தமிழ்நாட்டில் கரூரை அடுத்த சிற்றூர் ஒன்றில் ஆடு வளர்த்து அந்த வருவாயில் இவரைக் கோவை PSG கல்லூரியில் பொறியியலும், IIM லக்னௌவில் மேலாண்மையும் படிக்க வைத்தார் இவரது தந்தை. ஆனால் அவர் மகனைச் சிங்கமாகத்தான் வளர்த்தார் என்பது பின்னர் தெரியவந்தது. ஓர் IPS அதிகாரியாக இவர் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய போது இவரைச் 'சிங்கம்' என்றுதான் அழைத்தார்கள். கிரிமினல்களுக்கு இவர் சிம்ம சொப்பனம். பணபலம், ஆள்பலம் என்று எதுவும் இல்லாத நிலையிலும் பணியைத் துறந்து, அரசியலில் குதித்தார். பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உயர்ந்துள்ள இந்த 38 வயது இளைஞரின் பெயர் கே. அண்ணாமலை. இடையறாத உழைப்பு, தெளிவான சிந்தனை, அஞ்சாத நெறிகள், எளிமை, பணிவு, அடக்கம் என்னும் பண்புகளால் மக்களைக் கவர்ந்துள்ள இவர், Aspen Institute அமைப்பின் தலைமைப் பண்புகளுக்கான ஃபெல்லோஷிப் நிகழ்ச்சியில் பங்கேற்க சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வந்திருந்தார். தமிழர்கள் மட்டுமே அன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவரும் அவர் உரையாற்றியதைக் கேட்க விரும்பியதால் மூன்று முறை அரங்கத்தை மாற்ற வேண்டியதாயிற்று. முதலில் வந்த 500 பேர் மட்டுமே அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க முடிந்தது! வாருங்கள், 'தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்றதாய் என்று கும்பிடும்' அண்ணாமலையோடு சற்று உரையாடுவோம்...
கேள்வி: சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வந்திருக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம். நீங்கள் இங்கே ஆஸ்ப்பென் இன்ஸ்டிட்யூட் ஃபெல்லோஷிப் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறீர்கள். அது எப்படி உங்களுக்குப் பயனுள்ளது என்பதைக் கூறுங்கள்? பதில்: 1950 காலகட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நல்ல சமுதாயத்திற்கான தலைவர்களை உருவாக்கும் பயிற்சிகளை அளிக்கும் நோக்கத்துடன் இது நிறுவப்பட்டது. இந்த முறை சான் டியகோவில் நடைபெற்ற பயிற்சியில் மத்திய கிழக்கு, பனாமா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, சீனா போன்ற 17 நாடுகளில் இருந்து வந்திருந்த நண்பர்கள் பங்கேற்றனர். அவர்களது கருத்துகளை, பார்வைகளை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தியா குறித்த அவர்களது பார்வைகளை அறிய முடிந்தது. இந்தியாவைச் செழுமையான, ஒழுக்கமான கலாச்சாரம் உடைய நாடாக அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை இப்படி ஓர் உயர்கல்விச் சபையில் அறிந்துகொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மொத்தத்தில் நிறைவான அனுபவம்.
கே: கலிஃபோர்னியாவில் பல இடங்களுக்கும் பயணம் செய்துள்ளீர்கள். தமிழகத்திற்கு இங்கிருந்து எடுத்துச் செல்லத் தக்க விஷயங்கள் யாவை? ப: கலிஃபோர்னியா ஒரு வளர்ந்த மாகாணம். உலகின் தொழில்நுட்பத் தலமையிடம். மாபெரும் நிறுவனங்களைக் கொண்டது. பெருமைக்குரிய பல்கலைக்கழகங்கள், சிலிக்கான் வேலி போன்றவற்றைக் கொண்ட மாபெரும் மாநிலம். இவை அனைத்தையும் நேரடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், சான் டியகோ என ஒவ்வொரு நகரமும் தனித்தன்மையுடன் அமைந்துள்ளது. தமிழகம் ஏன் இந்தியாவின் கலிஃபோர்னியா ஆகக்கூடாது என்கிற எண்ணம் எனக்குள் வந்துள்ளது. இந்த மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் பிரமிக்க வைக்கின்றன. கிட்டத்தட்ட அடுத்த 50, 100 ஆண்டுகளுக்குத் தேவையான கட்டமைப்புகள் 30களிலேயே உருவாக்கப் பட்டுவிட்டன. அடிப்படை உள்கட்டமைப்பு உருவாக்கப் பட்டுவிட்ட எந்தவொரு நாட்டின் வளர்ச்சியையும் யாரும் தடுத்துவிட முடியாது என்பதை கலிஃபோர்னியா மாகாணம் ஒவ்வொரு நொடியும் எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இரண்டாவதாக, பே ஏரியாவில் சந்தித்த தமிழர்களும் பிற இந்தியர்களும் அபாரமான திறமை உள்ளவர்களாக, பெரும் நிறுவனங்களை நிர்வாகிப்பவர்களாக உள்ளனர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தாலும் தமிழ், இந்திய அடையாளங்களை அவர்கள் பேணுவதைக் காணும்பொழுது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கலிஃபோர்னியா போலத் தமிழகத்தையும் தொழில் தொடங்கவும், உயர்கல்விக்கும், வளர் தொழில் முனைவோருக்கான வசதிகளுக்கும் உகந்ததொரு மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஐ.பி.எஸ். அதிகாரியாக அண்ணாமலை
கே: சமீப காலமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வருகை தரும் விசா பெறுவதில் பெரும் காலதாமதம், காத்திருத்தல் நிகழ்கிறது. இதை வேகப்படுத்த இந்திய அரசு எடுத்திருக்கும் முயற்சிகள் யாவை? ப: சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரை நான் சந்தித்தபொழுது இது குறித்துப் பேசினேன். இங்கு பணி புரியும் இந்திய வம்சாவழியினருக்கு அவர்களின் பெற்றோர், உறவினர்களின் வருகை அவசியம் தேவைப் படுகிறது. விசா வழங்குதலை விரைவு படுத்தும்படி நான் அவரிடம் வலியுறுத்தினேன். இருந்தாலும், நான் இந்தியா திரும்பிய பின்னர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்ஷங்கர் அவர்களிடம் இந்தப் பிரச்சனையை அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்று, இதனை விரைவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கோர இருக்கிறேன்
கே: நீங்கள் சிலிக்கான் வேலிப் பகுதியில் உள்ளீர்கள். இங்குள்ள தமிழ் மற்றும் பிற மாநில இந்தியத் தொழில்முனைவோர் தமிழகத்தில் எந்த வகைகளில் பங்களிக்கலாம்? ப: இப்பகுதி வாழ் இந்தியர்கள் பலரும் முடிவெடுக்கும் சக்தி உடைய தலைவர்களாக, ஆயிரமாயிரம் கோடி முதலீடுகளைத் தீர்மானிக்கும் சக்தியுடையவர்களாக, தலமை நிர்வாகிகளாக இருக்கிறார்கள். பல்வேறு தொழில்நுட்பங்களில் நிபுணர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் இந்தியக் கல்லூரிகளில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறார்கள், இந்தியாவில் தொழில் தொடங்கவும், கல்வி, அனுபவங்களைப் பகிரவும், தொழில் முனைவர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கவும், முதலீடுகள் செய்யவும், சேவைகள் செய்யவும் தயாராக உள்ளார்கள். அனைவரிடமும் இந்தியா, தமிழகம் குறித்து மிகுந்த நம்பிக்கை உள்ளது. இவர்கள் அனைவரது திறன்களையும் , தொழில் முதலீட்டு ஆர்வங்களையும் ஒருங்கிணைத்து இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், கொண்டு சென்று இவர்களின் பங்களிப்புகளை உரிய விதங்களில் பயன்படுத்திக் கொள்ளத் தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும். அவர்களது அனுபவத்தையும் முதலீடுகளையும் அறிவையும் தக்க விதங்களில் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்.
கே: அமெரிக்காவாழ் இரண்டாம் தலைமுறை இந்தியர்களிடம் எந்த வகையில் இந்தியாவுடன் அதிகப் பிணைப்பை உண்டாக்க முடியும் அதற்கான மத்திய அரசின் முயற்சிகள் யாவை? இரண்டாம் தலைமுறை இந்திய அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இந்தியா மீதான புரிதலை உருவாக்குவது எப்படி? ப: நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராக வந்த பிறகு OCI கார்டுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. 'ப்ரவாசி பாரதிய திவஸ்' என்ற நிகழ்ச்சியை ஒரு சம்பிராதயமாக அல்லாமல் ஆத்மார்த்தமான அக்கறையுடன் நடத்தி, பல தலைமுறை தாண்டிய இந்திய வம்சாவழியினரை பாரதத்துக்கு அழைத்து வந்து, அவர்களின் இந்திய வேர்களை அறிமுகப் படுத்தி, அவர்களை இந்தியாவுக்கு அடிக்கடி பயணிக்கச் சொல்லி, இந்தியாவுடனான அவர்களது வேர்களைப் புதுப்பிப்பதில் பெரும் முயற்சியை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினரை தங்கள் குடும்பத்துடன் தமிழகத்திற்கு வருமாறு அழைக்கின்றோம்.
தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், கோவில்களை எல்லாம் அவர்கள் தமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அழைக்கின்றோம். குடும்பத்துடன் வந்து தங்கள் குலதெய்வக் கோவில்களில் வழிபடுவதன் மூலமாக தங்களது மூதாதையரின் வேர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். சடங்குகள், சம்பிரதாயங்கள், குலதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தமிழ் கலாச்சாரத்தில் இன்றியமையாத அங்கம் வகிக்கின்றது. இந்தத் தலைமுறையும், வரும் தலைமுறையினரும் பாரம்பரியமிக்க இந்தத் தொடர்புகளைத் துண்டித்து விடாமல் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டியவைகளைச் செய்ய வேண்டும். இதை எனது அன்பான வேண்டுகோளாக வைக்கின்றேன். தமிழக அரசு இதை ஒரு வெளிநாடுவாழ் தமிழர்களை வரவேற்கும் அரசுத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றேன்.
அடுத்த தலைமுறை இந்தியர் பலரும் அமெரிக்க அரசியலில் ஈடுபட்டுப் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சில நேரங்களில் அரசியல் நடுநிலை காக்க முற்படுவது இயற்கையே. ஆனால், இங்கு வாழும் இந்தியர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு, அவர்களுக்கு இந்தியா குறித்த உண்மை அறிமுகத்தை அளித்து, இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, இந்தியத் தரப்பின் உண்மை நிலைய எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தலாம். இந்திய வம்சாவழியினரே அரசியல்வாதிகளிடம் தக்க புரிதல்களைக் கொணர முடியும்.
கே: ஐ.பி.எஸ். பயிற்சியின் வழியே நீங்கள் ஒரு அரசியல்வாதியாகப் பெறும் பயன்கள் யாவை? ப: பயிற்சியின் பொழுது கிடைத்த ஒழுக்கம், கட்டுப்பாடு, மக்களைச் சந்திப்பது பெரும் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது, விவேகமாக பிரச்சனைகளை அணுகுவது போன்ற பயிற்சிகள், காவல்துறை வேலையின் பொழுது கிடைத்த அனுபவங்கள் ஆகியவை இப்பொழுது அரசியலிலும் பெரும் உதவி புரிகின்றன.
கே: இன்றைய சூழலில் சமுதாய ஊடகங்கள் வழியே மறைமுகத் தகவல் போர்களைப் பிற நாடுகளில் ஏவி விடுவது சாத்தியப் பட்டுள்ளது. வாட்ஸாப் மூலமாகவே பெரும் கலவரங்களை ஏற்படுத்திவிட முடிகிறது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கெனத் தனியான தொழில் நுட்பங்களை வளர்த்தெடுப்பது தேவை என்பதை உணர்கிறீர்களா? ப: இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளை நான் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால் ஒரு தகவல் தொழில்நுட்பப் போரின் மூலமாக இந்தியாவைப் பணிய வைத்து விடலாம் என்று எவரேனும் நினைத்தால் அது மிகத்தவறு. அதை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராக உள்ளது.
கே: அமெரிக்காவாழ் தமிழ் மக்களுக்கான உங்களது செய்தி? முதலில், நம் வெளிநாடுவாழ் தமிழர்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. ஔவைப் பாட்டி கூறியது போல, திரைகடல் ஓடித் திரவியம் தேடியுள்ளார்கள். எந்தவொரு நாட்டின் எல்லையோ, மலையோ கடலோ உங்களைக் கட்டிப் போட்டுவிட முடியாது அதையும் தாண்டி எங்கு சென்றாலும் தன் திறமையின் மூலமாக வெற்றி பெற்றுள்ளான் தமிழன் என்பது பெருமைக்குரியது. சோழன் கடல் கடந்து பல நாடுகளுக்குச் சென்று வென்றுள்ளான். அது போலவே இங்குள்ள தமிழர்களும் வெற்றிகள் பல அடைந்துள்ளார்கள். அவர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தமிழ் என்ற தொப்புள்கொடி உறவின் மூலமாக நம்முடன் இணைந்திருக்கிறார்கள்.
அவர்கள் குழந்தைகளைச் சந்தித்தேன். இந்தக் குழந்தைகள் பலரும் தமிழகத்திற்கு இன்னும் வந்ததுகூடக் கிடையாது இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். அதற்காக அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் செய்தி
இரண்டாவதாக, உங்கள் அனைவரது பங்களிப்பையும் முடிந்தவரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். நீங்கள் அடிக்கடி அங்கு வரவேண்டும் அங்கு உங்கள் அனுபவங்களைப் பகிர வேண்டும். அரசாங்கம் மூலமாகவோ அல்லது தனியாகவோ நீங்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு பங்களிப்பதற்கு ஏராளமான தேவைகள், வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அவற்றைப் பயன்படுத்தி, பகிர்ந்துகொண்டு தமிழகத்தை, இந்தியாவை உயர்த்த வேண்டும்.
மூன்றாவதாக, இந்தியாவின் பெருமைகளை பிற அமெரிக்கர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் பொழுதும் பிற முயற்சிகளின் பொழுதும் அரசும் அரசும் நேரடியாகச் செயல்பட்டாலும் பின்னணியில் இந்திய வம்சாவழியினர் அளித்த ஒத்துழைப்பும் முக்கியமானது. பல்வேறு துறைகளிலும், குறிப்பாக மருத்துவத் துறை, தொழில்நுட்பத் துறைகளில் பங்களிக்கிறீர்கள். அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி, ஒரு சிவில் சொசைட்டியாக இந்தியா குறித்த நல்லெண்ணங்களைப் பிற அமெரிக்கர்களிடம் ஒரு தூதுவராகக் கொண்டு செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
உரையாடல்: 'தென்றல்' நிருபர் |