தமிழ் விக்கி - தூரன் விருது
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது இது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒருவர் ஆற்றியிருக்கும் ஒட்டுமொத்தப் பங்களிப்புக்காக ஐம்பது வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படும். இவ்விருது இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், நினைவுச் சிற்பமும் அடங்கியது.

2022ம் ஆண்டிற்கான விருதுக்காக மானுடவியல், நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், நரிக்குறவர்களை பற்றியும் திருநங்கைகளைப் பற்றியும் விரிவாகக் கள ஆய்வு செய்து நூல்களை எழுதியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலையில் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது 'நரிக்குறவர் இனவரைவியல்' நூல் மிகவும் முக்கியமானது. இந்நூலுக்காக 2004ம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றிருக்கிறார். திருநங்கையர் பற்றிக் கள ஆய்வு செய்து இவர் எழுதியுள்ள 'திருநங்கையர் சமூக வரைவியல்' என்னும் நூலும் குறிப்பிடத்தகுந்தது. இந்நூல்களைத் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.



© TamilOnline.com