அதோ காவிரியின் கரையில், கம்பீரமாக மூன்று அடுக்குகளைக் கொண்டு நிற்கிறதே, அதுதான் தற்சமயம் அரசர் கல்லூரி. தஞ்சையை ஆண்ட ஒரு மன்னன் தன்னுடைய இரு அழகுமிகுந்த மனைவிகளுக்காகக் கட்டிய கட்டடம் இது. மிகவும் உறுதியும், புராதன அழகும் வாய்ந்த இவ்வரண்மனை இன்று அநேக வாலிபர்களுக்கு, கலைமகளின் கருணையைத் தேடிக்கொடுக்கிறது.
பூதாகாரமான மூன்று அரண்களைத் தாண்டித்தான் அரண்மனைக்குள் பிரவேசிக்க முடியும். காவிரியைக் கடந்தால்தான் பின்பக்கமாகவும் நுழைய முடியும். காவிரியின் அணைப்பிலிருந்து இவ்வரண்மனை என்றும் விடுபடுவதேயில்லை. இருவருக்குமிடையில் அவ்வளவு நெருங்கிய காதல்!
பழங்கால அரண்மனை என்றாலே சுரங்கவழிகள் இருக்குமென்று சொல்லவே வேண்டியதில்லை. இதிலுள்ள ஒரு சுரங்கம் ஐயாறப்பன் கோவிலில் கொண்டுபோய் விடுமென்றும், மற்றொன்று தஞ்சை அரண்மனைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்றும் சொல்லுகிறார்கள். சுரங்கத்தின் வழி சென்றால், குளிர்ச்சியான காற்று, நம்மை பிரமிக்கச்செய்யும். காற்று எங்கிருந்து வருகிறது என்று நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இவ்வளவு வேலைப்பாடுகள் அமைந்த சுரங்கங்களைத் தற்சமயம் சர்க்கார் அடைத்து, இருந்த இடம் தெரியாமல் மறைத்துவிட்டார்கள். ஒருவன் தனியே ஒரு இரவைக்கூட இவ்வரண்மனையில் கழிக்க முடியாது. அவ்வளவு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய இடம். இன்னும்கூட இரவில் ஏதோ ஒருவித பயங்கரக் கூக்குரல் கேட்பதாகச் சில மாணாக்கர்கள் சொல்லுகிறார்கள்.
டிசம்பர் மாதம், மாணாக்கர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் ஊருக்குத் திரும்பினர். சில பையன்கள் மட்டும் ஹாஸ்டலிலேயே தங்கி இருந்தோம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பையன்களெல்லோரும் சினிமாவுக்குச் சென்றிருந்தனர். எனக்குக் கொஞ்சம் தலைவலியாயிருந்ததால், நான் மட்டும் போகவில்லை. மணி பத்தடித்தது. நண்பர்கள் ஒருவரைக்கூடக் காணோம். இருள் எல்லாவற்றையும் விழுங்கி விட்டது. நான் கேட்ட பயங்கரமான பழைய ஞாபகங்களெல்லாம் என் மனக்கண் முன்னால் தோன்றின. ஏதோ ஒரு பிரமை என்னைச் சூழ்ந்து கொண்டது. தூரத்தில் அரசமரத்தின் "சலசல"வென்ற இரைச்சல், எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தூண்களெல்லாம், பேய் உருவம் கொண்டு உறுமுவது போல் தோன்றின. இச்சமயத்தில் எங்கிருந்தோ ஓர் ஆந்தையின் அலறல். கொஞ்சநஞ்சம் இருந்த தைரியத்தையும் அது தட்டிப் பறித்தது. அறைக்குள் சென்று, கதவைத் தாளிட்டுக்கொண்டு, உடலெல்லாம் மூடிப் படுத்துக்கொண்டேன்.
மணி சரியாக பன்னிரண்டு. காவிரியின் பயங்கரமான கர்ஜனை. அந்த நதியின் ரௌத்திராகாரத்தைக் கண்டு, சகல ஜடங்களும் நிசப்தமாக இருந்தனர். 'மாயா...' என்று ஓர் குரல் சேய்மையில் கேட்டது. பின்னர் அது எனக்கு, மிக அண்மையில் கூப்பிடுவதுபோற் பட்டது. மரணபயம் என்னைக் கௌவிக்கொண்டது. சாளரத்தின் வழியாக நதியின் படித்துறையைப் பார்த்தேன். அலங்கோலமான, ஒர் மங்கிய சாயை படிந்த உருவம். பெண்போல் அரைகுறையாகத் தெரிந்தது. விரைவாக அது அரண்மனைக்குள் பிரவேசித்தது. ஆம்! சந்தேகமேயில்லை பெண்ணின் சாயல்தான். "மாயா! நீ எங்கே ஒளிந்து கொண்டாய், எனக்குக் கிடைக்கமாட்டாயா" என்று அக்குரல் கேட்டுக்கொண்டே என் அறையை அணுகியது. அவளுடைய குரலிலே ஓர் ஏக்கம். விவரிக்க முடியாத வேதனை. மஞ்சு மறைத்த மதிபோன்றிருந்தது அவள் முகம்.
பயத்தால் என்னுடைய சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. ஜீவன் இறக்கை முளைத்துப் பறந்துவிடும் போல் இருந்தது.
"யாரப்பா நீ? பயப்படாதே! திடமாயிரு. நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நான்தான் இந்த அரண்மனையில் வசித்த ராணி" என்றது அக்குரல்.
"ராணியா?" என்று குழறினேன்.
"ஆமாம்! விளங்கச் சொல்லுகிறேன், கேள்! திடமாயிரு. இந்த அரண்மனையில் முன்னர் இருவர் மாத்திரம் தான் வசித்து வந்தோம். அரண்மனை இரண்டாகப் பகுக்கப்பட்டிருப்பதிலிருந்தே இது தெரியவில்லையா? அரசர் என்மீதுதான் அதிகப் பிரியமாயிருப்பார். அரசாங்கக் காரியங்களைக்கூட ஒதுக்கிவிட்டு என்னுடைய அந்தப்புரத்தில்தான் அவர் ஆழ்ந்து கிடப்பார். இது என்னுடைய சக்களத்திக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது என்மீது அரசருக்கு வெறுப்பை ஊட்ட அவள் ஏற்ற தருணத்தை எதிர்நோக்கியிருந்தாள்.
அன்று இரவு, அரசரும் நானும், ஆண்டவனைத் தரிசிக்க சுரங்கத்தின் வழியே சென்றோம். அர்த்தகால பூஜை ஆகும் நேரம். மணி பன்னிரண்டு. கோவிலை அணுகிய உடனே ஓர் தேவகானம் எங்கள் செவிகளில் ஒலித்தது. அணுக, அணுக, அதன் ஆகர்ஷண சக்தி அதிகமாயிருந்தது. ஏதோ ஓர் மோஹன சக்தி என்னை அவர்பால் இழுத்தது. மகுடியால் கட்டுப்பட்ட பாம்பைப்போல் மௌனமாய் இமை மூடாமல் அவரையே என் கண்கள் நோக்கின. ஐயோ! அன்று அவரை, நான் ஏனோ பார்த்தேன், மன்மதனைவிட அழகான உருவம். அவர் கண்டத் துவனி கந்தர்வ ஸ்திரீக்குக்கூட இருக்காது. சௌந்தர்ய லக்ஷ்மியின் கிருபை அவருக்கு நிறைய இருந்தது. யாழில், அவர் 'சித்தமிரங்காதா தேவா' என்ற பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் அவர் சட்டென்று நிறுத்தி எங்களை வணங்கினார். அந்த பிராந்தியம் பூராவும் அப்பொழுது சூன்யமாகப் போய்விட்டது!
சுவாமியை தரிசித்துவிட்டு வீடு திரும்பினோம். 'சித்தமிரங்காதா தேவா' என்ற பாட்டு என்னுடைய காதுகளைச் சுற்றி ரீங்காரம் செய்தது. என்னுடைய வாயும் அதையே சதா ஸ்மரணை செய்தது. என்னுடைய மனம் அவருடைய எழில் வடிவத்தையே அடிக்கடி நினைத்தது. பார்க்கும் பொருளெல்லாம் அவர் உருவம் பெற்று, என்னை வாள் கொண்டறுத்தது."
"மகாராஜா! தாங்கள் அந்தப் பாடகனின் இன்னிசையைக் கேட்டீர்களா?" என்றேன் நான்.
"ஏன் குமாரி! கேட்டேன். அக்கானம் தேவகானம் போன்றிருந்தது. எப்பொழுதும் அவனுக்கு இதே வேலைதான். யாழ் வாசிப்பதில் மிகவும் வல்லவன்" என்றார் அரசர்.
நான், "அந்தப் பாட்டை எத்தனை தரம் கேட்டாலும் சலிப்பே இருக்காது" என்றேன்.
அரசர், "நாளை அவனை இங்கேயே வரச் சொன்னால் வந்து பாடுகிறான்" என்றார் அலட்சியமாக.
மறுநாள் மாலை ஐந்து மணி. வசந்தத்தின் வசீகரம் அற்புதமாக இருந்தது. தென்றலில் நறுமணம் கமழ்ந்து, திகழ்ந்தது, ஆற்றின் 'சலசலப்பு' இரவு அவர் பாடிய அதே இசையைப் பாடியது. எங்கேயோ கேட்ட அக்கீதம், முழுச் சோபையுடன் என் காதுகளைச் சுற்றி வட்டமிட்டது, விழித்துக் கொண்டிருக்கும்போதே அதன் மங்கிய சாயை, என் மனக்கண்முன் வந்தது. சொல்ல முடியாத ஒரு வேதனை, என்னை வாட்டியது. எதையோ அடைய வேண்டுமென்ற அடங்கா ஆவல். அரசன் எனக்கு ஏற்றவன் அல்ல, என்ற நினைப்பு.
அரசர் அன்று ஏதோ அலுவலாகத் தஞ்சைக்குப் போய்விட்டார். இச்சமயத்தில்தான் அவர் கையில் யாழுடன் என்னை நமஸ்கரித்தார். அவரைக் கண்டதும், சந்திரனைக் கண்ட சாகரம் போல் பொங்கியது என் மனம். வேதனை வடவாமுகாக்கினியைப் போல் என்னை வாட்டியது.
"வாருங்கள், இப்படி இந்த ஆஸனத்தில் அமருங்கள்" என்று அமர்த்தினேன். என் தவிக்கும் நிலை, தாதியர்களுக்குத் தெரிந்ததோ என்னவோ? என்னை விட்டு அகன்று விட்டார்கள். கற்பனையின் உருவம், யாழுடன் விளையாடியது. எனக்கு அவருடைய பாட்டுகளில் அன்று, ஒன்றுகூடப் பிடிக்கவில்லை. அந்தகாரம், உலகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கவர்ந்தது. என்னுடைய உள்ளத்திலும் அது புகுந்து, தன்னாசையை நிலைநாட்டியது. அறையில் தாதிகள் விளக்கேற்றி, இருளை விரட்டினர். ஆனால் என்னுடைய மனோவிளக்கு பிரகாசிக்கவில்லையே! ஒரே ஏக்கம்; மனத்துடிப்பு. அவருடன் விஷயத்தை விளக்க வேண்டுமென்ற ஆவல். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது போய் விடுமோ என்ற துக்கம். அவருடன் பேச எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. தெரிந்த இரண்டொரு வார்த்தைகளும் வாயை விட்டு வெளிக்கிளம்ப மறுத்துவிட்டன. சித்தப் பிரமை பிடித்தவள் போல் மௌனமாய், கற்சிலைபோல் நின்றிருந்தேன்.
"அம்மா நான் போய்வருகிறேன்" என்றார் அவர்.
சிறகொடிந்த பறவைபோல் கற்பனை லோகத்திலிருந்து கண்விழித்தேன். அன்று இரவு அவரை அரண்மனையிலேயே சாப்பிடும்படி நிறுத்தினேன். என்னுடைய அறைக்கே சாப்பாட்டை வரவழைத்து, நானே அவருக்குப் பறிமாறினேன். அவர் சாதம் போதுமென்று கையை நீட்டினார். நான் வேண்டுன்றே அவருடைய கை என்மீது படும்படியாக, அதை அமர்த்தி, இலையில் சாதத்தைப் பறிமாறினேன்.
"உங்களுக்கு சரஸ்வதியின் அருள் நிரம்பியிருக்கிறது" என்றேன் நான்.
"அப்படியொன்றுமில்லை" என்றார் அவர்.
"அழகில்கூட உங்களுக்கு நிகரானவர் இங்கு ஒருவர்கூட இல்லை. அரசர்கூட உங்களுக்குப் பிந்தியவர் தான்" என்று மறைமுகமாக, என் உள்ளக் கருத்தை அவருக்கு வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல் தோன்றினார்.
பின்னர், "சரி அம்மா! நான் வருகிறேன், விடை தாருங்கள்" என்று சொல்லி எழுந்தார்.
"ஏன்? உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லையா? உட்காருங்கள்" என்று சொல்லி, அவருடைய கரங்களைப் பிடித்து அமர்த்தினேன். நான் அப்பொழுது என்வயத்திலேயே இல்லை. சூரியனைக் கண்ட பனிபோல் என் தயக்கமெல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.
"அன்பா! என்னை இன்னும் தாங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா? நான் உங்கள் அடிமை. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? ஐயோ! நான் படும் விரகதாபத்தை நீங்கள் உணரவில்லையா? வாருங்கள்!" என்று என் சயன அறைக்கு அவரை அழைத்துக்கொண்டு போனேன்.
வானத்திலே வெண்ணிலவு வீசும்; வெண் மேகங்கள் ஓடங்கள்போல் மிதந்து செல்லும்; தாரகைகள் கண் சிமிட்டும்; கந்தங் கமழுங் காற்றடிக்கும்; காவிரியின் நீர் வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் ஒடும்; சோலைகளெல்லாம் மௌனமாக எங்களை ஆசீர்வதிக்கும். மூன்றாம் மாடியில் நாங்களிருவரும், இரவில் வெகுநேரம், பட்டு நிலவில் பந்தாடுவோம். காவிரியின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு வியப்போம். அவர் தினம் சுரங்கத்தின் வழி வருவார். சுகம் தருவார். பின் போய்விடுவார். நாட்கள் ஓடி மாதங்கள் போய்க்கொண்டேயிருந்தன.
நாம் ஏதோ உலகில் இரகசியம் இருப்பதாக எண்ணுகிறோம். அதை மனதில் வைத்தே சில காரியங்களையும் செய்துவிடுகிறோம். என்றைக்காவது ஒருநாள், அறையில் நடந்த இரகசியம் அம்பலத்துக்கு வரும் என்பதை நாங்கள் கொஞ்சங்கூட கவனிக்கவில்லை. அரசர் வந்த போதெல்லாம் அவரை மிகத் தந்திரமாக ஏமாற்றியதாக எண்ணி மகிழ்வேன்.
இயற்கையின் சௌந்தர்யத்தை நான் அவர் இருக்கும்பொழுது தான் உணர்ந்தேன். அதன் மாயாஜாலங்களெல்லாம், எனக்கு அப்பொழுதுதான் நன்கு விளங்கின. கலைஞனின் காதல், புறத்தில் மென்மையானது. ஆனால் அகத்தில் இரும்பைப்போன்ற உறுதியுள்ளது. தூய்மையுள்ளது. அவருடைய ஹிருதயம் என்றும் மூடப்பட்டதேயில்லை. எனக்காக அது எப்பொழுதும் திறந்து வைக்கப்பட்டேயிருக்கும்.
அவருடைய காதலால் நான் கேவலம் உடல் சுகம் மாத்திரம் அடையவில்லை. எவ்வளவோ தத்துவ விசாரணைகள் எங்களுக்குள் தினமும் நடக்கும். ஆணித்தரமாக அவர் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வார். "ஆண், பெண் சேர்ந்ததே இவ்வுலகம். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில்தான் காதல் உண்டு. வேறு எங்கும் இது கிடையாது. அமரலோகத்தில் கூட இதைக் காண முடியாது" என்று அவர் சொல்லும்பொழுது, ஆஹா! நான் எவ்வளவு புளகாங்கிதம் அடைவேன் தெரியுமா?
எப்படியாவது நாங்கள் இருவரும், தனித்து வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற எண்ணம், என் மனதில் பலமாக வேரூன்றியது. குறிப்பிட்ட ஒரு தினத்தில் அரசனது எல்லையை விட்டு நீங்குவதென்று முடிவு செய்தோம்.
அன்று காலை என் சக்களத்தி என்னைப் பார்க்க வந்தாள். என்றுமில்லாத ஆனந்தம், அன்று அவளுடைய எழில் முகத்தில் குடிகொண்டிருந்தது. மகிழ்ச்சியின் ரேகைகள் பளிச்சென்று அவளுடைய வட்ட முகத்தில் தெரிந்தன.
"அரசன் மதுரை செல்லுகிறான்" என்பதுதான் அவள் கொண்டுவந்த செய்தி.
சனியன் தொலைந்தது. இனிமேல் தொல்லையில்லை என்று என் மனம் குதூகலித்தது. மனதிலிருந்த கொஞ்சம் அச்சமும் பஞ்சாய்ப் பறந்தது.
இச்சமயத்தில் அவள் முல்லைச் சிரிப்புடன் என்னுடைய முகத்தை, ஸ்திர த்ருஷ்டியுடன் கூர்ந்து கவனித்தாள். ஆனால் அவளுடை நீலோற்பல விழிகள் இரண்டு முத்துக்களை உதிர்த்தனவே! அது என்?
இப்பொழுதான் அதன் மர்மம் எனக்குப் புலனாகிறது. என்னுடைய அழிவில் அவள் ஏனோ அவ்வளவு சிரத்தை கொள்ளவேண்டும். நான்தான் இப்பொழுது அரசனை கனவில்கூட நினைப்பதில்லையே. அவளுக்குத்தான் நான் அவரை மனப்பூர்வமாகத் தாரை வார்த்துவிட்டேனே! பின்னும் ஏன் இந்த வன்மம் என்மேல்? நான் ஆசாபங்கம் அடைவதிலே அவளுக்கு என்ன லாபம்?
லாபம் ஒன்றுமே கிடையாது. பெண் ஜன்மங்களின் குணமே இப்படித்தான். பொறாமை, அவர்களுடைய பிறவிக்குணம். பிறர் சுகம் அடைவது இவர்களுக்கு ஒருக்காலும் பிடிக்காது. யுக யுகாந்திரங்களுக்கும் இந்த மாசு அவர்களை விட்டு நீங்கவே நீங்காது. நீங்கினால்தான் பெண்மை அமரத்துவம் பெற்றுவிடுமே!
அக்காலம் கோடைகாலம். அமாவாசை இரவு. புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களுடன் தயாராகவிருந்தோம். குதிரைகளை, நான் ஏற்கனவே சுரங்கத்தின் வாயிலில் சித்தப்படுத்தியிருந்தேன். மாறுவேடம் பூண்டு இரு சிறு மூட்டைகளுடன் புறப்பட்டோம். நாங்கள் சென்றது கோவில் சுரங்க வழி.
ஆண்டவனே, நாங்கள் காண்பது உண்மைதானா? அல்லது கனவா? அன்றி, நனவேயாயின் அது எங்கள் தீவினையின் பயனா? சுரங்கத்தை காத்துப் பல குதிரை வீரர்கள் உருவிய வாளுடன் எங்களைக் கதிகலங்க வைத்தனர். சரி, மற்றொரு சுரங்கத்தின் வழியாகப் போகலாம் என்று அவருடைய கரங்களைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன். சுரங்கம் முழுவதும் இருளரக்கியின் அழி நடனம் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவருடைய உடல் பூராவும் நடுங்குவதை உணர்ந்தேன். எனக்கும் தைரியம் குலைந்தது. மிக விரைவாக நடந்தோம்.
தஞ்சைக் குகையின் வழியாக அரசன், தீவட்டிகளுடன் பரிவாரங்களோடு வந்து கொண்டிருந்தான். தீயின் நாக்குகள் எங்களை, நாற்புறமும் தேடுவது போல், நாலாபுறமும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அவருடன் கூட என் சக்களத்தியும் வந்து கொண்டிருந்தாள். பாதகி; வஞ்சகி ; விதியின் விளையாட்டு கோர நர்த்தனம் புரியப்போகிறது. தனது வலிமைமிக்க பாதங்களில் இரு மெல்லிய மலர்களைப் போட்டு மிதிக்கப் போகிறது.
சரசரவென்று மூன்றாவது மாடியை அடைந்தோம். கோவிலுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வீரர்கள் எங்களை அணுகினர். இதே சமயத்தில், அரசனும் அணுகினான். தூரத்தில் வரும்பொழுதே அவனுடைய மீசை துடிப்பது நன்றாகப் புலனாகியது.
மனோகரமான மாலைக் காலத்தில், தங்களுக்குப் பொன்னொளி ஊட்டி, அலங்காரப்படுத்தி, அழகு பார்த்த ஆதவன், தங்களை விட்டு மறைந்து விட்டான் என்று கார்முகில்கள் கடுநடையுடன் அவனை வானமுழுவதும் தேடின. கங்குலில் கதிரவனைக் காணாது கதறின. கடைசியில் நம்பிக்கையற்றுக் கண்ணீரை வர்ஷித்தன.
சடசடவென்று நீர்த்துளிகள் நானிலத்தை நனைத்தன. பின்னர் 'சோ'வென்னும் பெரு முழக்கத்துடன் அழுது வீதி முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுமாறு செய்தன. நாங்கள் நின்ற இடம் மேல்கூரையற்ற இடம். அனைவரும் முற்றும் நனைந்து போய்விட்டோம். நீர்த்துளிகள் எங்களுடைய தேகத்திலிருந்து சொட்டின. அரசனுடைய தீவட்டிகளெல்லாம், 'சொய்ங் சொய்ங்' என்று அழுது அவிந்தன. ஒரே அந்தகாரம். தப்ப முயன்றோம். ஆனால் விதி குறுக்கே நின்றது. திடீரென்று பளிச்சென்று ஒரு மின்னல். இருவரையும் பிடித்துக்கொண்டார்கள்.
அடுத்த கணம் பிரகாசமுள்ள விளக்குகள் வந்தன. "அடி கள்ளி" என்று உறுமினான் கிழ அரசன். "துரோகி இந்த மாதிரி எத்தனை நாள் என்னை ஏமாற்றினாய்?"
"யாரடா பணியாட்கள் வாருங்கள். இச்சண்டாளனின் கையையும், காலையும் கட்டி காவிரியில் தூக்கி எறியுங்கள்" என்று இடியென கர்ஜித்தான். அந்தக் குரல் அரண்மனை பூராவும் எதிரொலித்தது.
ஐயோ! மறுகணம் 'தடால்' என்ற பெருஞ்சத்தம். 'சோ' என்னும் மழையின் இரைச்சலையும் பீறிட்டுக்கொண்டு கேட்டது. "குமாரி" என்று கூவினார். அதிலே எவ்வளவு சோகம். அதல பாதாளத்திலிருந்து கூப்பிடுவதுபோல் தெளிவற்ற சப்தம், லேசாகக் காற்றில் மிதந்து ஒலித்தது.
மறுகணம் உடனே அவரைத் தேட நான் காவிரியில் குதித்தேன். என்னை ஒருவராலும் பிடிக்க முடியவில்லை. அவரைக் காவிரி முழுவதும் தேடிவிட்டேன். சாகரம் பூராவும் சல்லடை போட்டுச் சலித்துவிட்டேன். ஆனால் என் அன்பன் கிடைக்கவில்லையே!
"அவரை இங்கே பார்த்தாயா?" என்று அந்த அபூர்வமான மங்கிய சாயை வினவியது. சோகம் நிறைந்த, பயங்கரமான கதை முடிந்தவுடன் அப்படியே மூர்ச்சித்து விழுந்தேன். காவிரியில் யாரோ 'சரசர'வென்று இறங்கினார்கள், 'சித்தமிரங்காதா தேவா' என்ற மோஹனப் பாட்டு காற்றில் மிதந்து காதுகளில் அமிர்தத்தை வர்ஷித்தது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அவ்வின்னிசையும், காற்றிற் கரைந்து மறைந்தது.
மறுநாள் வைகறை வேளை. புள்ளினங்கள் மதுர ராகம் பாடின. வண்டினங்கள் யாழ் வாசித்தன. அருந்திசைப் பொலிவுற, அருணன் தோன்றினான். இரவில் தேடியுங் காணாத இரவியை மேகங்கள் ஆசை தீரக் கட்டிக்கட்டித் தழுவி முத்தமிட்டன.
காவிரியின் கரையில் வந்து நின்றேன். இளம் பெண்கள் இடையில், நீர்க்குடம் சுமந்து ஆடி நடந்தனர். சிலர் பாடியும் சென்றனர். குமாரியின் சாயை அவர்களில் ஒருவருக்குக்கூட இல்லையே? அவள் என்ன ஜாலக்காரியா அல்லது அப்ஸர ஸ்திரீயா?
கு. ராஜவேலு |