துர்வாசர் மிகநன்கு அறியப்பட்ட வேத பண்டிதர். அவரது நாவில் சாமவேத கானமும் கண்ணில் கோபக் கனலும் இருந்தன. அரியதோர் சேர்க்கைதான். இந்த அபத்தத்தைக் கண்ணுற்ற கல்வி மற்றும் மோட்சத்தின் தேவியான சரஸ்வதி கேலியாகச் சிரித்தாள். முனிவருக்குக் கோபம் வந்துவிட்டது. அப்போது அவர் கொடுத்த சாபத்தால் அவள் ஆத்ரேயருக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் மந்த புத்தியுடன், செயல்திறன் இல்லாதவனாக இருந்தான். எத்தனையோ திறமையான ஆசிரியர்கள் முயன்ற போதிலும் அவனால் வேதத்தை சரிவர உச்சரிக்கக்கூட முடியவில்லை. அவனைப் பிரம்பால் அடித்தார்கள், அவன் பரிதாபமாக அழுதான். சரஸ்வதிக்கு மிகவும் இரக்கம் ஏற்பட்டது. அவள் குறுக்கிட்டு அவனை அடிப்பதைத் தடுத்தாள். அவனுக்கு நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் கற்பித்தாள்; அவன் பெரிய பண்டிதன் ஆனான்.
இதற்கிடையில் வேதம் மனிதர்களின் நினைவிலிருந்து மறையலாயிற்று. அதனால் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. ரிஷிகள் எலும்புக்கூடுகளாக ஆயினர். வேதம் கொடுத்த போஷாக்கிலேயே அவர்கள் உயிர் வாழ்ந்த காரணத்தால் அவர்கள் வேதத்துக்காக ஏங்கினர். சரஸ்வதியின் சகோதரரான சரஸ்வதர் சந்திரனிடம் பிரார்த்தனை செய்தார். பூமியில் 'சாகம்' அல்லது உண்ணத்தக்க தாவரங்களை அவன் வளரச் செய்தான். அதை உட்கொண்டு ரிஷிகள் வாழத் தீர்மானித்தனர். சரஸ்வதர் அந்த ரிஷிகளுக்கு வேதங்களின் 60 பிரிவுகளைக் கற்பித்தார். ஆனால், வேதங்கள் கடுமையான புகையால் மூடப்பட்டிருந்தன. எனவே அவற்றைக் கற்ற ரிஷிகளை, அவநம்பிக்கையாளர்கள் வாதிட்டுக் குழப்பினர்.
அவர்கள் கற்றது உண்மையிலேயே வேதம்தான் என நாரதர் அவர்களுக்கு உறுதி அளித்தார். ஆனால் அவராலும் அவர்களின் சந்தேகக் கறையை நீக்க முடியவில்லை. எல்லோரும் சென்று பிரம்மாவை அணுகினர். "நீங்கள் வேதம் கற்ற காரணத்தால்தான் உங்களால் என்னை தரிசிக்க முடிந்தது. நீங்கள் கற்றதைக் கடைப்பிடித்தால் நீங்களே பிரம்மா ஆகிவிடலாம்" என்றார் பிரம்மா. அப்படித்தான் சரஸ்வத மஹரிஷி முன்னொரு காலத்தில் வேதத்துக்குப் புத்துயிர் கொடுத்தார்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |