விஷ்ணுவிடம் ஒருமுறை நாரதர், "பரமாத்மனைக் குறித்த தூய ஞானத்தை அடைந்த ரிஷிகளும் முனிவர்களும் உன் அருளைப் பெற முடியவில்லை. உனது அழகு, உனது லீலை, உனது இசை, உனது குறும்புகள், உனது இனிமை, உனது ஆராய்ச்சிக்கு எட்டாத புதுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட, கல்வியறிவு இல்லாத கோகுலத்தின் ஆய்ச்சியர்கள் உன் அருளை வென்றார்கள். அது எப்படி?" என்று கேட்டார். ஆனால் கிருஷ்ணைரையே தமது பிராணனாக, கண்ணின் பார்வையாக, காதுகளின் ஒலியாக, நாவின் சுவையாக, சருமத்தின் தொட்டுணர்வாகக் கோபியர் கருதினர் என்பதை நாரதர் பின்னாளில் அறியவந்தார்.
மாடு கன்றுகளை மேய்க்கும்போதும், கணவர் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும்போதும், உலக வாழ்க்கைக்கான ஆயிரம் கடமைகளையும் செய்யும்போதும், அவர்கள் கிருஷ்ணனில், கிருஷ்ணனுடன், கிருஷ்ணனாலேயே வாழ்ந்தனர். சர்வதா சர்வ காலேஷு ஹரி சிந்தனம். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும் அவர்களின் மனம் ஹரியிடமே லயித்து இருந்தது. அப்படி இருக்க, கடவுள் எப்படிக் கருணை புரியாமல் இருப்பார்?
நாரதர் கோகுலத்துக்குச் சென்று, ஞானம் அடைவதைப் பற்றிக் கூறுவதைக் கேட்கத் தன்னைச் சுற்றிக் கூடுமாறு கோபியரை அழைத்தபோது, அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் விலைமதிப்பற்ற நிமிடங்களை நாங்கள் வீணாக்க விரும்பவில்லை என்றனர். "இரவு, பகல் இரண்டின் நேரத்தையும் கூட்டினால்கூட அது எங்களுக்குக் கிருஷ்ண நாமத்தில் மூழ்கியிருக்கப் போதுமானதல்ல. கடவுள் சத் சித் ஆனந்த சொரூபன் என்கிற வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. அந்த ஆனந்தத்தை நாங்கள் ஒவ்வொரு கணமும் அறிகிறோம், உணர்கிறோம், அனுபவிக்கிறோம்" என்றனர். பக்தியின் மேன்மையை இவ்வாறு அறிந்த பிறகுதான் அவர் 'நாரத பக்தி சூத்திரங்கள்' என்பதை எழுதினார். அந்நூல் சாதகர்களுக்கு வழிகாட்டும் விளக்காக உள்ளது.
நன்றி: 'சனாதன சாரதி', மார்ச் 2022
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |