தென்றல் பேசுகிறது...
இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாயை எண்ணிய வடிவில் (இ-ரூபாய் அல்லது Central Bank Digital Currency - CBDC) சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வழியே ஒரு முன்னோட்டத் திட்டமாக வெளியிட உள்ளது. ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகத்தைப் (Unified Payments Interface - UPI) பயன்படுத்தும் BHIM, PayTM போன்றவற்றால் நொடியில் நிகழும் ஆயிரக் கணக்கிலான பண மாற்றங்களின் (money transfers) எண்ணிக்கை உலகை வியக்க வைத்திருப்பது போல, இ-ரூபாயும் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம்தான். கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தும் அதே பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்படும். ஆனால் ஒரு இ-ரூபாயின் மதிப்பு, ஒரு ரூபாய் ஆகவே இருக்கும். ஊக விளையாட்டுகளுக்கு இதில் இடமில்லை. தொடக்கத்தில் இ-ரூபாய் சில குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே பரீட்சார்த்தமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில் மொத்த வணிகம் மற்றும் பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களில் இ-ரூபாய் அனுமதிக்கப்படும். இதனால் நாடும், பொருளாதாரமும் பெறப்போகும் பலன்களை விவரிப்பது இங்கு சாத்தியமில்லை என்றாலும், நிச்சயமாக இவை உலகின் கண்களைத் திறப்பதாக, இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்துவதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

★★★★★


இந்திய வம்சாவழியில் வந்த, 42 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றதில் நமக்கு மகிழ்ச்சியே. ஒரு கடினமான சூழலில் அவர் இந்த முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார். "When the going gets tough, the Tough get going" என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட உறுதி கொண்டவராகவே பாரதப் பாரம்பரியத்தை மதித்துக் கடைப்பிடிக்கும் இந்த ரிஷி காணப்படுகிறார். அவரை வெற்றி பெற வாழ்த்துவோம். இந்த மாநிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.

★★★★★


மிகச் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பாலும் திறமையாலும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வியைச் சிறப்பாக முடித்து, IPS பதவியில் இருந்த போதிலும், சமுதாயத்துக்கு உழைக்கும் ஆர்வத்தால் அந்தப் பதவியைத் துறந்து அரசியலில் குதித்தவர் K. அண்ணாமலை. அண்மையில் அமெரிக்காவின் விரிகுடாப் பகுதிக்கு வந்திருந்த அவரோடு நாம் நிகழ்த்திய அரசியல் கலக்காத உரையாடல் இவ்விதழின் மகுடம். பூண்டி அரங்கநாத முதலியார், அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள், தேவி நாச்சியப்பன் குறித்த கட்டுரைகளும் சிறுகதைகளும் பிறவும் வழக்கம்போல மணம் கமழும் பல்சுவை விருந்து.

வாசகர்களுக்கு குரு நானக் ஜெயந்தி, ஸ்ரீ சத்திய சாயி பாபா அவதாரத் திருநாள் மற்றும் நன்றி நவிலல் நாள் வாழ்த்துகள்.

தென்றல்
நவம்பர் 2022

© TamilOnline.com