ஸ்ரீ உத்திரபசுபதீஸ்வரர், கணபதீஸ்வரர் ஆலயம், திருசெங்காட்டங்குடி
சிவபெருமானை விநாயகர் வழிபட்டதால் இக்கோயிலுக்கு கணபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருச்செங்காட்டங்குடி என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் திருவாரூர்-திருமருகல் சாலையில் 'திருச்செங்காட்டங்குடி' என்று தமிழ்நாடு பெயர்ப்பலகை காட்டும் பாதையில் 3 கி.மீ. பயணப்பட்டால் இத்தலத்தை அடையலாம்.

தலப்பெருமை
கல்வெட்டுக்களில் இறைவனின் திருநாமங்களாக, 'செங்காடுடைய நாயனார்', 'கணபதீச்சரமுடையார்', 'மகாதேவர்' என்று குறிக்கப்பட்டுள்ளது. விநாயகர் கஜமுகாசுரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றதால் அவனுடைய உடலின் குருதி படிந்து செங்காடாக ஆனதால் 'செங்காட்டங்குடி' என்ற பெயர் வந்தது.

பைரவ வேடத்தில் சிவபெருமான் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி அமுது கேட்டு அவருக்கும் அவரது மனைவி, மகள், பணிப்பெண் ஆகியோருக்கும் அருள்புரிந்த தலம்.

உத்திராபதியார் திருமேனி உருவான விதம்
ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத்தொண்டருக்குச் சிவபெருமான் அருளிய செய்தியை அறிந்து இத்தலத்திற்கு வந்து தங்கி இறைவனை வழிபட்டார். உத்திராபதியின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்திராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரை திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகியில் யாம் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவோம்" என்று அருளினார்.



ஐயடிகள் அவ்வாறே செயல்படத் தொடங்கினார். பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டார். கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னர் விரைந்து பணிகளை முடிக்க ஆணையிட்டார். சிற்பிகள், வடிவம் நன்கமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவர் அவர்களிடம் தாகத்திற்கு நீர் கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏறக் காய்ச்சிய மழுதான் உள்ளது வேண்டுமானால் ஊற்றுகிறேன்" என்றனர். சிவயோகியாரும், "நல்லது அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கிக் கொண்ட சிவனடியார் அங்கிருந்து மறைந்தார். உத்திராபசுபதீஸ்வரர் உருவானார். செய்தி அறிந்த மன்னன் வியந்து போற்றி அத்திருவைக் கோயிலில் எழுந்தருளிவித்துக் கும்பாபிஷேகம் நடத்தினார்.

ஐயடிகள் காடவர்கோனுக்கு சிவபெருமான் சண்பகப்பூவின் மணம் வீசக் காட்சி தந்தார்.

இறைவன் அடியார் பொருட்டு பூமியில் வந்து தன் பாதம் தேய நடந்து அருள்செய்த தலம் இது. உத்திராபசுபதீஸ்வரர் ஆலயத்தில் தோன்றி சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக, திருக்கோயில் முதல் கணபதீச்சர ஆலய அத்திமரம்வரை இறைவன் பொற்பாதம் பதித்த சிறப்புடையது.



மூலவர் கணபதீச்சரமுடையார். பேழையில் மரகதலிங்கம் உள்ளது. சிறுத்தொண்டர், பல்லவ மன்னன் தளபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து வாகைசூடி உடன் கொண்டுவந்த வாதாபி விநாயகரை இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாக உள்ளது. கல்வெட்டுக்களில் இறைவன் செங்காடுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர், கணபதீச்சரமுடையார் எனவும், தலத்தின் பெயர் திருச்செங்காட்டங்குடி எனவும் உள்ளது.

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.

- ஞானசம்பந்தர் தேவாரம்


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com