புத்தகமும் வித்தகமும் நூலில் இருந்து
தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர் மு. அருணாசலம். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 'தமிழிலக்கிய வரலாறு', 'தமிழ்ப்புலவர் வரலாற்று நூல் வரிசை' போன்றவை இவரது நூல்களில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய 'புத்தகமும் வித்தகமும்' என்ற நூலில் இருந்து...

அத்தியாயம் 9 - அறியாமை
நான்கு ஆண்டுகளுக்கு முன்னே மயிலத்தில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் இளைஞர் மகாநாடொன்று நடந்தது. சமாஜத்துப் பெரியோர் பலர் என்னிடம் அன்புடையவர்கள் ஆதலால், என்னை அந்த இளைஞர் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று கேட்டார்கள். வயதில் நான் இளையவனாயிருந்தது ஒரு காரணம்; சமயமென்றும் சாத்திரமென்றும் புத்தகங்களையும் ஏடுகளையும் போட்டு நான் அச்சமயம் புரட்டிக் கொண்டிருந்தது மற்றொரு காரணம். சைவத்திலும் சித்தாந்தத்திலும் இவன் நிபுணனாயிருப்பான் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள் போலும்!

தலைமையும் 'வகித்தேன்'. சொற்பொழிவும் 'ஆற்றினேன்'. இவற்றிலெல்லாம் எனக்கு அப்போது மிக்கமகிழ்ச்சி. மகாநாடு நடந்து கொஞ்சநாள் கழித்து, 'நீங்கள் இந்தக் கருத்தைச் சொன்னீர்களல்லவா? மிகவும் நன்றாயிருந்தது.' என்று நண்பர் யாராவது என்னைப் பாராட்ட நேர்ந்த போதெல்லாம், என்னுடைய மகிழ்ச்சி அளவு கடந்து போய்விடும்.

இதையெல்லாம் இப்போது நினைத்தால் எனக்கே சிரிப்பாய்த்தான் இருக்கிறது. சமயத்தைப் பற்றியும் கடவுள் தத்துவத்தைப் பற்றியும் பேச எவ்வளவோ அனுபவம் வாய்ந்த பெரியோர்களும் அஞ்சுகிறார்கள். அந்தத் தத்துவம், ஒன்றா, பலவா? அது, குறித்த ஒன்றுதானா? அல்லவா? இருக்கிறதா? இல்லையா? இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்க முடியாது. இவை யாவும் உண்டென்றுஞ் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம். கடவுளாகிய நம்பி குடி வாழ்க்கையே இப்படி இருக்கும்போது, நமக்கு இங்கு என்ன பிழைப்பிருக்கிறது என்று ஞானிகள் எண்ணுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஞானியாக இல்லாமையால்தான், அன்று தலைமை வகிக்க நான் இணங்கிவிட்டேன். என்னை வந்து கேட்டதுபற்றி எனக்குப் பெருமைதான். யாருக்குத்தான் புகழுரையில் விருப்பமில்லை?

ஆனால் சமயத்தைப் பற்றி எனக்குத் தெரியுமா? 'வந்தவாறு ஏதோ? போமாறெங்ஙனே?' என்று தெரியாமல் அப்பர் சுவாமிகளே திகைக்கிறார். ஆகவே தெரியாதென்று ஒப்புக்கொள்வதற்கு (அன்று தலைமை வகித்திருந்தபோதிலும்கூட) இன்று நான் வெட்கப்பட வேண்டியதில்லை. தெரியாது என்று தைரியமாய் ஒப்புக்கொள்ளுகிறேன்.

நேற்று வீட்டில் என் தங்கைக்குக் கொஞ்சம் காய்ச்சலடித்தது. ஏன், என்ன என்பது நமக்கு அவ்வளவு எளிதாக விளங்கக் காணோம். நாட்டு வைத்தியனுக்குச் சொல்லியனுப்பினார்கள். அவன் வந்தான். வைத்தியன் என்றால், எவனோ என்று மலைக்க வேண்டும். பரியாரி கலியன் மகன் குப்பன்! எழுத்துக் கூட்டிக்கூட அவனுக்குப் படிக்கத் தெரியாது. வந்து தங்கையின் கைமீது மெல்லிய பட்டொன்றைப் போட்டு, கையைப் பிடித்து நாடி பார்த்தான். பார்த்துவிட்டு, "வாதம் கொஞ்சம் கனத்திருக்கிறது. ஒரு வேளை மருந்தில் குணமாகிவிடும்" என்று சொல்லி, ஏதோ ஒரு பொடியைக் கொடுத்துவிட்டுப் போனான். அவன் சொன்னபடியே ஓமச்சாற்றில் அப்பொடியைப் போட்டுக் கொடுக்க, காய்ச்சல் போய்விட்டது.

எனக்கோ நாடியா, அதில் வாதமா, அது கனப்பதா ஒன்றும் தெரியாது. ஆகவே குப்பனுடைய அறிவையும் அவன் தந்த பொடியின் வேலையையும் கண்டு எனக்கு அளவுகடந்த ஆச்சரியந்தான்.

என்னுடைய மைத்துனன் ஒருவன் சிறு பையன். வைத்தியக் கல்லூரியில் படிக்கிறான். அவனைக் கேட்டால் இன்னும் எவ்வளவோ சொல்கிறான். "இந்தச் சுரம் இன்ன இன்ன காரணத்தால் வந்தது. இன்ன சரக்குகள் உடம்பில் சேர்ந்தால் உடம்பு நிதானத்துக்கு வரும்" என்று சற்றுத் தெளிவாகவே இவன் சொல்லுகிறான். குப்பனைவிட இந்தச் சிறு பையன் அதிகமாகத் தெரிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் உயிர்ப் பொருள்களைக் குறித்த இரசாயனம் படிக்கும் மாணவனைக் கேட்டால், அவனுக்கு இன்னும் சில விவரங்கள் தெரிந்திருக்கின்றன. உடம்பில் என்னென்ன உலோகங்கள், வாயுக்கள் முதலியன சேர்ந்திருக்கின்றன, கொடுக்கும் மருந்தில் எவையெவை அடங்கியுள்ளன என்பனவெல்லாம் இவனறிந்த அளவு வைத்தியக் கல்லூரி மாணவனுக்குத் தெரியாது.

எனவே, இம்மூவரிடத்தும் உடம்பையும், மருந்தையும் பற்றிய அறிவு வெவ்வேறு வகையில் வளர்ந்தும் விரிந்தும் இருக்கக் காண்கிறோம்.

சின்ன விஷயமொன்று இப்போது ஞாபகம் வந்தது, சொல்லுகிறேன். ஒருநாள் மாலை தஞ்சாவூர் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் என் மனைவியும் குழந்தைகளும் இருந்தார்கள். சிறு பெண் ஒருத்தி பூ விற்றுக் கொண்டிருந்தாள். பூக்காரப் பெண்ணின் தந்திரத்தைச் சொல்லவேண்டுமா? குழந்தைகள், அதிலும் பெண்களைப் பார்த்துவிட்டால், சுற்றிச் சுற்றி வருவாளே தவிர, நாம் பூ வாங்கிக் கொடுக்காதவரையில் நம்முடைய மனைவிகள் அல்லது குழந்தைகள் தான் ஆகட்டும், நம்மை விடுவார்களா? ஆகவே வேறு வழியின்றி அவளைக் கூப்பிட்டேன்.

அவள் வந்தாள். ஏதோ கொஞ்சம் பேரம் பண்ணி ஓரணாவுக்குப் பூ வாங்கினேன். பூ மல்லிகைப் பூ என்று நினைத்துக் கேட்டேன். அவளோ, "இது மல்லிகைப் பூ அல்ல, இது பிச்சிப் பூ என்றாள். நான் விடவில்லை. பள்ளிக்கூடத்திலே மரஞ் செடி கொடிகளைப்பற்றி ஏட்டில் படித்த படிப்பு லேசில் என்னை விட்டதாக இல்லை. ஆகவே நான் கற்ற பாடத்தை அவளிடம் ஒப்புவிக்க ஆரம்பித்தேன்.

"இல்லையில்லை. இது மல்லிகைப் பூதான், பார். இதன் இதழ்கள் விரிந்துள்ள முறையும், இதன் நிறமும் மணமும் இது மல்லிகை என்பதைத்தான் காட்டுகின்றன. மற்றெந்தப் பூவும் இப்படியிராது. அதன் தோற்றமும் இப்படியிராது. தோற்றமே வேறு மாதிரியிருக்கும்" என்று ஆரம்பித்து, மல்லிகையைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்து முடித்தேன். நான் ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயராயிருந்து அவள் என்னிடம் பாடம் படிக்கும் மாணவியாயிருந்தாலும் இவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்க மாட்டேன்.

ஏதோ தெரியவில்லை. அந்தப் பூக்காரப் பெண் அந் நேரத்தில் அந்த ஸ்டேஷன் பிளேட்பாரத்தில் என் பிரசங்கம் முழுவதையும் பாவம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பிறகு நிதானமாக அவள் சிரித்துக் கொண்டே என்னை நோக்கிச் சொல்லலானாள் : "சாமி நீங்கள் என்னமோ பாடம் ஒப்பிச்சீங்க. அதெல்லாம் சரிதான். நீங்கள் சொன்னது மல்லிகைப் பூதான். மல்லிகைப் பூ என்றால் - அதிலே எத்தனை சாதி- உங்களுக்குத் தெரியுமா? இதோ இருக்கிறதே இந்தப் பிச்சிப்பூவும் அதிலே ஒரு சாதி. இன்னும் மற்ற சாதியெல்லாம் சொல்லுகிறேன் கேட்கிறீங்களா?" என்று சொல்லிவிட்டு, மடமடவென்று அடுக்கு மல்லிகை, நித்திய மல்லிகை, குண்டு மல்லிகை, குடமல்லிகை, காட்டு மல்லிகை, கஸ்தூரி மல்லிகை, மவ்வல் சாதி மல்லிகை முதலிய பெயர்களையெல்லாம் அடுக்கினாள். கடைசியாக, "சாமி மல்லிகையிலேயே மஞ்சள் மல்லிகை தெரியுமா உங்களுக்கு? இராம பாணம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றாள்.

நான் திக்குமுக்காடிப் போனேன். மல்லிகை எனக்குத் தெரியுமென்று சொல்லப்போக அதன் விளைவு இது! அடேயப்பா, எத்தனை சாதிதான் உண்டு இந்த மல்லிகையில்!

கடைசியாக அவள் இன்னொரு பாணத்தை விட்டாள். "சாமி மன்மத பாணம் வேணுமா உங்களுக்கு?" என்றாள்.

நான்தான் என்ன செய்யக்கூடும்? அவளோ சிறு பெண். எளிமையான ஒரு பூக்காரிதான் என்றெண்ணி அவளிடம் என் திறமையைக் காட்டப் போக, அவள் இப்படியெல்லாம் கேட்கிறாளே என்று என் மனத்தினுள்ளேயே ஒரு பரிதாபம். நல்ல காலமாக அவள், "அதுவும் மல்லிகையிலே ஒரு சாதிதான். சாமி என்னமோண்ணு நெனச்சுக்காதீங்க" என்று சொல்லிக்கொண்டே அப்பால் போய்விட்டாள்.

என்னுள்ளத்திலிருந்தும் ஒரு பெரிய சுமை நீங்கிற்று. கண்ணும் கொஞ்சம் திறந்தது. என்னவோ எல்லாவற்றையும் தெரிந்துவிட்டோம் என்ற செருக்கு இந்தச் சிறு பெண் காரணமாக நீங்கிற்றல்லவா? மல்லிகையைப் பற்றி அவள் அறிந்துள்ளதை நோக்கும்போது எனக்குத் தெரிந்தது எவ்வளவு அற்பம்? ஒன்றுமே தெரியாது என்று சொல்லிவிடலாம். ஆயினும், தெரியாது என்பதையே நான் இதுவரை தெரிந்துகொள்ளவில்லையே! ஆம் தெரியும் என்ற செருக்கு மிகவும் பொல்லாததுதான். சந்தேகமில்லை. 'எல்லாம் தெரியும்' என்றெண்ணியிருந்த ஔவையார், கேவலம் ஒரு மாட்டுக்காரப் பயலிடம் தெரியவில்லை என்று சொல்லித் தலைகுனிய வேண்டி வந்ததல்லவா? "பாட்டி சுடுகிற நாவற்பழம் வேண்டுமா, சுடாத நாவற்பழம் வேண்டுமா?" என்று கேட்டபோது ஔவையாருக்கு விளங்கவில்லை. பிறகு மணல் ஒட்டிய பழம் சுடுகிற பழம் என்றும், மணல் ஒட்டாத பழம் சுடாத பழம் என்றும் அவன் வேடிக்கையாக விளக்கிக் காட்டிய பின்னரே ஒளவையாருக்குக் கண் திறந்தது.

ஆகவே, இவ்வளவிலும் உண்டான கோளாறு என்ன? அறியாமையைக் கண்டு ஏற்பட்ட அச்சம். 'தெரியாது' என்று ஒப்புக்கொண்டுவிட்டால் குறைந்துபோய் விடுவோமே என்று எல்லோருக்குமே அச்சந்தான். இந்த அச்சம் அவசியம்தானா? இது நியாயமாகுமா?

உலகம் எவ்வளவோ விரிந்து கிடக்கிறது. அதிலுள்ள பொருள்களின் வகை, தொழில்களின் வகை எத்தனை எத்தனையோ. மக்களுடைய ஆயுட்காலம் மிக மிகக் குறைவுதான். ஒருவர் எவ்வளவுதான் அறிவிற் சிறந்தவராயிருந்த போதிலும், ஆற்றல் மிகுந்தவராயிருந்தபோதிலும், எவ்வளவுதான் அவர் அறிந்துகொள்ள முடியும்? 'கல்வி கரையில, கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கில் பிணி பல' என்பது பழைய வாக்கியம். பிணி பலவற்றுக்கு இரையாகாமல் இருந்தாலும் ஒருவர் பலவற்றையும் அறிதல் இயலாத காரியம். அப்படியே ஒரு பொருளைப் பற்றியுள்ளவை அனைத்தையும் முடியக் கண்டேன் என்று சொல்வதும் ஒருவருக்கு இயலாத காரியந்தான்.

செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது என்ற மாதிரி, எத்தனையோ ஆயிரம் செலவு செய்துதான் பட்டம் கிடைத்தது உண்மைதான். ஆனால் படித்து அறிந்திருக்கிறேன் என்று உறுதியாக நான் எண்ணியிருந்த விஷயத்தில், கேவலம் ஒரு சிறு பெண் எவ்வளவு அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறாள்! அவள் பெற்றிருக்கும் அறிவை நோக்கும்போது, நான் அறிந்துள்ளது ஒன்றுமேயில்லை தானே? ஆனால் அவள் அறிந்துள்ளதுதான் அவ்வளவு அதிகமாகுமா? கவனித்துப் பார்த்தால் இல்லையென்பது தெரியவரும். மல்லிகையைப் பற்றிச் சிறு பெண்ணாகிய அவளுக்குத் தெரிந்திருப்பதைவிட அதே தொழிலில் நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டிருக்கும் தோட்டக்காரனான அவளுடைய தந்தைக்கு எவ்வளவு அதிகமாகத் தெரியும்?

அவனோடு ஒப்புநோக்க அவளுக்குத் தெரிந்தது சொற்பந்தான்.

இப்படியே நெடுகிலும் சொல்லிக்கொண்டு போகலாம். ஒருவரை நோக்க ஒருவர் அறிவு மிகுதியாகிக் கொண்டேயிருப்பதைக் காண முன்னவருக்கு வெட்கமும் அச்சமும் உண்டாகாமலிருக்க முடியாது. நம்மவர்கள் இதைக் குறித்து மிகவும் சிந்தித்திருக்கிறார்கள். சிந்தித்துச் சிந்தித்து இந்த அறியாமையைக் குறித்து யாரும் பின்னடைய வேண்டுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். கலைகள் யாவற்றுக்கும் தலைவியான கலைமகளைப் பற்றிய கற்பனையை இங்கு நினைவு கூர்வோமானால் இதன் உண்மை விளங்கும். சரசுவதியின் திருவுருவத்தைப் பார்த்தால் ஒரு கையில் ஏட்டுச்சுவடியிருப்பதைக் காணலாம். இந்திய நாட்டு மக்கட் சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு வழிபட்டு வருகின்ற சரசுவதி தேவியே இன்னும் கைமீதிற் புத்தகமேந்திக் கற்று வருகின்றாள் என்பது நம்மவர் கற்பனை. கற்றது அவ்வளவு சொற்பந்தான். கற்க வேண்டியதோ மிக அதிகம்.

'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்று உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்" என்ற தனிப்பாடல் மேற்கூறிய கற்பனையின் உட்கருத்தை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகவே கலைமகளே மேலும் கற்று வருகின்றாள் என்ற கருத்து வழங்கும்போது, அறியாமையைக் கருதி அஞ்ச வேண்டியதில்லை.

மு. அருணாசலம்

© TamilOnline.com