'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே கவிதை எழுதுவதில் ஈடுபாடு இருந்தது. அப்போதே 'குமரன் பாட்டு' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
இவரைச் சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், இவரைத் தனது வீட்டிலேயே தங்கவைத்து, திரைப்பட, நகைச்சுவை எழுத்துப்பணிகளுக்கு உதவியாளராக வைத்துக் கொண்டார். கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை வில்லுப்பாட்டு வடிவில் மறு ஆக்கம் செய்ய ஊக்குவித்தார் என்.எஸ். கிருஷ்ணன். ஒருபுறம் வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் மறுபுறம் எழுத்தாளராகவும் பரிணமித்தார் சுப்பு ஆறுமுகம். என்.எஸ். கிருஷ்ணைன் பல படங்களுக்கு நகைச்சுவை வசனங்களை எழுதிக் கொடுத்ததுடன், நாகேஷ் நடித்த பல படங்களுக்கும் நகைச்சுவை வசன ஆசிரியராக இருந்தார்.
சிறுகதைகள் எழுதியுள்ளார். 'வில்லிசை மகாபாரதம்', 'வில்லிசை இராமாயணம்', 'நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்' போன்ற நூல்களை எழுதியுள்ளார். வானொலி நாடகத் தொடர்களில் பங்களிப்புச் செய்துள்ளார். அவற்றுள், 'மனிதர்கள் ஜாக்கிரதை', 'காப்பு கட்டி சத்திரம்' போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. தியாகராஜர் இயற்றிய தெலுங்குப் பாடல்கள் மட்டுமே பாடப்படும் திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை, தமிழில், வில்லுப்பாட்டில் அரங்கேற்றினார். காந்தி கதை, புத்தர் கதை, பாரதி கதை, திலகர் கதை என பல தலைப்புகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். காஞ்சி மகா பெரியவரின் ஊக்குவிப்பில் மகான்கள் பலரது வாழ்க்கைச் சரிதத்தையும் வில்லுப்பாட்டில் தந்துள்ளார்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
அக்டோபர் 10, 2022 அன்று சுப்பு ஆறுமுகம் காலமானார். |