மதுரை மணி ஐயர் பாணியில் கர்நாடக இசையை உலகெங்கும் பரப்பிய டி.வி. சங்கரநாராயணன் (77) காலமானார். திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் என்னும் பெயர் கொண்ட இவர், கர்நாடக இசை ரசிகர்களால் செல்லமாக டி.வி.எஸ். என்று அழைக்கப்பட்டார். மார்ச் 7, 1945-ல், மயிலாடுதுறையில், டி.எஸ். வேம்பு ஐயர்-கோமதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வான் மதுரை மணி ஐயர் இவரது மாமா. எட்டு வயது முதல் தன் மாமாவிடமிருந்து இசை கற்க ஆரம்பித்தார் சங்கரநாராயணன். 1968-ல் அரங்கேற்றம் நிகழ்ந்தது.
வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றார். சிலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இசை ஆர்வத்தால் வழக்குரைஞர் பணியைக் கைவிட்டு இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். மதுரை மணி ஐயரின் கச்சேரிகளில் இவரும் உடன் பாடினார்.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் நிகழ்த்தினார். 1975-ல், அமெரிக்காவில் இவர் நிகழ்த்திய கர்நாடக இசைக் கச்சேரி இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. அமெரிக்காவில் கச்சேரி செய்த முதல் ஆண் கர்நாடக இசைக் கலைஞராக இவர் மதிக்கப்படுகிறார். மீண்டும் அமெரிக்காவில், 1999-ல் 'மில்லினியம் 2000' என்ற இசை நிகழ்ச்சியை நடத்திப் புகழ்பெற்றார். கனடா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தினார்.
சங்கீத சூடாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலா சிகாமணி, காயக சிகாமணி, ஞானகலாரத்னம் எனப் பல பட்டங்களும் விருதுகளும் பெற்றவர். 2003-ல், இந்திய அரசு இவருக்கு 'பத்மபூஷண்' வழங்கிச் சிறப்பித்தது. திடீர் உடல்நலக் குறைவால், செப்டம்பர் 02 அன்று சென்னையில் காலமானார்.
மகள் அம்ருதா சங்கரநாராயணன், மகன் மகாதேவன் சங்கரநாராயணன் இருவரும் இசைக் கலைஞர்கள், இவரது சீடர்கள். ஆர். சூரியபிரகாஷ் இவரது குறிப்பிடத்தகுந்த மற்றுமொரு சீடர்.
இசை மாமேதைக்குத் தென்றலின் அஞ்சலி! |