உமா மகேஸ்வரர் - பூமிநாதர் ஆலயம், கோனேரிராஜபுரம்
தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் பூமிநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

தலப்பெருமை
மூலவர் நாமம்: உமா மகேஸ்வரர்.
தாயார் பெயர்: அங்கவள நாயகி (தேஹ சௌந்தரி).
தலவிருட்சம்: அரசமரம், வில்வம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.
புராணப் பெயர். திருநல்லம், திருவல்லம்.
ஊரின் பெயர் கோனேரிராஜபுரம்.
அப்பர், சம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 7வது தலம். இத்தல இறைவன் நான்கரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கிளையில் பதின்மூன்று தளம் உள்ள வில்வ இலை இக்கோயிலின் தல விருட்சமாக உள்ளது. பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 97வது தலமாகும்.

சிவன் சன்னிதியின் கோஷ்டத்துப் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் எழுந்தருளி உள்ளனர். ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட ஆலயம் இது. வைத்தியநாத சுவாமிக்கு தனிக்கோயில் உள்ளது. இத்தல விநாயகர் அரசமரத்து விநாயகர் என அன்போடு அழைக்கப்படுகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம், அஷ்ட பால துவார விமானம் என அழைக்கப்படுகிறது.



இத்தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் சகல விதமான நோய்களும் குணமாகும். வெண் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்ட, நிலப் பிரச்சனை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை நீங்க, நோய் தீர, வியாபாரப் பிரச்சனை தீர இங்கு திங்கட்கிழமையில் சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து 'வசுதரா' யாகம் செய்தால் கோரிக்கை நிறைவேறும். திரிபுரம் எரித்த திரிபுர சம்ஹார மூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரைத் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொல்லை விலகும். கல்வியில் சிறக்க வேண்டுபவர்கள் இங்குள்ள ஞானக்குழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு. துர்கை மேற்குப் பார்த்து வீற்றிருக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட தனது பயத்தைப் போக்கிக்கொள்ள இந்த துர்க்கையை வழிபட்டுள்ளார்.

ஒரே மூலஸ்தானத்தில் ஆறு விநாயகர்கள் 'விநாயகர் சபை'யாக வீற்றிருக்கின்றனர். நந்தி பகவான் இங்கு வந்து வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் ஒன்றுக்குப் பலமடங்கு பலன் என்பது நம்பிக்கை. அஷ்டதிக்பாலகர்கள் இங்கு வந்து வழிபாடு செய்ததன் நினைவாக, கோயில் விமானத்தின் மேல் வீற்றிருக்கிறார்கள்.

பிரம்மாண்ட நடராஜர்: வரகுண பாண்டியன் என்ற மன்னனுக்காக பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக் குடித்து சுயம்பு மூர்த்தியாக நடராஜர், சிவகாமி அம்மனுடன் காட்சி கொடுத்துள்ளார். மதுரை, உத்தரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய மூன்று தளங்களிலும் நடராஜருக்குத் திருவீதி உலா கிடையாது. இத்தல நடராஜருக்கு மனிதர் போலவே ரோமம், ரேகை, நகம் ஆகிய அனைத்தும் இருப்பது சிறப்பம்சமாகும். நடராஜர் ஆலயம் என்றால்தான் இங்குள்ள மக்களுக்குத் தெரியும். இங்குள்ள சனி பகவான் மேற்குப் பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன்பு இங்கு வந்து வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி பகவான், இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக இருக்கிறார். இவருக்கு வெள்ளை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரை வழிபடுவது சிறப்பு.



புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டபோது, அவன், காவிரி தென்கரையில் உள்ள இத்தலத்திற்கு வந்து வழிபட, அவன் நோய் தீர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன், கோயிலுக்குக் காணிக்கையாகச் சிவ சன்னதி விமானத்தைப் பொன் தகட்டால் வேய்ந்தான். வைகாசி விசாகத் திருவிழா நடக்க ஏற்பாடு செய்தான்.

அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி அனல் ஏந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித்தெழ வல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே
- சம்பந்தர் தேவாரம்


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com