போலீஸ் வசமிருந்து தப்பியதில் அருணுக்கு அப்பாடா என்று இருந்தது. அங்கே சட்டப்படி தடை செய்துள்ளார்கள் என்பது தெரிந்தும் இவ்வளவு கடுமையாகக் காவல் இருக்கும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கீதாவுக்கும் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது.
வீடு திரும்பும்போது அவ்வப்போது காரின் பின்னால் போலீசார் பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார் கீதா. மனதில் காரணமே இல்லாத ஒரு பயம்.
"அருண், பயந்திட்டியாப்பா?"
"இல்லைம்மா, நான் கொஞ்சம் எதிர்பார்த்தேன்."
கீதாவிற்கு திகைப்பும் ஆச்சர்யமும் சேர்ந்து வந்தது.
"என்னது? இப்படி போலீஸ் வரும்னு எதிர்பார்த்தியா?"
"ஆமாம், அம்மா. நம்ப ஊருல இந்த மாதிரி விசித்திரமான வேலைகள் நடந்தா யாரோ கழுகாட்டம் கவனிக்கறாங்க என்பது நமக்கு தெரிஞ்ச விஷயம்தானே."
கீதாவிற்கு அருண் என்ன சொல்ல வருகிறான் என்பதில் குழப்பமாக இருந்தது. இந்த மாதிரி சதிவேலை ஊகங்கள் சொல்வதில் அவனைவிடப் பெரிய ஆள் யாருமே கிடையாது. இருந்தாலும், அவை பல சமயம் உண்மையாகவே இருந்திருக்கிறது.
"அம்மா..."
"என்ன அருண்?"
"இப்ப நூலகம் திறந்திருக்கும். நாம அங்கே போய் சில விஷயங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்."
"நூலகத்துலியா? அங்க யார்கிட்ட கேட்கப் போறோம்?"
"யார் கிட்டையும் இல்லைம்மா. அங்க காப்பகத்துல (Archives) மைக்ரோ ஃபிலிம் இருக்கும். அதுல கண்டிப்பா நம்ம ஊர்ல நடந்த ஆய்வுங்க, நடந்த வித்தியாசமான விஞ்ஞான ஆராய்ச்சிகள் எல்லாம் பதிவு ஆகியிருக்கும். சட்டப்படி அதெல்லாம் பண்ணியிருக்கணும்."
"நாம் கூகிளில தேடினோமே? ஒண்ணும் வரலையே கண்ணா?"
அருண் புன்னைகைத்தான்.
"எதுக்கப்பா சிரிக்கறே? நான் கேக்கறது என்ன தப்பா?"
"அது இல்லைம்மா, நம்ம ஊர் ரெகார்ட்ஸ் இன்னும் digitize பண்ணலைன்னு நினைக்கிறன். அதனால தான் கூகிள் கூடக் காட்டலை."
அருண் சொன்னது நியாயமாகப் பட்டது. "ஆமாம், இப்ப நூலகம் போனா பக்கரூவை என்ன பண்ணறதம்மா? அவனால உள்ள வரமுடியாதே?"
இப்போது கீதாவின் பங்கிற்கு அவர் சிரித்தார். அருணுக்கும் சிரிப்பு வந்தது. அம்மா ஏதாவது வழி வைத்திருப்பார் என்று அவனுக்குத் தெரியும். ஒன்றும் பேசாமல் நமட்டுச் சிரிப்போடு பக்கரூவை மடியில் வைத்து அவனை வருடிக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து வண்டியை கீதா ஓரங்கட்டினார். அங்கே ஒரு வீட்டின் முன்னே ஓர் இளம் பெண்மணி நின்று கொண்டிருந்தார். இவர்கள் வருகையை எதிர்பார்த்து நின்றருந்தார் அந்தப் பெண்மணி. "மிஸ் கிளென், வௌவ்!" அருண் சந்தோஷத்தில் கத்தினான்.
பக்கரூவும் ஆனந்தத்தில் துள்ளினான்.
"நன்றி மிஸ் கிளென்" என்றார் கீதா.
"என்ன அருண், இப்ப என்ன ரகளை பண்ணப் போற?" அவனது பள்ளிக்கூட டீச்சர் மிஸ் கிளென் சிரித்துக்கொண்டே கேட்டார்.
பக்கரூ கதவைத் திறந்தவுடன் மிஸ் கிளென்னிடம் பாய்ந்து ஓடியது..
கீதா நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வண்டியை நூலகம் நோக்கிக் கிளப்பினார்.
நூலகத்தில் வண்டி நின்றவுடன் அருண் மடமடவென்று இறங்கி உள்ளே சென்றான். மாடியில் உள்ள மைக்ரோ ஃபிலிம் காப்பகத்துக்குச் சென்றான். கீதா அவன் பின்னால் மெதுவாகப் படிகளில் ஏறினார்.
அருண் அங்கிருந்த நூலகரை அணுகினான். அவரிடம் தனக்கு வேண்டிய மைக்ரோ ஃபிலிம் பற்றி விசாரித்தான். அந்தப் பெண்மணி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தார். அதில், அருண் கேட்ட பொருட்களின் குறிப்புகள் இருந்தன.
எந்த அலமாரி, எந்தப் பிரிவு, என்று பார்த்து, அருண், தன் கையில் இருந்த சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்திற்குப் போனான். அங்கே, அவன் தேடி வந்த மைக்ரோ ஃபிலிம் இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் அங்கே தேடிப் பார்த்தான்.
"நமக்கு வேணும்ங்கிறது எதுவுமே இங்க இல்லை அம்மா. எப்படி காணாம போகும், ஆச்சரியமா இருக்கு!"
கீதாவும் தன் பங்கிற்கு அங்குள்ள அலமாரியில் தேடிப் பார்த்தார். தேடி வந்த பொருள் காணப்படவில்லை.
"இருங்கம்மா, நான் போய் அந்த நூலகரைக் கூட்டிட்டு வரேன்."
சில நிமிடங்கள் கழித்து அருண் குறிப்பு எழுதிக்கொடுத்த நூலகப் பெண்மணியோடு திரும்பி வந்தான். தான் எழுதிக்கொடுத்த சீட்டை வாங்கி அவரும் தேடினார்.
"இந்த Dewey number இங்கதான இருக்கணும்? இது reference material ஆச்சே? யாரும் எடுத்துப் போயிருக்க முடியாதே?" என்று அவர் தனக்குத்தானே பேசியபடி தேடிக் கொண்டிருந்தார்.
அருணும் கீதாவும் அந்தப் பெண்மணி அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.
"ஒரு நிமிஷம், நான் ஒருத்தரைக் கேட்டுட்டு இப்போ வந்துடறேன்" என்று அந்தப் பெண்மணி அங்கிருந்து நகர்ந்தார்.
"என்னம்மா இது, ரெஃபரன்ஸ் பகுதியில இருக்கறதைக் கூட காணோம்? அதுவும் நம்ப ஊர் பொது நூலகத்தில? ரொம்ப வினோதமா இருக்கு."
சில நிமிடங்களில் நூலகப் பெண்மணி இன்னும் ஒரு ஆளோடு அங்கே வந்தார். "ஹே அருண், இவர்தான் இங்கே தலைமை அதிகாரி," என்று அவரை அறிமுகம் செய்தார்.
"ஹலோ சார்" என்று கை குலுக்கினான் அருண்.
வந்த அதிகாரி விளக்கம் கொடுத்தார். "அது வந்து, சில நாட்களாகவே இங்க பல மைக்ரோ ஃபிலிம்கள் பழசு ஆயிருச்சுன்னு நாங்க புதிய காப்பி எடுத்திட்டு இருக்கோம். அதுல நீங்க தேடுறதும் இருக்கு."
"எப்பவுமே பல பிரதிகள் இருக்குமே, சார்?" கீதா கேட்டார்.
"இல்லை, எங்ககிட்ட பல பழைய ஃபிலிம்கள் ஒன்றே ஒன்றுதான் இருக்கு. அதுக்காகத்தான் இப்ப பிரதி எடுக்கறோம்."
"அப்ப நாளாகுமா சார்?" இது அருண்.
"ஒரு ஆறு மாத காலம் வரைக்கும் ஆகலாம் எல்லா பிரதிகளும் இங்க வருவதுக்கு. சாரி."
(தொடரும்)
ராஜேஷ் |