ஆர்.வி. பதி
ஆர்.வி. பதி ஒரு பன்முகப் படைப்பாளி. சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆய்வுகள் என்று பல திறக்குகளில் இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலானவை சிறார் படைப்புகள். சிறார் படைப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து 'தமிழில் சிறார் இலக்கிய வரலாறு' என்னும் தலைப்பில், 1500 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூல் ஒன்றை எழுதி வருகிறார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார். தனது இலக்கியச் செயல்பாடுகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர். வாருங்கள், ஆர்.வி. பதியுடன் உரையாடுவோம்.

★★★★★


கே: இளமைக் காலத்தை நினைவு கூருங்கள்....
ப: நான் பிறந்து வளர்ந்த ஊர் செங்கற்பட்டு. செங்கற்பட்டு அலிசன் கேசி உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி ஸ்ரீ இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து, பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் எனது பள்ளிக் கல்வி முடிந்தது. தொலைநிலைக் கல்வியில் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (இதழியல்) மற்றும் எம்.ஃபில் (இதழியல்) முடித்தேன்.

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது



கே: எழுத்தார்வம் துளிர்த்தது எப்போது?
ப: காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டருகில் ஒரு நண்பன் தன்னுடைய மாமா குமுதத்தில் சிறுகதை எழுதுகிறார் என்பதை எல்லோரிடமும் பிரமிப்பாகச் சொல்லி மகிழ்வான். அப்போது, வகுப்பில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நான் சிறுவர் கதை நூல்களை வைத்துப் படிப்பேன். அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, கோகுலம், குமுதம், மாலைமதி, பூவாளி முதலான பத்திரிகைகளை வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. நானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் தலை தூக்கியது. பள்ளிப் பருவத்திலேயே முயற்சி செய்தேன். முழுமையாக எதையும் எழுத முடியவில்லை. 1988ம் ஆண்டில் என் எண்ணம் கை கூடியது.

கே: ஓ! அந்த முதல் படைப்பு?
ப: தராசு ஷ்யாம் அவர்கள் நடத்தி வந்த 'மின்மினி' வார இதழில் ஒரு பக்கக் கதைகளை அதிகமாகப் பிரசுரித்தனர். அவற்றைப் படித்தபோது அதில் நாமும் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் நான்கு சிறுகதைகளை எழுதி அனுப்பினேன். 'கலர் டிவி' என்ற என் முதல் ஒருபக்கக் கதை 23 ஜனவரி 1988 தேதியிட்ட இதழில் பிரசுரமானது. பிற சிறுகதைகளும் அடுத்தடுத்த வாரங்களில் பிரசுரமாயின. நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் இது விதைத்தது. அடுத்து, பிற இதழ்களுக்கும் எழுத முயல வேண்டும் என்ற எண்ணம் எழ 'மனிதர்கள்' என்ற தலைப்பில் தினத்தந்திக்கு ஒரு சிறுகதை எழுதினேன். ஒரே வாரத்தில் அந்தக் கதையும் பிரசுரமானது.

சக்தி கிருஷ்ணசுவாமி விருது



கே: சிறார் இலக்கியத்தின் மீது தனிப்பட்ட கவனம் திரும்பியது ஏன்?
ப: தினமணி நாளிதழ் 'வெள்ளிமணி' இணைப்பிதழை வெள்ளிக்கிழமைகளில் வெளியிட்டது. இதில் வாரந்தோறும் ஒரு சிறுவர் கதையை வண்ண ஓவியத்தோடு பிரசுரித்தார்கள். அதற்கு 'திருந்திய உள்ளங்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுவர் கதையை அனுப்பினேன். 12 ஆகஸ்ட் 1988 தேதியிட்ட வெள்ளிமணியில், அக்கதை பிரசுரமானது. தொடர்ந்து தினகரன் வசந்தம், தினமணி சிறுவர்மணி, தினமணி தமிழ்மணி, இளந்தளிர், கோகுலம், தினபூமி மாணவர்பூமி, கலைமகள், பிக்கிக்கா, பெரியார் பிஞ்சு, தினத்தந்தி தங்கமலர், பொம்மி, தி இந்து தமிழ் மாயாபஜார் எனப் பல இதழ்களில் நான் எழுதிய சிறுவர் கதைகள், பாடல்கள், கட்டுரைகள் பிரசுரமாகின.

எனது முதல் நூலான 'சிறுவர் கதைகள்', ஜூன் 1994ல் அபராஜிதா பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து 'நூறு வருஷத்து பொம்மை' மற்றும் 'திருக்குறள் நீதிக்கதைகள்' போன்ற சிறுவர் இலக்கிய நூல்கள் சென்னை உஷா பிரசுரத்தால் வெளியிடப்பட்டன. பயணம் தொடர்கிறது.

மா. கமலவேலன் அவர்களுடன்



கே: சிறார் இலக்கியம் குறித்து பல ஆராய்ச்சி நூல்களை எழுதியிருக்கிறீர்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள்..
ப: தமிழில் சிறார் இலக்கியம் குறித்த முதல் ஆய்வு நூல் டாக்டர் பூவண்ணன் அவர்களின் 'குழந்தை இலக்கிய வரலாறு'. அதற்குப் பின்னர் சிறார் இலக்கியம் குறித்த ஆய்வு நூல்கள் பெரிதாக வெளியாகவில்லை. அதுகுறித்துச் சிந்தித்தபோது இந்தப் பணியை நாமே ஏன் செய்யக்கூடாது என்று தோன்றியது. விளைவாக 'சிறார் இதழ்கள் அன்று முதல் இன்றுவரை', 'உலகத் தமிழ்க் குழந்தை இலக்கியம்', 'பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்', 'தற்கால சிறார் எழுத்தாளர்கள்', 'குழந்தை இலக்கிய முன்னோடிகள்', 'புதுச்சேரி குழந்தை இலக்கிய வரலாறு', 'சிறுவர்களின் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100' முதலான நூல்களை வெளியிட்டேன். பலர் எனது இந்த அரிய பணியை வரவேற்றுப் பாராட்டினர். கல்லூரிகள் நடத்திய ஆய்வரங்கங்களில் எனது சிறார் இலக்கியம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. தற்போது 'தமிழில் சிறார் இலக்கிய வரலாறு' என்ற 1500 பக்கங்கள் அளவிலான நூல் ஒன்றை எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும்.

கே: சிறார் இலக்கியம் படைப்பதிலுள்ள சவால்கள் என்னென்ன ?
ப: எதையும் நான் சவாலாக நினைப்பதில்லை. குழந்தைகளுக்காக நாம் குழந்தை உலகில் பயணித்து, சிந்திக்க வேண்டும். அவர்களுக்குப் புரியும் விதத்தில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுத வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் மனங்களைக் குதூகலப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களுடன்



கே: சிறார் இலக்கியம் மேம்பட என்ன செய்யலாம்?
ப: பள்ளி ஆசிரியர்கள் தமது மாணவர்களைச் சிறார் இலக்கியம் படிக்க ஊக்குவிக்க வேண்டும். அரசு சிறார் நூல்களை வாங்கி, பள்ளி மாணவர்களுக்குப் பரிசளித்து வாசிக்கத் தூண்டலாம். பள்ளி, கல்லூரி விழாக்களில் பரிசாகப் புத்தகங்களை மட்டுமே வாங்கி அளிக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

கே: சிறார் இலக்கியம் தவிர்த்து உங்களது பிற இலக்கிய முயற்சிகள் பற்றி...
ப: ஹைகூ கவிதைகளில் பெரும் ஈடுபாடு உண்டு. தமிழ்நாட்டில் ஹைகூ அறிமுகமான காலகட்டத்தில் 1993ல் நான் எழுதிய 'ஹைகூ கவிதைகள்' நூல் பதினாறாவது நூல். இந்நூல் பரவலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 2012ல் 'ஒற்றை எறும்பு' என்ற ஹைகூ நூலினை வெளியிட்டேன். மூன்றே வரிகளில் எழுதினால் அதை ஹைகூ என்று தவறாகப் புரிந்துகொண்ட தமிழ்க் கவிஞர்கள் பலர், துணுக்குகளை எழுதுகின்றனர். இதனால் நான் ஹைகூ எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.



தமிழ்நாட்டில் வெளியாகும் அனைத்து இதழ்களிலும் நான் எழுதிய இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. சென்ற ஆண்டு கலைமகள் நடத்திய கா.ஸ்ரீ.ஸ்ரீ. நினைவுச் சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய 'காலக்கிரகம்' என்ற சிறுகதை முதல்பரிசாக ஏழாயிரம் ரூபாய் வென்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். தற்போது ப்ரொபஸ் அமைப்பும் கலைமகளும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறந்த கதைகளாகத் தேர்வான இருபது சிறுகதைகளில் நான் எழுதிய 'சங்கமம்' ஒன்று.

ஆன்மிக நூல்கள், அறிவியல் நூல்கள் எனப் பல துறைகளிலும் இயங்கி வருகிறேன். தற்போது 'சிறுவர்களுக்கு சங்க இலக்கியம்' என்ற தலைப்பில் சங்க இலக்கியங்களைத் தமிழகச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல் ஒன்றை எழுதி வருகிறேன்.



கே: எழுத்தாளராக இருப்பதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: ஒரு எழுத்தாளன் என்பதால் எங்கு சென்றாலும் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. சிலர் பிரமிப்பாகப் பார்க்கிறார்கள். 125 புத்தகங்கள் எழுதியுள்ளதை அறிந்தால் ஆச்சரியப்படுகிறார்கள். பாதகம் என்று ஏதும் இல்லை. எழுத்தாளனாக இருப்பதில் எனக்குச் சாதகங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

கே: உங்களுக்குக் கிடைத்த மறக்கமுடியாத பாராட்டு எது?
ப: படித்தவர்கள் கதை நன்றாக இருக்கிறது என்று பல சமயங்களில் பாராட்டி மகிழ்வார்கள். எனது அம்மா எனது கதைகளைப் படித்து அது எப்படி இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி மகிழ்வார். இதையே நான் மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன். மேலும் மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளேன். இதை வாசித்த பாரதியின் பெயர்த்தி முனைவர்.விஜயபாரதி நூலைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார். இதுவும் மற்றொரு மறக்க முடியாத பாராட்டாகும்.



கே: உங்கள் குடும்பம் குறித்து...
ப: மனைவி ச. இராஜேஸ்வரி தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர். ஒரே மகள் ஆர்.வி. அபராஜிதா, சிறப்புப் பல் மருத்துவர் . வேர் சிகிச்சை நிபுணர். சமீபத்தில்தான் மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை என்.ஆர். அரவிந்தன் மென்பொறியாளர்.



கே: உங்கள் மகளுக்கும் எழுத்தார்வம் உள்ளதா?
ப: எனது மகள் அபராஜிதா தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர். தினமலர் நலம், டாக்டர் தினகரன், ராணி வார இதழ், லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ், அமுதசுரபி போன்ற இதழ்களில் பல் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். 'புஸ்தகா டிஜிட்டல் மீடியா' இணையத்தில் நான்கு ஆடியோ புத்தகங்களை வாசித்துள்ளார். ஒரு வருடத்தில் அதிகமான பல் மருத்துவக் கட்டுரைகளை எழுதியமைக்காக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பு, தேசிய சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளது. சமீபத்தில் பல் மருத்துவம் குறித்த நூல் ஒன்றை எழுதி முடித்துள்ளார். விரைவில் அது வெளியாக உள்ளது.

தொகுப்பு: அரவிந்த்

தொழில்நுட்பமும் சிறார் இலக்கியமும்
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த சிறு தொகைகளில் தமக்கான இதழ்களை வாங்கி ரசித்துப் படித்து மகிழ்வர். அன்றைய தாத்தா, பாட்டிகள், பெற்றோர்கள் தங்கள் செல்வங்களுக்குக் கதை சொல்லி மகிழ்வர். எனது ஆய்வின்படி இதுவரை குழந்தைகளுக்காக சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள், காமிக்ஸ் இதழ்கள் வெளியாகியுள்ளன. ஆண்டு 2000க்குப் பின்னர் தொழில்நுட்பச் சாதனங்களின் வரவினால் இந்த நிலை மாறி, சிறுவர்களுக்கான இதழ்கள் குறையத் தொடங்கின. தற்போது இரண்டு மூன்று இதழ்கள் மட்டுமே பெயரளவில் வெளியாகின்றன. அவற்றுக்கும் பெரிய வரவேற்பு இல்லை.

தற்போது POD தொழில்நுட்ப வரவு காரணமாகச் சிறுவர்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் உருவாகிவிட்டார்கள். ஐயாயிரம் ரூபாய் செலவு செய்தால் 96 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை நாமே வெளியிடலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதன் விளைவாக வாரந்தோறும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் பல வெளியிடப்படுகின்றன. நான் அறிந்த வரையில் தற்காலத்தில் ஒவ்வொரு புத்தகமும் 12 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. அவை விற்றால் தொடர்ந்து அச்சிடப்படுகின்றன. இல்லையென்றால் அதன் ஆயுள் அவ்வளவுதான். ஆனால் இத்தகைய நூல்களைச் சிறுவர்கள் வாங்கிப் படிக்கிறார்களா என்று கேட்டால் 'ஆம்' என்று சொல்லும் நிலை இல்லை.

சிறந்த சிறார் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களைக் கௌரவிக்க 'பாலசாகித்ய புரஸ்கார்' 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் சிறார்களுக்காக எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அலமாரியில் பூரண ஓய்வில் உள்ளன. பல சிறார் புத்தகங்களை கரையான்கள் விரும்பி ருசிக்கின்றன. இதுவே இன்றைய நிலை. சிறுவர்கள் தமக்கான நூல்களை எந்த அளவில் வாசிக்கிறார்கள் என்பது குறித்து தமிழ்நாடு அளவில் ஒரு ஆய்வினை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்.

ஆர்.வி. பதி


ஆர்.வி. பதி பெற்றுள்ள விருதுகள்
ஸ்ரீ வைணவ மகாசங்கம் வழங்கிய சிறந்த ஆன்மிக நூலுக்கான விருது - 'மனதை மயக்கும் கண்ணன் கதைகள்' நூலுக்காக. (2011)
இதே நூலுக்கு பவித்ரம் அறக்கட்டளை வழங்கிய 'சிறந்த ஆன்மிக எழுத்தாளர்' விருது. (2012)
கலை இலக்கியப் பெருமன்றத்தினர் வழங்கிய, சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது'- 'வாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்' நூலுக்காக. (2013)
கோயமுத்தூர் ஜெய்வர்மம் அறக்கட்டளை வழங்கிய 'சிறந்த எழுத்தாளர் விருது'. (2013)
சென்னை புத்தகக் கண்காட்சி அமைப்பினரான பபாசி வழங்கிய 'சிறந்த குழந்தை அறிவியல் நூல் எழுத்தாளர் விருது'. (2014)
நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் வழங்கிய 'சிறந்த எழுத்தாளர் விருது'. (2015)
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் வழங்கிய 'சிறுவர் இலக்கியச் செம்மல்' பட்டம். (2016)
ஒரு மாதத்தில் பல்வேறு பிரிவுகளில் அதிக நூல்களை வெளியிட்ட சாதனை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டு, 2016ம் ஆண்டில் வெளியான பதிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஒரு வருடத்தில் அதிக நூல்களை வெளியிட்ட எழுத்தாளர் என்ற சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளில் 50 இதழ்களில் 280 படைப்புகளை வெளியிட்ட சாதனையாளர் என்ற அங்கீகாரத்தினையும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அளித்துள்ளது.
திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'சிறந்த நூலாசிரியர் விருது' - விண்வெளியில் ஒரு பயணம் நூலுக்காக. (2017)
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பு வழங்கிய 'இலக்கியச்சுடர்' பட்டம். (2018)
சைதை மகாத்மா காந்தி நூல் நிலையம் வழங்கிய சிறந்த எழுத்தாளருக்கான 'சக்தி டி.கே. கிருஷ்ணசாமி விருது' (2019)
கலைமகள் மாத இதழ் நடத்திய கா.ஸ்ரீ.ஸ்ரீ. நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு - 'காலக்கிரகம்' சிறுகதைக்காக. (2021)


ஆர்.வி. பதி எழுதிய சில நூல்கள்
தமிழ் ஹைகூ ஆயிரம்
ஒற்றை எறும்பு
அன்பெனும் நதியினிலே
தப்பித்தால் போதும்
சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை
உலகத் தமிழ்க் குழந்தை இலக்கியம்
திருக்குறள் நீதிக் கதைகள்
பள்ளி மாணவர்களுக்கு 10 நிமிட மேடை நாடகங்கள்
இரயில் வண்டி
அறிவியல் ஆச்சரியங்கள்
உயிரியல் உலகம்
கண்மணிகளுக்குக் கணினி
அறிந்த அறிவியல் அறியாத உண்மைகள்
தகவல் தொடர்புச் சாதனங்களின் கதை
அறிவை வளர்க்கும் அரிய தகவல்கள்
பாலூட்டிகள் பற்றிய தகவல் களஞ்சியம்
சுனாமி அறிந்ததும் அறியாததும்
அற்புத உயிரினங்கள் அதிசயத் தகவல்கள்
பூச்சிகள் தகவல் களஞ்சியம்
உலகத்தை கலக்கிய விஞ்ஞானிகள்
ஊர்வன தகவல் களஞ்சியம்
இந்திய அறிவியல் மேதைகள்
வாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம்
விண்வெளியில் ஒரு பயணம்
அறிவியல் அதிசயங்கள்
பறவைகள் தகவல் களஞ்சியம்
ஆபிஸ் எக்ஸ்ப்பி
உள்ளங்கைக்குள் உலகம்
மகாபாரதக் கதைகள்
இராமாயணக் கதைகள்
வைணவம் வளர்த்த மகான்கள்
சிறப்பான வாழ்வு தரும் சிவத்தலங்கள்
வளமான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்
ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்
ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்
திகைக்க வைக்கும் திண்டுக்கல்

© TamilOnline.com