விண்ணப்பிக்கவும், தொழவும் உதவுகிறது.

தாவீது அன்று நினைத்திருப்பானா ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவனுடைய சந்ததியில் அவனைக் காட்டிலும் மகா வல்லவன், அன்பை ஆயுதமாய் தாங்கிய பேரரசன், காணப்படாத நிச்சயமான விசுவாசத்தை பெருக்கும் இறையின் கொடையாய் இயேசு கிறிஸ்து எனும் திருக்குமாரன் உதிப்பானென்று! ஆம், விசுவாசமானது இறையை உலகில் உதிக்கச் செய்ய வல்லது, விசுவாசமானது அறிவியலின் நியதிகளுக்கு, இயற்கைக்கு அப்பாற்பட்டது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது!

தேவி அருள்மொழி,
சிகாகோ, இல்லினாய்

(பரிசுத்த வேதாகமம் புத்தகங்கள் 1 சாமுவேல், எபிரெயர், சங்கீதம் இவற்றில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளுடன் சிறிது கற்பனை கலந்து இந்தக் கதை வரையப்பட்டுள்ளது.)

© TamilOnline.com