நீலாவதி ராமசுப்பிரமணியம்
பிறப்பு
சமூக சேவகர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியலாளர் எனச் செயல்பட்டவர் நீலாவதி ராமசுப்பிரமணியம். 'புரட்சிகரமான பெண்ணியவாதி' என ஈ.வெ. ராமசாமி பெரியாரால் போற்றப்பட்ட இவர், ஜனவரி 23, 1913 அன்று, திருச்சியில், சமூக சீர்த்திருத்தவாதி எஸ்.ஏ.கே. கலியபெருமாளுக்கு மகளாகப் பிறந்தார். மூன்று வயதிலேயே தாயை இழந்தார். தந்தை நீதிக்கட்சி இயக்கத்தவருடன் நட்பில் இருந்தார். தந்தை வழி நீலாவதிக்கும் இளவயதிலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்கள் இவரை வெகுவாகக் கவர்ந்தன. இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்டு பயின்றார். ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார்.

எழுத்துப் பணி
உயர்கல்வியை முடித்த இவர், பெண்களின் கல்வி மற்றும் விடுதலை குறித்தும் 'குடியரசு', 'திராவிடன்', 'குமரன்' போன்ற சுயமரியாதை இயக்க இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். சுய மரியாதை இயக்கம் சார்பாக, நாடெங்கும் பயணப்பட்டு பெண் விடுதலை, சமூக விடுதலை குறித்துச் சொற்பொழிவுகள் செய்தார்.

திருமணம்
'குமரன்' இதழில் உதவி ஆசிரியராக இருந்தவர் சொ. முருகப்பா. அவர், நீலாவதியின் கட்டுரைகளைப் பார்த்து வியந்தார். சொ. முருகப்பா சமூக சேவகராகவும், பெண் விடுதலை, விதவை மறுமணம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அதற்காகவே 'மாதர் மறுமணம்' என்ற இதழை நடத்தி வந்தார். 'தன வைசிய ஊழியன்', 'சண்டமாருதம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். 'மாதர் மறுமணம்' இதழின் ஆசிரியராக அவரது மனைவி மரகதவல்லி இருந்தார். நீலாவதியின் சமூகப் பணிகளைப் பார்த்து வியந்த இருவரும் நீலாவதியைச் சந்தித்தனர்.

கலப்பு மணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சொ. முருகப்பா, செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நீலாவதியை மணம் முடித்து வைக்க விரும்பினார். 'குமரன்' இதழில் பணியாற்றி வந்த இளைஞரும், தனது சகோதரரைப் போன்றவருமான ராமசுப்பிரமணியம், நீலாவதிக்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று கருதினார். ராமசுப்பிரமணியமும், நீலாவதியைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டார். எஸ்.ஏ.கே. கலியபெருமாளும் நீலாவதியும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே, அக்டோபர் 5, 1930 அன்று, நீலாவதி-ராமசுப்பிரமணியம் திருமணம், சுயமரியாதைத் திருமணமாக, ஈ.வெ.ரா-நாகம்மை முன்னிலையில் திருச்சியில் நடைபெற்றது. செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் முதல் கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் என்பதால் அந்தத் திருமணத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்தன. கி.ஆ.பெ. விஸ்வநாதம், ராய. சொக்கலிங்கன், சா. கணேசன், வை.சு. சண்முகம் செட்டியார், மு.அ. அருணாசலம் செட்டியார் உள்ளிட்ட பலர் இந்தக் கலப்புத் திருமணத்திற்கு ஆதரவளித்தனர்.

சமூகப் பணிகள்
திருமணம் முடிந்ததும் காரைக்குடிக்குச் சென்று கணவருடன் வசித்தார் நீலாவதி. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். கலப்பு மணம், மாதர் மறுமணம், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வியின் முக்கியத்துவம், மது ஒழிப்பு போன்றவற்றைப் பற்றிப் பிரச்சாரம் செய்தார். இளம் வயதுத் திருமணம் பற்றி, அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி 'மாதர் மறுமணம்' இதழில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதிவந்தார். நீலாவதி எழுதிய கட்டுரைகளும், அவரது சொற்பொழிவுகளும் தொகுக்கப்பட்டு, குடியரசு இதழில் வெளியாகின. குமரன், ஊழியன், புரட்சி, திராவிடன் போன்ற இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகின.



காந்தியுடன் ஒரு சந்திப்பு
இந்நிலையில் மகாத்மா காந்தி தமிழகம் வந்தார். திருச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்து உரையாடினார் நீலாவதி. அது நீலாவதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆனது. நீலாவதியின் சமூகப் பணிகளைப் பாராட்டிய காந்தி, "உங்களைப் போன்ற பெண்கள்தான் இந்த தேசத்திற்கு இப்போதைய தேவை" என்று சொல்லி வாழ்த்தினார். காந்தியின் எளிமை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாத நேர்மை, சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாத அரசியல் பணிகள் போன்றவை நீலாவதியை வெகுவாகக் கவர்ந்தன. காந்தியைச் சந்தித்த நாள்முதல் ஆடம்பர உடைகளையும், நகைகளையும் துறந்தார். கதர் மட்டுமே அணிய ஆரம்பித்தார். .

காங்கிரஸ் இயக்கப் பணிகள்
நாளடைவில் சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகியவர், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் நாடெங்கும் பயணப்பட்டு சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார்; காங்கிரஸ் சார்பாக தேச விடுதலை, பெண் விடுதலை, சமூக விடுதலை குறித்துச் சொற்பொழிவாற்றினார்.

நேரு திருச்சிக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடிய நீலாவதி, அவருக்கு விருந்தளித்தார். காமராஜ், எஸ். சத்தியமூர்த்தி, ஓ.வி. அளகேசன் உள்ளிட்ட பலர் அந்த விருந்தில் கலந்துகொண்டனர். நேருவின்மீது கொண்ட மதிப்பால் தனக்குப் பிறந்த குழந்தைக்கு 'ஜவஹர்' என்று பெயரிட்டார். காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்டு, கைக்குழந்தையுடன் சிறை சென்றார். சில மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். அதன்பின் மாதர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நீலாவதி. தீவிரமாக இயக்கப் பணிகளில் ஈடுபட்டார்.

சமூகப் பணிகள்
இந்தியாவின் விடுதலைக்குப் பின் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டார் நீலாவதி. ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாள், எஸ். அம்புஜம் அம்மாள் மற்றும் சென்னை மாதர் சங்கத்தினருடன் இணைந்து பல நற்பணிகளை முன்னெடுத்தார். 1954-ல் ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு பெண்கள் சங்கம் ஏற்படுத்தினார். அதற்கு நீலாவதி தலைவியாகவும், பேராசிரியை வசந்தி தேவி செயலாளராகவும் செயல்பட்டனர். பல நற்பணிகளை முன்னெடுத்தனர்.

ராமகிருஷ்ணமடமும், ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி அம்மாளும் கேட்டுக் கொண்டதன்படி, சென்னை மத்திய சிறையில் இருந்த பெண் கைதிகளுக்கு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சொற்பொழிவு, நீதி போதனை வகுப்புகளை நடத்தினார் நீலாவதி. அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து, எதிர்கால வாழ்வுக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல்களையும் கூறினார். சிறையிலிருந்து வெளிவந்த பல பெண்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். பெண்கல்வி வளர்ச்சிக்காகப் பல உதவிகளைச் செய்தார்.

நீலாவதி சிலகாலம் சிறையில் இருந்ததற்காக, தியாகி என்ற முறையில் அரசாங்கம் ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க முன்வந்தது. நீலாவதி அதனை ஏற்க மறுத்து நிலமற்ற ஏழை மக்களுக்கு - குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு - அதனை அளித்துவிடும்படி அரசிடம் கோரிக்கை வைத்தார். அதுபோல அரசு வழங்கிய தியாகிகள் பென்ஷன் தனக்கு வேண்டாம் என்று கூறி ஏற்க மறுத்துவிட்டார். சென்னை வானொலியில் சுமார் பதினைந்து ஆண்டுக் காலம் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் நீலாவதி. அதற்காக அளிக்கப்பட்ட காசோலைகளை வாலாஜாபாத் இந்துமத பாடசாலைக்கு அன்பளிப்பாக அளித்து வந்தார். அதுபோல இதழ்களுக்கு எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு வரும் சன்மானத் தொகைகளையும் சமூக சேவை நிறுவனங்களுக்கு வழங்கினார்.



இலக்கியப் பணிகளும் இலக்கியப் பண்ணையும்
டி.கே. சிதம்பரநாத முதலியார் மூலம் நீலாவதிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. டி.கே.சி., நீலாவதியை மகளாகவே கருதினார். அவர் தூண்டுதலால் கம்ப ராமாயணத்தைப் பயின்ற நீலாவதி, கம்பன் விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டார்.சென்னையில் தான் வாங்கிய புதிய இல்லத்திற்கு 'இலக்கியப் பண்ணை' என்று பெயரிட்டார். வாரந்தோறும் சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் அங்கு இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தினார். ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார், ராஜாஜி, கல்கி. கிருஷ்ணமூர்த்தி, திருப்புகழ் மணி டி.எம். கிருஷ்ணசாமி ஐயர், திரு.வி. கலியாண சுந்தர முதலியார், கி.வா. ஜகந்நாதன், எஸ். சச்சிதானந்தம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, டி.எம். பாஸ்கரத் தொண்டைமான், டாக்டர் மு. வரதராசன், பேராசிரியர் அ. சீனிவாச ராகவன். மு. அருணாசலம் உள்ளிட்ட பலர் அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். 'இலக்கியப் பண்ணை'யின் முதலாம் ஆண்டு விழாவை, 1942ல், திருக்குற்றாலத்தில் திரு வெ.ப. சுப்பிரமணிய முதலியார் தலைமை வகித்து நடத்தினார். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், 'மகாமகோபாத்தியாய' பட்டம் பெற்றதற்காக, 'இலக்கியப் பண்ணை' பாராட்டு விழா நடத்தியது.

தமிழிசை மாநாடுகளுக்குத் தலைமை வகித்து நடத்தியதுடன், தமிழிசைச் சங்கத் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார் நீலாவதி. 'ராமகிருஷ்ண விஜயம்' இதழுக்குத் தொடர்ந்து பல இலக்கியக் கட்டுரைகளை எழுதி வந்தார். 'ராஜ்யலக்ஷ்மி' என்ற மாதர் இதழின் ஆசிரியராகவும் சுமார் நான்காண்டுகள் பொறுப்பு வகித்தார்.

நீலாவதியின் சமூக, இலக்கியப் பணிகளைப் பாராட்டி, கல்கி இதழ், "ஸ்ரீமதி நீலாவதி அவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்து வரும் தொண்டுகள் பல. ஸ்ரீமதி நீலாவதி சிறந்த எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். இலக்கியத் துறையில் சிறந்த பணியாளர், 'சௌபாக்யம்' என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்று அதைத் திறம்பட நடத்தி வருகிறார். ஸ்ரீமதி நீலாவதி அவர்களுக்கு 45 வயது ஆகின்றது. அவருடைய சேவை தமிழ் நாட்டுக்கும் தமிழ் மாதர் குலத்திற்கும் இன்னும் பல காலம் கிடைத்து வர வேண்டுகிறோம்" என்று வாழ்த்தியது.

மறைவு
நீலாவதி ராமசுப்பிரமணியத்தின் மகளான மணிகுமாரி, அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவர் தன் இளவயதில், 1961ல், திடீரெனக் காலமானார். அது நீலாவதிக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தந்தது. அதுமுதல் பொது நிகழ்ச்சி எதிலும் கலந்துகொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். மணிகுமாரியின் ஒரு வயது மகள் கற்பகத்தைத் தாய்போல் இருந்து வளர்த்தார்.

பிப்ரவரி 22, 1982-ல் , தனது 70-ம் வயதில் நீலாவதி ராமசுப்பிரமணியன் காலமானார் .

எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் இயங்கிய நீலாவதி ராமசுப்பிரமணியம், தமிழர்கள் நினைவில் நிறுத்த வேண்டிய ஓர் முன்னோடி.

(தகவல் உதவி: நீலாவதி இராமசுப்பிரமணியம் வாழ்க்கை வரலாறு, தமிழ் இணைய மின்னூலகம்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com