"ஹூரே! அம்மா! ஹூரே!" அருண் சந்தோஷத்தில் கூச்சலிட்டான். "நான்தான் சொன்னேனே அம்மா, ஏதோ மர்மமான விஷயம் போல பொத்திப் பொத்தி நடக்குதுன்னு."
கீதாவுக்கும் அந்த கடிதத்தைப் படித்தவுடன் உற்சாகம் வந்தது. ஆனால், சில நொடிகளிலேயே டேவிட் ராப்ளேயின் பெயரை நினைத்ததும் வயிற்றில் எலி ஓடியதுபோல இருந்தது. அருணுக்கோ டேவிட் ராப்ளே ஆட்களோடு மல்லுக்கட்டுவது என்றால் மிட்டாய் சாப்பிடுவது போல. அவன் விடமாட்டான் என்று கீதாவுக்குத் தெரியும். தன்னைப்போலத் தன் மகனும் இருப்பது அவருக்கு ஒரு விதத்தில் பெருமிதமாக இருந்தாலும், தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முதலாளி டேவிட் ராப்ளே என்பதால் அவருக்கு கொஞ்சம் இந்த வம்பெல்லாம் வேண்டாம் என்று பல சமயம் தோன்றுவது உண்டு.
வீட்டின் வெளியே போட்ட கூச்சலில் ரமேஷ் வந்து என்னவென்று பார்க்கக் கதவைத் திறந்தார். ரமேஷின் கண்ணில் பட்டது இவைதான்: அருண் கையில் இருந்த கடிதம்; அருணின் உற்சாகம்; கீதாவின் ஆனந்தம். முந்தைய அனுபவங்கள் ரமேஷிற்கு மனக்கண்ணில் திரும்ப வர ஆரம்பித்தன. கோபத்தில் ரமேஷின் முகம் கடுகு போட்டால் வெடிக்கும் அளவுக்குச் சிவந்து போனது.
"திரும்பவுமா? என்னது இது கீதா? தேவையா இந்த கண்றாவி வேலை?"
ரமேஷ் கோபத்தில் தீபாவளிப் பட்டாசு போல வெடித்தார்.
"உள்ளே போய் பேசிக்கலாம், வாங்க." விடுவிடுவென்று கீதா அருணோடு கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். ரமேஷ் பின்னாடியே வந்து கதவை மடால் என்று சாத்தினார்.
"எதுக்கு இப்படி வாசல்ல நின்னு கத்தறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? எதுக்கு இப்படி குய்யோ முறையோன்னு கத்தறீங்க? அப்படி என்னதான் ஆயிடுச்சு?"
கீதா எரிச்சலோடு, ஆனால் குரலை உயர்த்தாமல் ரமேஷைக் கேட்டார்.
"எல்லாம் இந்த அதிகப் பிரசங்கியினாலதான்" ரமேஷ் அருணைப் பார்த்துக் கத்தினார்.
கீதா அருணுக்கு வக்காலத்து வாங்கினார்.
"ஆமாம், இப்ப என்ன நடந்ததுன்னு இப்படி சத்தம் போடறீங்க? Tell me one good reason? அப்படி என்ன அருண் பண்ணிட்டான்?"
ரமேஷ் பொருமினார்.
"அந்தக் கடிதம்... அதப் பார்த்தாலே இவன் ஏதோ திரிசமன் பண்ணிட்டு வந்திருக்கான்னு தோணுது. ஏதோ ஒரு பெரிய உத்தமரு இவனுக்கு உதவி பண்ணற நினைப்புல நம்ப குடும்பத்துக்கு உபத்திரவம் பண்ணிட்டு போயிடுவாரு. வந்துட்டானுங்க பொதுச்சேவை காந்திங்க. சும்மா இல்லாம சின்னப் பசங்கள கிளப்பிவிட வேண்டியது. என்ன இதுல இழுக்காதீங்க. என்னமோ பண்ணிட்டுப் போங்க."
ரமேஷ் வெறுப்போடு மாடிப்படி ஏறித் தன் அறைக்குச் சென்றார். மடால் என்று அவர் அறைக் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டது.
அருண் தனது அப்பாவின் நடத்தையைப் பார்த்து வெறுப்போடு தலையை ஆட்டினான். "அம்மா, நான் இதை நிறுத்தமாட்டேன். அப்பா இல்லை, அந்த டேவிட் ராப்ளேயே வந்தாலும் நான் இதை வெளியே தெரியப்படுத்தாம இருக்க மாட்டேன்."
கீதாவிற்கு அருணின் பேச்சு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அவரும், அருணை முழு மனதோடு ஆதரிக்க நினைத்தார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது போல, அந்த மர்மமான ஊராட்சி ஊழியரின் பெயர் இன்னொரு கடிதத்தில் வரும்வரை அவர்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியதுதான்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் போனது. சாயந்திரமாக பக்கரூவை மிஸ். கிளென் வீட்டில் கொண்டுவந்து விட்டார். இரவு ஆனது. மறுநாள் திங்கள் விடிந்தது. மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்திருந்தான் அருண். திங்கட்கிழமை ஆதலால் பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்றான். கீதாவும், ரமேஷும் தங்கள் வேலைக்குச் சென்றனர்.
மதியம் மூன்று மணி அளவில் பள்ளிக்கூடம் முடிந்து அருண் வீட்டுக்குத் திரும்பினான். வந்தவுடன் தபால் பெட்டியைத் திறந்து தன் பெயருக்குக் கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை. ஏமாற்றம் அடைந்தான் அருண். மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.
எப்பொழுதும் போல அப்பா, அம்மா திரும்பி வருமுன்னர் பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப் பாடத்தைச் செய்ய ஆரம்பித்தான்.
சிறிது நேரம் சென்றது. அருண் அரைமணிக்கு ஒருமுறை வீட்டின் வெளியே வந்து கடிதம் இருக்கிறதா என்று நப்பாசையோடு பார்த்தான். அவனுக்குத் தெரியும், தபாலில்தான் அடுத்த கடிதம் வரும் என்று. இருந்தாலும், ஒரு பரபரப்பு அவனுள் இருந்தது.
அம்மா வீடு திரும்பினார். அருண் நிசப்தமாக வீட்டுப்பாடம் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவன் எதிர்பார்க்கும் கடிதம் இன்னும் வரவில்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
"அருண், கடிதம் வந்தப்புறம் என்ன பண்ண போற? அதுக்கு இப்பவே கொஞ்சம் பிளான் பண்ணிக்க, சரியா? அந்த ஊழியர்கிட்டப் போய் நீ பேசப்போறியா? அவர் சொல்லப் போறதை சாட்சியமா வைக்கப் போறயா? அந்தக் கிணறு தோண்டுதல் பத்தி ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தப் போறியா? சாட்சியங்கள் வலுவா இல்லாம நம்மளால எதுவுமே பண்ண முடியாது. டேவிட் ராப்ளே தம்பி இருக்கானே, அவன் வில்லனுக்கு வில்லன். மோசமான ஆள். தனக்குத் தடைன்னு வந்தா, எதையும் உடைச்சு எறிஞ்சுடுவான்."
அருண் பேசாமல் அம்மா சொல்வதைக் கேட்டுக்கொண்டான்.
"ஒரு திட்டம் வச்சிருக்கேன் அம்மா. நான் எல்லாத்தையும் என்னோட நோட்டுல எழுதி வச்சுருக்கேன். நேரம் வரும்போது சொல்றேன்."
மறுநாள், செவ்வாய்க்கிழமையும் ஏமாற்றம்தான் மிஞ்சியது அருணுக்கு. கடிதம் தபாலிலும் வரவில்லை, கதவிடுக்கில் கூட வைக்கப்படவில்லை. அருணின் ஏமாற்றத்தைப் பார்த்து கீதாவுக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அப்படியே கழிந்தது. அருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வந்தே ஆகவேண்டிய கடிதம் வரவில்லை என்ற தவிப்பில் அங்கும் இங்கும் அலைந்தான். தனக்கு எப்போதும் கடிதம் எழுதுபவர் யார் என்று தெரிந்தால் நேரே போய் அவரிடமாவது கேட்டுப் பார்க்கலாம். ஆனால், அதுதான் பெரிய மர்மம் ஆயிற்றே? இவ்வளவு வருஷ காலமாக அந்த நபர் தனக்குத் தகுந்த சமயத்தில் கடிதம் எழுதி உதவியிருந்தாலும், அவர் ஆணா, பெண்ணா, முதியவரா, சிறியவரா என்று துளிகூடத் தெரியாது. ஆனால், அவர் மிகவும் விஷயமறிந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அருணுக்கு ஒரு தேவதைபோல தருணத்தில் உதவி செய்பவர்.
ரமேஷிற்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம்கூட நினைவே இல்லை. அவர் பாட்டுக்கு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். கீதாவிடமோ, அருணிடமோ எதுவும் கேட்காமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை மதியம் ஆயிற்று. சாயந்திரம் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக இரவும் ஆனது. அருண் எதிர்பார்த்த கடிதம் இன்னமும் வரவில்லை. ஏமாற்றத்தில் சோகம் தாங்க முடியவில்லை. அம்மாவிடம் பேசினாலே அழுகை வந்துவிடுமோ என்று நினைத்து இரவு டி.வி. பார்க்கக்கூட மனமில்லாமல் அறைக்குள் சீக்கிரமே படுக்கப் போய்விட்டான். கீதாவும் அவன் மனதை அறிந்துகொண்டு, அவனைத் தொந்தரவு செய்யவில்லை.
கீதாவுக்கு ரமேஷிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தான் நண்பர்களோடு சற்று நேரம் வெளியே போய், இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, இரவில் மிகவும் தாமதமாக வருவதாக எழுதி இருந்தார்.
கீதா சற்று நேரம் டி.வி. பார்த்தார். அதில் மனது ஒட்டவில்லை. சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று எடுத்தார். கூடவே ரேடியோவில் ஏதாவது கேட்கலாம் என்று தனக்குப் பிடித்த ‘Environmental Effects’ என்ற நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தார். அருணைக் கூப்பிடலாமா என்று நினைத்தார். அவன் அறையில் விளக்கு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது. அவனைத் தொந்தரவு பண்ண வேண்டாம், அறைக்குள்ளேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
மணி எத்தனை ஆனது என்று கீதாவுக்கு சற்றும் நினைவே இல்லை. அப்படியே புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு தூங்கிப் போய்விட்டார்.
"டிங் டாங்... டிங் டாங்..." அழைப்பு மணி ஒலித்தது. யாரோ அழுத்தினார்கள். மீண்டும் மீண்டும் அது ஒலித்தது. ரமேஷிடம்தான் வீட்டுச்சாவி இருக்கிறதே, எதற்காக மணி அடிக்க வேண்டும்? என்று தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து போய்க் கதவைத் திறந்தார் கீதா.
வயதானவர் ஒருவர் வெளியே இருட்டில் நின்றிருந்தார். "இதுதான் அருணின் வீடா?" என்று கேட்டார்.
(தொடரும்)
ராஜேஷ் |