கார்த்திக் பாலசுப்ரமணியன்
சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் கார்த்திக் பாலசுப்ரமணியன், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தனது 'நட்சத்திரவாசிகள்' என்னும் முதல் நாவலுக்காக, 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி - யுவபுரஸ்கார் விருது பெற்றவர். 'டொரினா' இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 'ஒளிரும் பச்சைக் கண்கள்' என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுதி வரும் கார்த்திக், சிறந்த விமர்சர்கரும் கூட. கவிதையிலும் ஆர்வம் உண்டு. தனது எழுத்துலகப் பயணம் பற்றிப் பேசுகிறார் கார்த்திக். கேட்போமா?

★★★★★


கே: உங்கள் இளமைப் பருவத்திலிருந்து தொடங்குவோமா?
ப: நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில். பள்ளிப் படிப்பை பி.ஏ.சி. ராமசாமி ராஜா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். கோவை அமிர்தா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் படித்தேன்.



கே: எழுத வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்படி வந்தது?
ப: அப்பா ஒரு தேர்ந்த வாசகர். வீட்டில் எப்போதும் புத்தகங்கள், வார, மாத இதழ்கள் என்று வாசிப்புச் சூழல் நிறைந்திருக்கும். அப்பாவிடமிருந்து வாசிப்புப் பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது. கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்த பின்பு அப்போது பிரபலமாக இருந்த இணைய எழுத்துக்களின் வழி நவீன இலக்கிய அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். பரவலான வாசிப்பும் தனிப்பட்ட அழுத்தம் மிகுந்த காலகட்டமும் என்னை எழுத்தை நோக்கிச் செலுத்தின.

ஏன் எழுதுகிறேன்?
நேரில் பார்த்தோ கேட்டோ அனுபவித்தோ கடக்க நேரிடும் பல்வேறு சம்பவங்களில் ஒரு சிலவற்றை நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. நாம் அறியாமலே நம்மை அவை தொந்தரவுக்கு உள்ளாக்கும். சில சம்பவங்கள் நடந்து வருடங்கள்கூடக் கடந்திருக்கும். திடீரென்று ஏதேனும் ஒரு புள்ளியில் உள்ளிருந்து வெடித்துக் கிளம்பி நம்மை அலைக்கழிக்கும். அவற்றையெல்லாம் எழுதிக் கடப்பதன் வழியாகவே என்னை நான் மீட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில், ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் போது நாம் மறந்துவிட்டோம் என்று நினைத்த ஒருவரை அல்லது ஒரு நிகழ்வை ஆழ்மனம் தூர்வாரிக் கொண்டுவந்து நிறுத்தும். நாம் ஒன்றை மனத்தில் இருத்தி எழுத ஆரம்பித்தால் அது வேறொன்றுக்கு இழுத்துச் செல்லும். ஒரு சில கதைகளின் சில வரிகளைத் திரும்ப வாசிக்குபோது, இவற்றை நாம்தான் எழுதினோமா என்று ஆச்சரியப்படுத்தும். அந்த ஆச்சரியமும், நாமே நினைத்திடாத ஒன்றை எழுத்தின் வழியாகக் கண்டடையும்போது கிடைக்கும் திருப்தியும், எழுதிய பின் கிடைக்கும் ஆசுவாசமுமே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கின்றன.

கார்த்திக் பாலசுப்ரமணியன்


கே: முதன்முதலில் வெளியான படைப்பு பற்றியும் அதற்கான வரவேற்பு, விமர்சனம் பற்றியும் சொல்லலாமா?
ப: உயிர்மை இலக்கிய இதழிலிருந்து 'உயிரோசை' என்ற இணைய இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதில்தான் என்னுடைய முதல் கதை 'பொதுப்புத்தி' வெளியானது. அலுவலகத்துக்கு வெளியே நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கதையாக்க முயன்றிருந்தேன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'டொரினா'வில் அந்தக் கதை இடம்பெற்றுள்ளது. எழுதிய பொழுதில் அக்கதை எந்த வரவேற்பையோ விமர்சனத்தையோ பெறவில்லை. அப்படிப் பெரிய விமர்சனத்தைக் கோரும்படியான கதையும் அது இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நூல்கள்
டொரினா (சிறுகதைத் தொகுப்பு, 2017), யாவரும் பதிப்பகம்
நட்சத்திரவாசிகள் (நாவல், 2019) காலச்சுவடு வெளியீடு
ஒளிரும் பச்சைக் கண்கள் (சிறுகதைத் தொகுப்பு, 2021), காலச்சுவடு வெளியீடு

விருதுகள்:
'டொரினா' சிறுகதைத் தொகுப்பிற்கு க.சீ. சிவக்குமார் நினைவு சிறுகதை விருது
நட்சத்திரவாசிகள் நாவலுக்கு வாசகசாலை சிறந்த நாவல் விருது (2020)
யாவரும் பதிப்பகத்தின் க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி விருது (2020)
நட்சத்திர வாசிகள் நாவலுக்காக கேந்திரிய சாகித்ய அகாதெமி வழங்கும் யுவபுரஸ்கார் விருது (2021)


கே: தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகளை அதிகம் எழுதுகிறீர்கள். அதற்குத் தனியான காரணம் ஏதும் உள்ளதா?
ப: நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறேன். அதுதான் காரணமாக இருக்க முடியும். ஒரு வேளை ஒரு அனல்மின் நிலையத்திலோ, ஒரு கார் தொழிற்சாலையிலோ வேலை பார்த்திருந்தால் அவற்றைப் பின்புலமாக வைத்து அங்கே என்னைப் பாதித்த நிகழ்வுகளைக் கதைகளாக்கியிருப்பேன். அவ்வளவுதான். இடம் சூழல் மாறலாம். மனிதர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்கிறார்கள். அவர்களைத்தான் நான் எழுதுகிறேன்.



கே: உண்மைச் சம்பவங்கள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் பிரதிபலிப்புதான் உங்கள் 'டொரினா' சிறுகதைத் தொகுப்பு மற்றும் 'நட்சத்திரவாசிகள்' நாவல் என்று சொல்லலாமா?
ப: ஆமாம், மேலே சொன்ன பதில்கள் இந்தக் கேள்விக்கும் பொருந்திப் போகின்றனதானே?

கே: வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற பாகுபாடு பற்றிய உங்கள் கருத்து என்ன?
ப: இந்தப் பிரிவுகள் புதுமைப்பித்தன், கல்கி காலத்திலிருந்தே இருந்துகொண்டிருப்பவைதான். இன்று இவற்றில் ஒன்றின் தாக்கம் மற்றொன்றில் அதிகமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. சிலர் இரண்டுக்குமான கோடு அழிந்து வருகிறது என்று கூறுவதையும் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் அதை நம்பவில்லை.



கே: உங்கள் படைப்புக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்லுவீர்கள்.
ப: அப்படி ஒன்றும் நினைவில் இல்லை. விமர்சனங்கள் நினைவில் இருக்கின்றன. பாராட்டுக்களை மறந்துவிடுவேன்.

கே: மிகவும் பிடித்த முன்னோடி எழுத்தாளர்கள் யார் யார்?
ப: முன்னோடிகளில் அசோகமித்திரன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், சா. கந்தசாமி, யுவன் சந்திரசேகர், வண்ணநிலவன் போன்றோரைச் சொல்லலாம். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கே: உங்களை மிகவும் பாதித்த எழுத்தாளர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள், ஏன்?
ப: அசோகமித்திரன். காரணம், அசோகமித்திரன் அழுத்தமான கதைகளைச் சொல்வதற்கு எளிமையான மொழியே போதுமானது என்பதையும் அன்றாட வாழ்விலிருந்து பிரத்தியேகமான பார்வையின் வழியே மிகச் சிறப்பான கதைகளைப் படைக்க இயலும் என்பதையும் நிரூபித்தவர். உலக இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் வைப்பதற்குரிய தகுதிகொண்ட எழுத்தாளர் அசோகமித்திரன்.



கே: உங்கள் எழுத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார், யார்?
ப: அன்றாடத்தின் பிடியிலிருந்து என்னை அவ்வப்போது விடுவித்துக்கொண்டு எழுத்தைச் சாக்காய் வைத்துச் செய்யும் கிறுக்குத்தனங்களைப் பொறுத்துக்கொள்ளும் குடும்பத்தினரும், தொடர்ந்து எழுதுவதை வாசித்து விமர்சிக்கும் நண்பர்களும், சக மற்றும் மூத்த எழுத்தாளர்களும்.

கே: உங்களுடைய பிற ஆர்வங்கள் குறித்துச் சொல்லுங்கள்.
ப: குடும்பம், வேலை, எழுத்து இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இதற்கெல்லாம் அப்பால் நேரம் வாய்த்தால் அவசரமில்லாத நிதானமான பயணங்கள் போகப் பிடிக்கும்.



கே: தற்போது எழுதி வரும் படைப்புகள் குறித்து.
ப: நாவல் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஓர் இழைக்காக நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று மாற்றி ஒன்றாக அதில்தான் இருக்கிறேன். இதை முடிக்கும்வரை அடுத்த படைப்பு குறித்துப் பெரிதாக யோசிக்கவில்லை.

கே: யுவபுரஸ்கார் பெற்ற தருணம் குறித்து.
ப: மிகவும் மகிழ்ச்சியான தருணம். இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துவிடுவேன் என்று திடமாக நம்பினேன். விருதே கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

கே: தங்கள் குடும்பம் குறித்து.
ப: அப்பாவும் அம்மாவும் சொந்த ஊரில் இருக்கிறார்கள். நான், என் மனைவி திவ்யா மற்றும் என் எட்டு வயது மகன் வியனுடன் சென்னையில் வசிக்கிறேன். மனைவி சொந்தமாகத் தொழில்புரிகிறார். நான் ஓர் அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மகன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான்.



வலைத்தளம் | முகநூல் பக்கம்:


உரையாடல்: அரவிந்த்

© TamilOnline.com