அத்தியாயம் 1: வட அமெரிக்கா
வட அமெரிக்கக் கண்டத்தின் தென்பகுதி மத்திய அமெரிக்கா என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஆறு நாடுகள். அவை, பெலீஸ் (Belize), குவாதமாலா (Guatemala), எல் சால்வடோர் (El Salvador), ஹோண்டூராஸ் (Honduras), நிக்கராகுவா (Nicaragua), கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica), பனாமா (Panama). சிலர் மெக்ஸிகோவின் சில பகுதிகளையும் ஏழாவதாகச் சேர்க்கிறார்கள்.
இங்கே வாழும் பழங்குடி மக்களில் முக்கியமானவர்கள் மாயர்கள் (Mayans).
கி. மு. 2600ல் தொடங்கி கி.பி. 900 வரை தொடர்ந்த மாயன் நாகரிகம், உலகப் பழம்பெரும் நாகரிகங்களில் முக்கியமானது. கணிதம், வானியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், பெரும் சாதனைகள் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாகக் குழந்தைகள் எல்லோரும் மாயர்களுக்குத் தனியாக "தாங்க் யூ" சொல்லவேண்டும். ஏன் தெரியுமா? நமக்குப் பிடித்த சாக்லெட்டைக் கண்டுபிடித்தவர்கள் மாயர்கள். சாக்லெட் கொக்கோ மரத்தின் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அதாவது சுமார் கி.மு. 2000த்திலேயே மாயர்கள் கொக்கோ மரங்கள் வளர்த்தார்கள். இவற்றைக் கடவுள் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்தார் என்று நம்பினார்கள். கொக்கோவைக் கடவுள்களின் உணவாக மதித்தார்கள். சாக்லெட்டுக்கென தனிக்கடவுளை உருவாக்கினார்கள். அவர் பெயர் எக் சுவா (Ek Chuah). சாக்லெட் நிறத்தில் இருப்பார்.
மாயர்கள் கொக்கோ கொட்டைகளை வென்னீரில் போட்டு அந்தக் கஷாயத்தைக் குடித்தார்கள். இந்தப் பானத்துக்கு ஸொக்கெலாட்டெல் (Xocolatl) என்று பெயர். கசப்பான பானம் என்று அவர்கள் மொழியில் அர்த்தம். சாக்லெட் தயாரிக்க இதனுடன் பால், சர்க்கரை சேர்க்கிறார்கள். அதனால்தான், கசப்பு மறைந்து இனிப்புச் சுவை வருகிறது. ஸொக்கெலாட்டெல், ஸொக்கெலாட்டெல் என்று வேகமாகச் சொல்லுங்கள். சாக்லெட் என்று வரும். இப்படித்தான் சாக்லெட் என்னும் பெயர் வந்தது.
நம் ஊரின் பஞ்சதந்திரக் கதைகளில் ஹீரோக்கள் மிருகங்கள். மாயன் நாகரிகத்தில், பெரும்பாலான கதைகளில் முயல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. நமக்கு முயல்கள் நல்ல மிருகங்கள், சாதுவான பிராணிகள். மாயர்கள் பார்வையில் நல்ல முயல்களும் உண்டு, கெட்ட முயல்களும் உண்டு. முதலில், ஒரு நல்ல முயல் கதை.
முயலின் சாமர்த்தியம் காட்டில் ஒரு முயல் வசித்தது. அதி புத்திசாலி. ஒருநாள் ஓநாய் அதைத் துரத்தியது. தன்னை ஓநாய் பிடித்துவிடும், அப்படிப் பிடித்தால், தன்னைக் கொன்று தின்றுவிடும், பலமும் வேகமும் கொண்ட ஓநாயோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்பது முயலுக்குத் தெரியும். என்ன தந்திரம் பண்ணித் தப்பிக்கலாம் என்று யோசித்தது.
வழியில் ஒரு பாறையின் பக்கம் போனது. அந்தப் பாறையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றது. முயல் ஏன் ஓடாமல் நிற்கிறது என்று ஓநாய்க்கு ஆச்சரியம். கேட்டது.
"முயலாரே, நீங்கள் ஏன் திடீரென நின்றுவிட்டீர்கள்? நான் உங்களைச் சாப்பிடப் போகிறேன் என்ற பயத்தால் ஓட முடியவில்லையா?"
"ஓநாய் மாமா, நீங்கள் என்னைச் சாப்பிடுவதுபற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையும் இல்லை. நீங்கள்தான் வலியே இல்லாமல் என்னைக் கொன்று விடுவீர்களே? உங்களை நினைத்துத்தான் நான் கவலைப்படுகிறேன்."
"உளறாதே. என்னைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?"
"என்னைக் கொன்ற உடனேயே, என்னைச் சுவைத்துச் சாப்பிடுவதற்கு முன்னால், நீங்கள் பரிதாபமாகச் செத்துப்போகப் போகிறீர்கள்."
"என்னைக் கொல்லும் தைரியம் இந்தக் காட்டில் யாருக்கு இருக்கிறது? சிங்கமா, யானையா, புலியா?"
"இவர்களும் உங்களோடு சேர்ந்து சாகப் போகிறார்கள்."
"முயலாரே, பயத்தில் உமக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் ஏன் செத்துப்போகப் போகிறோம்?"
"இன்னும் கொஞ்ச நேரத்தில் வானம் இடிந்து இந்தக் காட்டில் விழப் போகிறது. இந்தப் பாறையின் அடியில் நின்றால் மட்டுமே நாம் தப்புவோம்."
"எனக்கும் இடம் கொடும் முயலாரே."
"ஓநாய் மாமா, உங்களுக்கு இல்லாத இடமா? இந்தப் பாறையிலிருந்து நான் விலகி வந்தால், அது உருண்டு கீழே என்மேல் விழுந்து என்னை நசுக்கிவிடும். நீர் ஒரு நிமிடம் பாறையைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். அதற்குள் நான் ஓடிப்போய் ஒரு மரக்குச்சி கொண்டு வருகிறேன். அதை தாங்கலாகக் கொடுத்து, பாறையை நேராக நிறுத்துவோம். அப்புறம் வானம் கீழே விழும்போது, நாம் இரண்டு பேரும் பாறையின் கீழ் பத்திரமாக இருக்கலாம். அப்புறம் நீங்கள் என்னைச் சாப்பிடலாம்."
ஓநாய் பாறையைப் பிடித்துக் கொண்டது. முயல் ஓடிப் போயிற்று. நேரம் பறந்தது. முயல் வரவில்லை.
"முயலாரே, முயலாரே, என் கை வலிக்கிறது. சீக்கிரம் வாரும். நான் நகர்ந்தால், பாறை என்மேல் விழுந்து என்னைச் சட்டினி ஆக்கிவிடும்."
முயல் அங்கே இருந்தால்தானே, ஓநாயின் சப்தம் அதன் காதில் விழும்? ஓடி மறைந்துவிட்டது.
அடுத்ததாக, ஒரு கெட்ட முயல் கதை.
முயலுக்கு ஏன் கொம்பு இல்லை? மானுக்கு ஏன் கொம்பு இருக்கிறது?
முயலுக்குக் கொம்பு உண்டா? கிடையாது. மானுக்குக் கொம்பு உண்டா? உண்டு. ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முயலுக்குக் கொம்புகள் இருந்தன, மானுக்குக் கொம்புகள் கிடையாது.
எப்படி வந்தது இந்த மாற்றம்?
முயல் காட்டில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதற்கு அழகான கொம்புகள் இருந்தன. இந்தக் கொம்புகள் வித்தியாசமானவை. தொப்பியைப் போல் இவற்றைக் கழற்றலாம், மறுபடியும் மாட்டிக் கொள்ளலாம். தன் கொம்புகளைப் பற்றி முயலுக்கு மிகுந்த கர்வம் உண்டு.
வழியில் ஒரு மான் வந்தது. முயலின் கொம்பை மான் மிகவும் ரசித்தது.
"முயலாரே, உங்கள் தொப்பி ரொம்ப அழகாக இருக்கிறது. நான் அதைக் கொஞ்ச நேரம் போட்டுக் கொண்டு பார்க்கலாமா?"
"தாராளமாக. ஆனால் ரொம்ப நேரம் நீங்கள் வைத்துக் கொள்ளக்கூடாது. என்னிடம் சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்."
"சரி."
மான் முயலிடமிருந்து கொம்பை வாங்கியது, தலையில் போட்டுக்கொண்டது, வேகமாக ஓடிப் போனது. திரும்பி வரவில்லை.
முயல் காத்திருந்தது, காத்திருந்தது. மான் வரவேயில்லை. என்ன செய்யலாம் என்று முயல் யோசித்தது. மக்களுக்குக் குறை என்றால் மன்னனிடம்தானே முறையிடவேண்டும்? கடவுளுக்குச் சமமான அரசர்தானே ஏழை எளியோரைக் காப்பாற்றுவார்கள்?
முயல் மன்னரிடம் போனது. "அரசரே, என் கொம்பை மான் என்னிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டது. நீங்கள்தான் என் கொம்பை எனக்குத் திரும்பி வாங்கிக் கொடுக்க வேண்டும்."
"சரி, உன் புகார் உண்மையானதாக இருந்தால் உனக்கு நிச்சயம் உன் கொம்பு கிடைக்கும்."
"மன்னா, எனக்கு இன்னும் ஒரு வேண்டுகோள்."
"என்ன அது? சொல்."
"அரசரே, நான் உருவத்தில் சிறியவனாக இருப்பதால்தான் மான் போன்ற மிருகங்கள் என்னை ஏமாற்றுகின்றன. எனக்கு நீங்கள் கடவுளிடம் சொல்லி யானைபோல் பெரிய உருவம் வாங்கித் தரவேண்டும்."
"நீ நேர்மையாக நடந்தால் உனக்காக நான் கடவுளிடம் சிபாரிசு செய்கிறேன். அதற்காக நான் உனக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன். அதில் நீ ஜெயித்தால் கொம்பும் பெரிய உருவமும் உனக்குக் கிடைக்கும்."
"என்ன சோதனை? சொல்லுங்கள் மகாராஜா."
"நீ நான்கு மிருகங்களின் தோலை எனக்குக் கொண்டு வந்தால், உன் வேண்டுகோள்களை நிறைவேற்றுவேன்."
முயல் வீட்டுக்குப் போனது. வெகு நேரம் ஆலோசித்தது. மிருகங்களின் தோல் காட்டில்தானே சுலபமாகக் கிடைக்கும்? ஆகவே, காடு நோக்கிப் புறப்பட்டது. அதன் மனதில் ஒரு திட்டம். பயங்கரமான திட்டம்.
மாயர்களுக்கு இசை மிகவும் பிடிக்கும். முரசுகள், புல்லாங்குழல், ஊதுகொம்பு (Trumpet) ஆகிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தினார்கள். பொது நிகழ்ச்சிகளில் பலர் சேர்ந்து இசைக்குழுபோல் டிரம்ப்பெட் வாசிப்பார்கள்.
நம் முயலுக்கும் நன்றாக டிரம்ப்பெட் வாசிக்கத் தெரியும். ஒரு கையில் டிரம்ப்பெட், இன்னொரு கையில் பெரிய தடியோடு நடக்கத் தொடங்கியது.
காட்டின் தொடக்கம். டிரம்பெட்டை வாசிக்க ஆரம்பித்தது. ஒரு பெரிய பாம்பு எதிரே வந்தது.
"முயலாரே, முயலாரே, நீங்கள் இனிமையாக டிரம்ப்பெட் வாசிக்கிறீர்கள். உங்கள் பாட்டுக்கு ஆட நான் ஆசைப்படுகிறேன்."
"ரொம்ப சந்தோஷம் பாம்பு அண்ணா. இதோ உங்களுக்காக ஒரு தனிப்பாட்டு."
பாம்பு தன்னை மறந்து ஆடியது. பாட்டில் லயித்திருந்த பாம்பின் தலையில் முயல் தன் தடியால் அடித்தது. பாம்பு இறந்தது. அதன் தோலை முயல் எடுத்துக்கொண்டது.
அடுத்தது, சிங்கம், முதலை ஆகியவை முயலின் கொலைகாரத் திட்டத்துக்குப் பலியானார்கள்.
அடுத்ததாக முயல் பெரிய குரங்குக் கூட்டத்தைப் பார்த்தது. "இவர்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டினால் நிறையத் தோல்கள் கிடைக்கும்."
குரங்குகள் புத்திசாலிகள். வெறும் பாட்டால் அவர்களை ஏமாற்ற முடியாது. எனவே முயல் நிறைய வாழைப் பழங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு குரங்குகள் அருகே வந்தது.
"முயல் மாமா, முயல் மாமா, எங்களுக்குப் பழம் தாருங்கள்" என்று குரங்குகள் கெஞ்சின.
"காட்டில் இருக்கும் குளத்துக்குப் பக்கத்தில் மீன் பிடிக்கும் வலை இருக்கிறது. அதைக் கொண்டு வாருங்கள். எல்லாப் பழங்களையும் உங்களுக்கே தந்துவிடுகிறேன்."
குரங்குகள் ஓடிப் போய் வலையைக் கொண்டு வந்தன. முயல் எல்லாப் பழங்களையும் அவர்களிடம் கொடுத்தது. குரங்குகள் வாழைப் பழங்களைச் சாப்பிடத் தொடங்கின. அந்த ஆனந்த மயக்கத்தில் தம்மையே மறந்தன. முயல் வலையை வீசியது. அத்தனை குரங்குகளும் வலைக்குள் மாட்டிக் கொண்டன. இப்போது முயல் எல்லாக் குரங்குகளையும் கொன்றது. அதன் தோல்களை உரித்தது. மன்னரிடம் கொண்டு போனது.
அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டோம், திருட்டுப் போன கொம்பு திரும்பக் கிடைக்கும். யானை போலப் பெரிய உருவத்தோடு கம்பீரமாக நடக்கலாம், சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் தன்னைக்கண்டு பயப்படுவார்கள் என்று முயல் மனத்தில் ஆயிரம் ஆசைக் கனவுகள்.
"ராஜா, நீங்கள் ஆணையிட்டபடி மிருகங்களின் தோல்களைக் கொண்டு வந்திருக்கிறேன்."
"காட்டு."
மன்னர் பார்த்தார்.
"முயலாரே, இத்தனை மிருகத் தோல்களை எப்படிச் சேர்த்தீர்கள்?"
முயல் தன் வீர சாகசங்களை விவரித்தது.
மன்னர் கோபப்பட்டார்.
"நீ நல்லவனாக இருந்தால், காட்டில் இறந்து கிடக்கும் மிருகங்களின் தோல்களைச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பாய். உன் சுயநலத்துக்காக, மற்ற மிருகங்களைக் கொன்ற நீ மகா அயோக்கியன். கொம்பும் பெரிய உருவமும் இருந்தால் நீ இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வாயோ? உனக்கு இனிக் கொம்பு கிடையவே கிடையாது. அது மானுக்குத்தான். உன் உருவமும் சிறியதாகவே இருக்கும்."
"ராஜா, ராஜா, என் தவறை மன்னித்துவிடுங்கள்."
"முயலே, நீ செய்தது கொலை. மன்னிக்கவே முடியாத குற்றம். நான் உனக்குத் தண்டனை தரப் போகிறேன். இங்கே வா."
அருகில் வந்த முயலின் காதை மன்னர் இழுத்தார். முயலுக்கு நீண்ட காதுகளாயின. இதனால்தான் முயல்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. கொம்புகள் இல்லை. மானுக்குக் கொம்புகள் இருக்கின்றன.
எஸ்.எல்.வி. மூர்த்தி |