கடந்த தமிழக மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளும் எதிர்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அ.தி.மு.க.விற்கு எதிராகச் சதி செய்துவிட்டனர் என்று சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று அவர் கூறியதையடுத்து பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.
ஜெயலலிதாவின் இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிரிஜா வியாஸ், ''தேர்தல் ஆணையத்தின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது'' என்றார்.
இதற்கிடையில் தேர்தல் ஆணையம் தமிழகத் தில் மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதுபற்றிய முதல்வரின் முழு அறிக்கையைக் கேட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று குழுக்களைத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பழையபடி காகித வாக்குச்சீட்டு முறையையே தேர்தலில் பின்பற்ற வேண்டும் என்று கோரியுள்ளது குறிப் பிடத்தக்கது. தவிர, தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் தமது வசதிற்கேற்பச் சட்டசபை, மக்களவைத் தொகுதிக்களுக்கான புதிய எல்லைகளைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்கின்றன என்றும் குற்றம் சாட்டியது.
ஜெயலலிதாவின் மக்களவை தேர்தல் தொடர்பான பேச்சுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், ''மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதுதான் அரசியல் பண்பாடு'' என்றும் கூறியிருக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |