தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த சிறந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் விக்கிரமாதித்யன் போன்றோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டுக்கான விருதுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அறிவழகன் என்னும் இயற்பெயர் கொண்ட சாரு நிவேதிதா 45 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, காமரூப கதைகள், எக்ஸைல், நான் தான் ஔரங்கசேப் போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், நேநோ, ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள். இவர் ஆரம்ப காலங்களில் எழுதிய கோணல் பக்கங்கள், தீராக்காதலி மற்றும் தப்புத் தாளங்கள், தாந்தேயின் சிறுத்தை, மூடுபனிச் சாலை, எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது, கடவுளும் நானும், வாழ்வது எப்படி? போன்றவை முக்கியமான கட்டுரை நூல்களாகும். முன்னோடி தமிழ் இலக்கியவாதிகள் பற்றி ஆராய்ந்து சாருநிவேதிதா எழுதியிருக்கும் 'பழுப்பு நிறப் பக்கங்கள்' தமிழ் இலக்கிய உலகின் காலம் காட்டும் கண்ணாடியாக மதிப்பிடப்படுகிறது.

விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும், கொண்டது. பரிசு பெறுபவர் பற்றிய விரிவான ஆவணப் படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்புகள் பற்றிய புத்தகங்களும் வெளியிடப்படுவது இந்த விருதின் முக்கியச் சிறப்பு.

சாருநிவேதிதாவுக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com