தமிழகத்தில் கூட்டணி ஆட்சி!
அ.தி.மு.க. அரசு பதவியேற்று மே மாதத்துடன் 4 வருடங்கள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் 2006ம் ஆண்டு நடை பெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை நோக்கியே தங்கள் காய்களை நகர்த்துகின்றன.

மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி 'பலமான கூட்டணியே வெற்றிக் கூட்டணி' என்னும் மந்திர வாசகமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க தலைமையில் பலமான கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதையடுத்துப் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் எளிதாகக் கைப்பற்றி மத்தியில் முக்கிய இடத்தைத் தமிழக எதிர்க்கட்சிகள் வகிக்கின்றன.

இந்த பலமான கூட்டணியைச் சிதற விடாமல் 2006 சட்டப்பேரவைத் தேர்தல் வரை கொண்டு செல்வதில் தி.மு.க. கவனமாக இருக்கிறது. அதே நேரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைத் தலைவர் திருமாவளவன் இருவரும் தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி, தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் காவலர்களாகப் புதிய அவதாரம் எடுத்திருப்பது தி.மு.க. வட்டாரத்தை யோசிக்க வைத்துள்ளது. வன்னியர், தலித் இன மக்களின் வாக்குகளையும், சேதுராமன் போன்றவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு மாயாவதி, முலாம்யம்சிங் போல் தமிழக ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான வியூகங்கள் இவை என்று கூறப்பட்டாலும் பா.ம.க இதை முழுமையாக ஆட்சேபிக்கிறது. 'தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி சட்டப் பேரவைத் தேர்தல் வரை தொடரும்' என்கிறார் ராமதாஸ்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இளங்கோவன் இனி மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிகள்தான் நடைபெற வேண்டும் என்று கூறியதும், இவரின் கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சனம் வழிமொழிந்ததும், வருகிற சட்டப்பேரவைக்குப் பின்வரும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கொள்ளத் தயாராக இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தி.மு.க. தனது செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டியது மட்டுமல்லாமல், கருணாநிதி உட்கட்சிப் பூசலை உண்டாக்கும் கட்சியினருக்குக் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆளும் அ.தி.மு.க. சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுக்குழுவைக் கூட்டியது மட்டுமல்லாமல், அக்கூட்டத்தில் தங்கள் எதிரணியுடன் வியாபார உறவு வைத்திருக்கும் கட்சியினரையும் கடுமையாக எச்சரித்துள்ள முதல்வரும், அக்கட்சி பொதுச்செயலாளருமான ஜெயலலிதா எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிகளுள் மாற்றம் ஏற்படுமா? கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தலைமைக் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் இசையுமா? அல்லது மூன்றாவது அணி அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com