ஞானம்
புனா நகரத்தை அடுத்துள்ள கிராமத்தில் அகன்ற தோப்பு. அதற்குள் ஆயிரக்கணக்கான கனி மரங்கள், மரங்களின் அடர்த்தி முடிவுறும் இடத்தில் மலர் வனங்கள் தொடங்கின. பல ஏக்கர் விஸ்தீரணத்துக்கு ஒரே பூக்காடு. மலர்த் தோட்டத்தின் இடையில் சதுரமான இரட்டை மாடிக் கட்டடம். அதன் முகப்பில் 'ஓம்' என்ற புனித அட்சரம் விளங்கிற்று.

கட்டடத்தை அடுத்துப் பல தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை தூய்மையும் எளிமையும் கொண்டு விளங்கின. சூழ்நிலையில் ஒரு தெய்வீக அமைதி. அங்கு வந்த அன்பர்கள் ஒருவரையொருவர் பார்த்தாலும் பேசினாலும் அவர்களுடைய நடத்தையில் வினயம் துலங்கிற்று.

மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. அன்று சுவரமிஜி பொதுமக்களுக்குத் தரிசனம் தரும் நாள். கால்நடையாகவும் டாக்சியிலும் பக்தர்கள் வந்து குழுமிய வண்ணம் இருந்தார்கள். தொண்டர்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்துச் சுவாமிஜியிடம் அனுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் இறைவனின் நாமம் நிரம்பியிருந்தது.

பம்பாயிலிருந்து வந்திருந்த மனோஜ்குமார், அவரது மனைவி மீரா, அவர்களுடைய குழந்தைகள் அனைவரும் வரிசையில் நின்றார்கள். பணியாள் பெரிய பழக்கூடையையும் பூத்தட்டையும் ஆசிரமத்துக்குள் கொண்டு சென்றான். அதிகமாகப் போனால் பக்தர்கள் அரை நிமிஷமே சுவாமிஜியிடம் தங்க முடிந்தது. அதற்குப் பிறகு பிரசாதம் பெற்றுக் கொண்டு அவர்கள் அமைதியுடன் திரும்பினார்கள்.

கருவறையினுள் துர்க்கையின் சலவைக்கல் பதுமை. அன்னை செந்நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பதுமைக்கு அருகில் சுவாமிகள் அமர்ந்திருந்தார். எவ்வளவு வயது என்று அனுமானிக்க இயலாத தோற்றம். ஆனால், உடலில் ஒரு குன்றாத இளமை குடிகொண்டிருந்தது. கண்களில் அருள் நேயம். கருவறைக்குள் வரும் பக்தர்களுக்கு மலர்ப் பிரசாதத்தை எடுத்துக் கொடுத்த வண்ணமே இருந்தார். அவருடைய வாய் ஒரே மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஒலித்தது, 'ஓம் சக்தி'.

மனோஜ்குமார் அடிகளை வணங்கிப் பிரசாதம் பெற்றுக் கொண்டார். அவருக்குப் பின்னால் நின்ற மீராவை ஏறிட்டுப் பார்த்தார் சுவாமிஜி. அவரது கண்ணிமைகள் துடித்தன. உடல் பதறிற்று. 'மீரா.. மீரா மாயி..' அவருடைய நாவு குழறிற்று. 'என்னை ஆசீர்வதி தாயே' சுவாமிஜி எழுந்திருந்து நெடுஞ்சாண்கிடையாக மீராவின் கால்களில் விழுந்தார். மீரா சிறிதுகூடப் பதறவில்லை. நேராகப் பதுமையின் அருகில் சென்று அன்னையின் காலடியில் கிடந்த இரு பெரிய மலர்களை எடுத்துச் சுவாமிஜியின் கையில் கொடுத்தாள், பிறகு ஒன்றுமே நிகழாததைப் போல் தன் கணவர், குழந்தைகளுடன் கோயிலை விட்டு வெளியே வந்தாள்,

திரை இழுக்கப்பட்டது. சுவாமிஜி குப்புறப் படுத்த நிலையிலேயே கிடந்தார். பக்த கோடிகள் பதறியவாறு வெளியே நின்று கொண்டிருந்தனர். மனோஜ்குமாரின் ஸெடான் பம்பாய் செல்லும் திசையை நோக்கித் திரும்பிற்று, விரைவாகச் செல்லத் தொடங்கிற்று.

"சுவாமிஜியை நான் கடைசி முறையாகச் சந்தித்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன்" - மீரா பேசத் தொடங்கினாள். "ஆனால் அவருக்கு அப்போது சத்ய பால் தடானி என்று பெயர். நகரத்தின் மிகப்பெரிய வார்ப்படத் தொழிற்சாலையின் அதிபராக இருந்தார். சௌத் மான்ஷனில் பெரிய மாளிகை ஒன்று அவருடைய இருப்பிடமாக இருந்தது." மனோஜ்ருமார் பதில் ஏதும் கூறாமல் ஜாக்கிரதையாகக் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். .

"நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்த ஆண்டுகள் அவை. சிந்து, மேற்குப் பாகிஸ்தானம் ஆகிய பகுதிகளில் ஒரு ஹிந்துவைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அப்போது சிந்து அகதிகளுக்காக ஜம்ஷேட்ஜி புனாவில் நாரி நிகேதனைத் திறந்து வைத்தார். பிரிவினைக்கு முன்னரே பம்பாய், புனா, அகமதாபாத் போன்ற நகரங்களில் பல சிந்திகள் வந்து குடியேறியிருந்தனர். அவர்களில் பலரும் உயர்ந்த செல்வ நிலையில் இருந்தனர்.

நாரி நிகேதனுக்குத் தலைவராக மாதுரி தேவி நியமிக்கப்பட்டார். அவர் தெய்வ பக்தியும் தொண்டு உணர்ச்சியும் மிக்கவர். பாகிஸ்தானில் சீரழிந்து போன பெண்களுக்கெல்லாம் அவர் மிகுந்த சிரமத்துடன் புனர்வாழ்வளிக்கத் துணிவு கொண்டார். நாரி நிகேதன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது.

அங்கு பயிற்சி பெற்ற பெண்கள் டெலிபோன் இயக்குனர்களாகவும், கடைப் பணிப் பெண்களாகவும், கௌரவமுள்ள குடும்பங்களில் உதவியாளர்களாகவும் அமர்ந்தார்கள். இந்த வகையில்தான் நான் சத்யபால் தடானியின் வீட்டில் வரவேற்புச் செயலாளராகப் பணி ஏற்றுக் கொண்டேன். தடானிக்கு அப்போது வயது இருபத்தைந்துதான் ஆகியிருந்தது. தகப்பனார் இல்லை. உடன் பிறந்தவர்களும் கிடையாது. பல லட்சங்களுக்கு அதிபதியாக இருந்தார். பல உயர் குடும்பங்களிலிருந்து அவருக்குப் பெண் கொடுக்க முன்வந்தார்கள், ஆனால் அவர் திருமணத்தைத் தட்டிக் கழித்தார். உயர் வட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் அவரது தோழமையை நாடி வருவார்கள். இவரும் அவர்களுடன் கூடியிருப்பார் என்றாலும் இறுதியில் மணம் மட்டும் நடைபெறாது. அந்தப் பெண்களுக்கு உயர் குடும்பங்களில் தாமே விவாகம் செய்து வைப்பார். நான் அவருடைய இல்லத்தில் மூன்றாண்டுகள் பணி புரிந்தேன், கணிசமான ஊதியமும் எனக்குக் கிடைத்து வந்தது.

நாரிகேதன் பெரிதும் வளர்த்து வந்தது. அதன் தொழில் முறைகள் பலவாயின. அதன் தலைவி மாதுரி தேவி நோய்வாய்ப்பட்டார். அவருக்குத் தக்கதொரு துணையாள் தேவையாயிருந்தது. அதனால் அவர்கள் என்னை மீண்டும் நாரி நிகேதனுக்கே அழைத்தார்கள். நான் சத்யபால் தடானியிடம் விடைபெற்றுக் கொள்ளச் சென்றேன்.

அவரிடம் விடைபெறச் சென்ற அன்றுதான் அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். அதனுடைய பொருள் எனக்குப் புரிந்தது. என்னுடைய வனப்பும் எழிலும் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும். அந்தச் சந்திப்புக்குப் பிறகு விரும்பினால் தொடர்ந்து நான் அங்கே தங்கியிருக்கலாம். ஆனால் நான் நாரி நிகேதனுக்குத் திரும்பினேன்."

பெரிய பெரிய கள்ளிப்பெட்டிகளைச் சுமந்து வந்த லாரி ஒன்று மனோஜ்குமார் ஓட்டிய காரை மயிரிழையில் மோத வந்தது. அவர் வெகு லாகவமாக ஸ்டியரிங்கை ஒடித்துக் காரை ஒதுக்குப்புறமாக ஓட்டி அதில் உள்ளவர்களை மரணத்தின் கயிற்றிலிருந்து தப்ப வைத்தார். அந்த அதிர்ச்சியின் விளைவினால் மேலே தொடர்ந்து செலுத்த முடியாமல் காரைச் சாலை ஓரத்தில் நிறுத்தினார். நான்கு பேரும் காரை விட்டுக கீழே இறங்கினர்கள்,

எதிர்ப்புறத்திலிருந்து லாரிகள் வந்தவண்ணம் இருந்தன. மீரா தொடர்ந்து பேசினாள்.

"பாகிஸ்தானத்திலிருந்து வந்த அகதிகளுக்காக நிறுவப்பட்ட நாரி நிகேதனத்தில் பல தரப்பட்ட பெண்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

நாரி நிகேதனத்தில் நான் புரிந்த தொண்டின் மூலம் என்னுடைய சமுதாய மதிப்பு உயர்ந்தது. நான் மாதுரி தேவியின் வலது கரமாக விளங்கினேன், நிகேதனின் பிரதிநிதியாகப் பல இடங்களுக்குச் சென்று வரவேண்டியிருந்தது. உயர் மட்டத்தில் பல நண்பர்களையும் அறிமுகத்தையும் பெற்றேன். அப்போதுதான் சத்யபால் மறுபடியும் எதிர்ப்பட்டார்.

அந்த வேளையில் அவருடைய செல்வமும், அழகும் புகழும் வெகுவாக வளர்த்திருந்தன. உயர்தட்டு வாசிகளிடையே அவர் தேவேந்திரனாக விளங்கினார். சத்யபால் நிகழ்த்தும் மாதாந்திர 'மூன்லைட்' விருந்துகள் நகரத்திலே புகழ் பெற்றவை. அவருடைய மாளிகையின் முன் இருக்கும் விசாலமான தோட்டத்தில் ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் நகரத்தின் பெருந்தலைகள் கூடும். இசையும் மதுவும் வழியும். புனாவின் சமுதாய சரித்திரத்தில் தடானியின் மூன்லைட் விருந்துகள் மிகமிகப் பிரசித்தி பெற்றவை.

ஒரு தடவை இந்த விருந்தொன்றுக்கு நானும் அழைக்கப்பட்டேன். சாதாரணமாக இத்தகைய நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதில்லை. தட்டிக் கழித்து விடுவேன், ஆனால் ஒரு நிறுவனத்தின் துணைத்தலைவி என்ற முறையில் இந்த அழைப்பை மறுதலிக்க முடியவில்லை. அதில் கலந்துகொண்ட பிறகுதான் செல்வம் எத்தகைய புலனின்பங்களைத் தரமுடியும் என்பது பற்றி ஒருவாறு அறிந்துகொள்ள முடிந்தது.

உயர்ரக மது ஒரு சுற்று வரும். தொடர்ந்து உண்பதற்கு அற்புதமான சுவையுடைய பண்டங்கள். அடுத்து இசைக்கேற்ப நாட்டியமும் நிகழும். ஆண்களும் பெண்களும் ஒருவரை யொருவர் கட்டித் தழுவி முயக்க நிலையில் நடனமாடுவார்கள். விளக்குகள் அணைக்கப்படும். மெல்லிசை நிற்கும். பிறகு சிறிது சிறிதாக ஒலியின் பரிமாணம் பெருகும். ஒளியும் அதிகரிக்கும். இப்படியே பல ரவுண்டுகள்.

மேல்நாட்டு இசையின் செவித் துளைப்பைப் பொறுக்க இயலாமல் மகிழ மரத்தின் அடியில் உட்கார்ந்தேன். பெரிய தாமரை இலையின் வடிவத்தில் நுரை ரப்பர் ஆசனம் மலர்களின் மணம் மனத்தை ரமிக்கச் செய்தது. விளக்குகள் ஒளிகுன்றி இருண்ட நேரம். இரண்டு பெண்கள் சற்று மனம்விட்டுப் பேசிக் கொண்டார்கள். "அவர் என்ன மாயம் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. அவர் தரும் போதையைச் சொல்லவே இயலாது போ!... " இது யாரைப்பற்றி என்று என்னால் அனுமானிக்க முடிந்தது. மதுவும் இசையும் எங்கெங்கும் நிறைந்தன. உறக்க மயக்கத்தில் தள்ளாடும் நிலையில் நான் ஒரு தனியறைக்குப் போய்ச் சேர்த்தேன். கண் விழித்தபோது என்னுடன் சத்யபால் இருந்தார்.

வெளியில் தண்ணிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது. நீல விதானத்தில் மலர்ச் சிதறல். குளிர்ந்த போதை தரும் சூழ்நிலை. ஆனால் சத்யபால் என்னவோ தம் சுய நினைவில்தான் இருந்தார். அவர் அப்போது என்னுடன் பேச முயன்றது தத்துவ விசாரம். 'மனிதனுக்குப் புலனின்பங்களைத் தரும் பொருட்டே இறைவன் எல்லாப் பொருள்களையும் படைத்திருக்கிறான்' என்று அவர் விவாதிக்கத் தொடங்கினார்.

'விண்ணையும், மதியையும், தாரகைகளையும், கடலையும் மனிதன் காட்சி இன்பம் பெறும் பொருட்டுப் படைத்தான். கூடவே அதற்கும் மேலான ஒரு தத்துவத்தை இவைகளின் மூலம் அடைய மனிதனுக்கு உணர்வையும் அருளினான்' என்று நான் விடையிறுத்தேன்.

பேச்சு வளரத் தொடங்கிற்று. மூன்று ஆண்டுகள் நான் அவரிடம் பணி புரிந்தும் அவர் என்னைக் கவனிக்காதது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். என்னைத் தம் பார்வையினால் மெழுகுப் பதத்துக்கு உருக்கினார்.

'பெண்ணை இறைவன் படைத்ததே பேரின்பத்தின் ஏணிப்படியாகத்தான்' என்று வாம தேவரின் மேற்கோளுடன் மறுபடியும் அவர் பேச்சைத் தொடங்கினார். எனக்குப் பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம் ஒன்று நினைவுக்கு வந்தது. 'இன்பங்களுக்கு எல்லையே இல்ல, அது வற்றாத பெருங்கடல். அதில் ஆழ்ந்து யாரும் அனுபவ எல்லையைத் தொட முடியாது. அதற்குள் வாழ்க்கையே முடிந்து போகும். ஆகவேதான் இறைவன் இன்பத்தைச் சோர்வு தரும் முடிவோடு கலந்து வைத்தான்' என்று கூறிவிட்டு, 'மனிதனுக்கு இன்பம் தருவதுதான் பெண்ணின் பிறப்புக்கே நோக்கம் என்றால் அவளுடைய உருவத்தையே இறைவன் அதற்கேற்ப அமைத்திருப்பான்' என்றேன்.

தடானியின் பார்வை நிலைத்தது. 'அந்த சுலோகத்தை மறுபடியும் சொல்லு' என்று பணித்தார். அவருடைய ஆணையின் வேகம் என்னைத் திணற வைத்தது. அதைத் திரும்பக் கூறினேன். கூடவே, 'கௌதமர் தேவேந்திரனுக்கு அளித்த சாபம் நினைவிருக்கிறதா?' என்றும் வினவினேன். அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் தனியே விட்டு விலகிவிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்கெல்லாம் நான் நாரி நிகேதனுக்குத் திரும்பி வந்தேன், மறுநாள் காலையில் உள்ளூர்ப் பத்திரிகையில் வெளிவந்த முக்கியமான செய்தி, 'சத்யபால் தடானி துறவறம் மேற்கொண்டு விட்டார்' என்பதுதான். இதைக் கேட்டு ஊரே அதிசயித்தது. ஆனால், எனக்கு வியப்பேற்படவில்லை. ஒவ்வொரு துறையிலும் அவரால் மனத்தைத் தீவிரத்துடன் ஈடுபடுத்த முடியும் என்பதை நான் அறிவேன். துளசி, பில்வ மங்களன் ஆகியோரை நாம் அறியோமா?"

காரின் கதவைத் திறந்தார் மனோஜ்குமார். குழந்தைகளும் மீராவும் மறுபடியும் அதனுள் ஏறிக்கொண்டார்கள். அந்த வளைந்த பாதையின் வழியே கார் மீண்டும் செல்லத் தொடங்கிற்று.

தி.சா. ராஜு

© TamilOnline.com