இது சிறைப்பறவைகளின் முழக்க மல்ல! சிறை பிடிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் புலம்பல் புகலிடம் தேடிய புண்ணியர் எம்மை புன்னகையுடன் வரவேற்றது - அமெரிக்கச் சிறை! சொந்தபந்தம் இழந்து, தாய்நாட்டு மணம் இழந்து தவித்த எம்மவர்க்குத் தென்றலென வீசி அன்னை போல் அணைத்துத் தமிழ்ப்பால் ஊட்டும் தென்றல் இதழே! உன் வருகை மாதம் ஒரு முறையெனிலும் - எம் தவிப்பறிந்து எப்பொழுதும் இங்கு மணம் வீசுவாயா?
சிறைவாழ் இலங்கைத் தமிழர்
*****
ஸ்மைல் பரமசிவனின் பலவித சேவைகள், ஒரு சகாப்தத்தின் முடிவு என்கிற தலைப்பில் காலம் சென்ற இசைக்குயில் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய விவரமான கட்டுரை மிக நன்று. தவிர திருவியலூர் அய்யாவாளின் அற்புத வரலாறு மனதைத் தொடுகிறது.
தவிர ஸ்மைல் பரமசிவனைப் போல் இன்னும் பலர் நம் நாட்டில் தோன்றினால் நரகமாக இருக்கும் இடங்கள் கண்டிப்பாக நகரமாக ஆகிவிடும்.
மேன்மை தாங்கிய தமிழ்நாட்டு முதல்வரை 'குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா' என்கிற தலைப்பின் கீழ் படத்துடன் எழுதப்பட்டுள்ளது, எனக்கு அதிர்ச்சி அளித்தது. முதல்வர் என்கிற ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
மேலும் 'வெளியே ஜெயேந்திரர் உள்ளே விஜயேந்திரர்' என்கிற வேண்டாத, அருவருப்பான தலைப்பில் சிலேடையாகவும், தப்பாகவும் குறிப்பிட்டு இருப்பது வருந்தத் தக்க விஷயம். நவம்பர் மாதம் 11ம் தேதி ஸ்ரீஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார் என்கிற விஷயத்தை டிசம்பர் 12ம் தேதி என்று தவறாகக் குறிப்பிட்டு இருப்பதும் துரதிர்ஷ்டம்தான்.
இம்மாதிரி எழுதியதற்கு ஆசிரியருக்கு தனிப்பட்ட முறையிலே நிம்மதி இருக்கலாம். ஆனால் பெருவாரியான மக்களை புண்படுத்தி விட்டார்.
அட்லாண்டா ராஜன்
*****
அமெரிக்காவில் தமிழ்த் தென்றலாக 'தென்றல்' மாதந்தோறும் வீசிக்கெண்டிருப்பது தமிழர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தருகிறது என்றால் மிகையாகாது.
ஜனவரி, 2005 இதழில் வந்துள்ள 'புதிய வீராண விரிவாக்கத் திட்டம்' பற்றிச் சில கருத்துக்களை ஓய்வு பெற்ற இணைத் தலைமைப்பொறியாளர் (பொ.ப.து) என்ற முறையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த தண்ணீர் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு, பின்னர் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தால்தான், இந்தத் திட்டம் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கிடைக்கும். கிடைக்கும் தண்ணீர் அளவு 1 டி.எம்.சி.தான். தேவை 15 டி.எம்.சி.
சென்னையின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க காவிரியே கதி. ஈரோட்டுக்கு அருகே உள்ள பள்ளிபாளையத்திலிருந்து திறந்த வெளிக் கால்வாய் மூலம் சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் கொண்டு வரலாம். கடல் மட்டத்திலிருந்து பள்ளிபாளையம் 153 மீட்டர் உயரத்தில் உள்ளது. செம்பரம்பாக்கம் 25-50 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதனால் இயற்கையான ஈர்ப்பு விசையிலேயே தண்ணீர் சென்னைக்கு வந்து சேர்ந்துவிடும்.
பள்ளிபாளையத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 300 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சென்னைக்குத் தேவை 15 டி.எம்.சி.தான். தமிழகத்தின் பங்கில் இருந்தே குடிநீருக்கு காவிரியில் தண்ணீர் எடுப்பதால் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. இது மொத்தத்தில் 4 சதவீதம் என்பதால் காவிரிப் பாசனம் மிகச் சிறிதளவே பாதிக்கப்படும்.
தன்னலம் கருதாத, நாட்டுநலனில் அக்கறை கொண்டவர்கள் அரசுக் கட்டிலில் அமரும் போதுதான் இத்தகைய திட்டங்கள் நிறைவேறும்.
க. அழகியகிருஷ்ணன், சான் ஹொசே, கலி.
*****
தென்றல் இதழைத் தொடர்ந்து படிக்கிறோம். சிறப்பாகவும் தரமாகவும் உள்ளது. நிறைய உபயோகமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. புழைக்கடைப்பக்கம் மற்றும் சிறுகதைகள் நன்றாக உள்ளன.
அகிலா சரவணன், யூனியன் சிடி, கலி.
*****
பல கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றி, தற்போது சேலத்திலுள்ள VMRF நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தேர்வுகள் இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன்.
இங்கே 'தென்றல்' எனக்கு மகிழ்ச்சியான வியப்பை அளித்தது. அருமையான வடிவமைப்பு, நறுக்கென்ற நடையும் மொழியழகும் கொண்ட கட்டுரைகள் - இவற்றுக்காக 'தென்றல்' குழுவினரைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் 90 சதவீத வணிகப் பத்திரிகைகளைவிட உயர்வாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. நாற்பதாண்டுகால வாசக அனுபவத்தில் இதை நான் சொல்கிறேன்.
இங்கே நம் பெண்கள் நெற்றியில் பொட்டும் கழுத்தில் திருமாங்கல்யமும் அணிவதில்லை என்பதைக் காண எனக்கு வருத்தமாக இருக்கிறது. 'காலி நெற்றியும் மூளிக்கழுத்தும் ஏன்?' என்று பலரைக் கேட்டேன், யாரும் சரியான பதில் தரவில்லை. சீக்கியரும் முஸ்லிம்களும் தம் தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லையே. தமிழைத் தவிர வேறு மொழியில் திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஒரு பக்கம். இங்கோ, நம்மைப் பாதிக்காதவரை எல்லாக் கொள்கை, கோலங்களையும் மதிக்கும் ஒரு சுதந்திர நாட்டைப் பார்க்கிறோம்.
டாக்டர் அ. பாலசுந்தரம், ஜேன்ஸ்வில், விஸ்கான்சின்
*****
சாகித்ய அகாதமி விருதை ஈரோடு தமிழன்பன் அவர்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சி தரத்தக்க செய்தி. தமிழன்பன் அவர்களைப் பற்றி அமெரிக்கத் தமிழர்கள் அறிந்து கொள்ள தென்றல் அவரை நேர்காணல் செய்ய வேண்டுகிறேன்.
அதிநவீன தொழில்நுட்பம், போக்குவரத்து வசதிகளில்லாத நூறாண்டுகளுக்கு முன்னரே, அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழகமோ செய்ய வேண்டிய மாபெரும் தமிழ்ப் பணியை, அயராத முயற்சியால் தனிமனிதராகச் சாதித்த ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டு பிரமிக்க வைக்கிறது!
வெற்றுக் கூச்சல்களாலும், விளம்பரத்துக்கான போராட்டங்களாலும் தமிழை வளர்க்க முடியாது - மாறாக, தமிழை முறையாகக் கற்று, தமிழில் உள்ள நூல்களைக் கற்று அவற்றில் உள்ள சிறந்த கருத்துக்களை மக்களிடையே எடுத்துக் கூறினால், தமிழ் நாட்டில் மட்டுமல்ல, கடல் கடந்தும் தமிழ் வாழும் - சிறப்பாக வளரும் என்பதை வெளிநாட்டில் பிறந்து தமிழுக்காக வாழ்ந்து மறைந்த அறிஞர் ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டு நமக்கு உணர்த்துகிறது.
மதுசூதனன் அவர்களுக்கும் 'தென்றல்' குழுவினர்க்கும் எமது மனமார்ந்த பாராட்டுதல்கள்!
சென்னிமலை பி. சண்முகம், நியூயார்க் |