'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு' இதழை 1987-ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி தொடங்கினார். சுந்தரராமசாமியின் மறைவுக்குப் பின் அவ்விதழுக்குப் பொறுப்பேற்ற கண்ணன், அதனை முன்னணி இலக்கிய இதழாக வளர்த்தெடுத்தார்.
இலக்கியம், சுற்றுச்சூழல், வரலாற்றாய்வுகள், இதழியல் ஆய்வுகள், பெண்ணியம், மொழிபெயர்ப்பு எனப் பல செய்திகளை உள்ளடக்கியதாக இவ்விதழ் வெளிவருகிறது. 'காலச்சுவடு' பதிப்பகம் மூலமும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார் கண்ணன்.
ஃபிரான்ஸ் நாட்டுடன், இந்தியாவுக்கு உள்ள நட்பு, கலாசாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில், மொழிபெயர்ப்பு நுால்களை வெளியிட்டதற்காக, கண்ணனுக்குச் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ஏற்கனவே, நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் இணைகிறார் கண்ணன் சுந்தரம்.
வரும் செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு துாதரின் முன்னிலையில் நடக்க இருக்கும் நிகழ்வில் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது. |