தென்றல் பேசுகிறது...
பொருளாதாரச் சரிவு வருகிறதோ இல்லையோ, அதைச் சொல்லி பயமுறுத்தியே சரிவை ஏற்படுத்திவிடுவார்கள் போல இருக்கிறது. வாரன் பஃபெட், ராபர்ட் கியோசாகி போன்ற முதலீட்டு முதலைகள் ராப்பகலாக இதையே சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பங்குச்சந்தை விழுந்துவிடும் என்கிறார் ஒருவர். எந்தப் பொருளையும் வாங்காதே என்கிறார் மற்றொருவர். மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்பார்த்து பத்தாயிரக் கணக்கில் அமேசான், கூகுள் உட்படப் பெரும் பணக்காரக் கம்பெனிகள் ஆட்களை அம்போ என்று தெருவில் நிற்க வைத்துவிட்டார்கள். ஆக, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுவதற்கான எல்லாப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாகச் செய்யப்படுகின்றன. ஆட்குறைப்புக்கு மாற்றாக, உண்மையில் சரிவு ஏற்படும் சமயத்தில், பணியாளர்களின் சம்மதத்தோடு தற்காலிகச் சம்பளக் குறைப்பு செய்தால், வீழ்ச்சியின் பல முகங்களை அதிக பாதிப்பின்றி எதிர்கொள்ள முடியலாம். ஆனால், பெரும்பணக்காரர்களும் நிறுவனங்களும் தம்மைக் காத்துக்கொண்டு மக்களைக் கைவிடுவதாகத்தான் தெரிகிறது. இது நல்லதற்கல்ல. மாற்றி யோசிப்பது அவசியம்.

★★★★★


நாடுகள் தனித்தனியே இயங்கிய காலம் மாறி, 'உலக மயமாக்கல்' என்ற ஒரு கோஷத்தைப் பிடித்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாட்டுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டால் அதை அடுத்து டாமினோ விளைவாக எல்லா நாடுகளும் வெவ்வேறு பக்கமாகச் சரிவடைவது காலத்தின் கோலம். நல்ல வேளையாக, மேற்கத்திய நாடுகள் கையை முறுக்கினாலும் நாங்கள் பணிய மாட்டோம் என்று இறையாண்மையைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மானமுள்ள அரசு இந்தியாவின் மையத்தில் இருப்பதால், ஓரளவு தாக்கம் ஏற்பட்டாலும் பாரதம் பிழைத்துக் கொள்ளும் என்றுதான் வல்லுநர்களும் கருதுகிறார்கள். நாட்டு நலம், உலக நலம் இவற்றுக்கிடையேயான சமநிலையைச் சரிவரப் புரிந்துகொண்டு செயலில் காட்டும் பாரதத்தின் ஞானத்தை இந்தக் கடினமான தருணம் உலகுக்குப் புரிய வைத்திருக்கிறது.

★★★★★


கணக்கற்ற நூல்களை எழுதிக் குவித்திருக்கும் பழம்பெரும் எழுத்தாளர் ஆர்.வி. பதியின் நேர்காணல் நமக்கும் உந்துசக்தியாக அமையலாம். அதேபோல மேலாண்மைத் துறை அறிவைத் தமிழில் பெருமளவில் தந்திருக்கும் எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களைப் பற்றிய கட்டுரையும் சிந்தனைக்கு விருந்து. 'கதை நேரம்' பார்கவ் கேசவன் அதிசயிக்க வைக்கிறார். அழகிய கிறிஸ்துமஸ் சிறுகதை, ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள் குறித்த கட்டுரை எல்லாம் உண்டு.

23ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தென்றல், வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்னும் எம்மை நேயத்தோடு ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறது. கிறிஸ்துமஸ் விழாக்கால வாழ்த்துகள்.

தென்றல்
டிசம்பர் 2022

© TamilOnline.com