பாண்டவர்களின் புனிதக் கதையை உலகியல் நோக்கத்திற்குப் பயன்படுத்த எண்ணினார் தில்லி அரசர் தானேஷா. அதற்காக அவர் விஜயநகரத்தின் புகழ்பெற்ற எட்டு கவிஞர்களைத் தனது அரசவைக்கு வரவழைத்தார். மகாபாரதத்தின் சிறப்பை விரித்துக் கூறுமாறு அவர்களைக் கேட்டார் அரசர். அவர்களும் மிக அழகாக, வசீகரமாக அதை விவரித்தனர். அதைக் கேட்டபின் தானேஷா ஒரு புதிய காவியத்தை இயற்றக் கூறினார். அதில் மூத்த பாண்டவரான தர்மராகத் தன்னையும், பிற பாண்டவ சகோதரர்களாகத் தனது மந்திரிகளையும், தனது எதிரிகளைக் கௌரவர்களாகவும் வைத்து எழுதச் சொன்னார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர் ஒரு தானேஷா பாரதம் எழுதச் சொன்னார்.
கவிஞர்கள் அப்படி ஒரு காவியத்தை எழுத இஷ்டப்படவில்லை. நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தமக்குள் விவாதித்தனர். அவர்களிடையே இருந்த மிகவும் கெட்டிக்காரப் புலவனான தெனாலி ராமகிருஷ்ணா இந்தக் காவியத்தை எழுத முன்வந்தான். தானேஷாவுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க அவன் விரும்பினான். அதை எழுதி முடிக்க ஒருவார காலம் கொடுத்தார் தானேஷா.
அந்த வாரம் முடியப் போகும் நாள் வந்தது, தெனாலி ராமனோ இன்னும் எழுதத் தொடங்கவே இல்லை. தானேஷா தங்களை தண்டிக்கப் போகிறார் என்று மற்ற கவிஞர்களுக்கு அச்சம். குறிப்பிட்ட நாளில் கையில் சில தாள்களை எடுத்துக்கொண்டு தானேஷாவைப் பார்க்கத் தெனாலி ராமகிருஷ்ணா சென்றான். இந்த மகா காவியத்தைக் கேட்க அரசர் வேறு சில நண்பர்களையும் அழைத்திருந்தார். பாரதம் எழுதி முடித்தாயிற்றா என்று கேட்டார் அரசர். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் ஓரிரு சிறிய ஐயங்களைக் கேட்க விரும்புகிறேன் என்றான் ராமகிருஷ்ணா. "கேளும், நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார் அரசர். "எல்லோர் முன்னிலையிலும் கேட்க எனக்குத் தயக்கமாக இருக்கிறது, நான் உங்களோடு தனிமையில் பேச விரும்புகிறேன்" என்றான் ராமகிருஷ்ணா.
தானேஷாவும் ராமகிருஷ்ணாவும் உள்ளே சென்றனர். "என் ஐயம் என்னவென்றால், திரௌபதி பாத்திரத்துக்குப் பொருத்தமானவர் யார் என்பதுதான். திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவி என்பதால், இந்தக் கதையில் வருபவரும் ஐவரின் மனைவியாக வேண்டும். அப்படிப் பார்த்தால், தானேஷா அவர்களின் மனைவி, மந்திரிகளுக்கும் மனைவி என்று ஆகிவிடும். தங்கள் மனைவிக்கு இந்தப் பாத்திரத்தைக் கொடுக்க அரசருக்குச் சம்மதமா?" என்று கேட்டான் ராமகிருஷ்ணா. இது தானேஷாவுக்குப் பிடிக்கவில்லை. அப்படி ஒரு பாரதத்தை எழுதவேண்டிய அவசியமில்லை என்று கூறிய அரசர், ராமகிருஷ்ணாவுக்குப் பரிசுகளைக் கொடுத்து வெளியே அனுப்பினார்.
நாம் இங்கு பார்ப்பது என்னவென்றால், பாண்டவர்களுக்கு இணையான புகழ் தானேஷாவுக்குத் தேவைப்பட்டது, ஆனால் பாண்டவர்கள் தமது மனைவியாக எந்தப் புனிதமான ஷரத்துக்களின் கீழ் திரௌபதியை ஏற்றனரோ, அவற்றை ஏற்க அவருக்கு விருப்பமில்லை. இன்றைக்கு நமது கலாச்சாரத்தின் மேன்மையை நிலைநிறுத்த நாம் விரும்பினால், ஒழுக்க நியதி மற்றும் சத்தியத்தை மதிப்பதே அதற்கு ஆதாரம் என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும். நமக்கு நமது முன்னோர்களைப் போன்ற பெருமை வேண்டும் ஆனால் அவர்களின் பாதையில் செல்லமாட்டோம் என்றால், நாமும் தானேஷா செய்ய விரும்பியதைத்தான் செய்பவர் ஆவோம். அது செயற்கையான வாழ்க்கை ஆகிவிடும்.
நன்றி: சனாதன சாரதி, ஜூன் 2022
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |