கலிஃபோர்னியா மாநிலத்தின் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டினை தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்க் குடும்பங்கள் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு இவ்விழா இணையம் வழியே அல்லாமல் மே 21ஆம் நாளன்று யாவரும் இணைந்து, மன்றத்தின் வெள்ளி விழாவையும் சேர்த்துக் கொண்டாடினர்.
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் பாடல்கள், நடனம், நாடகம் ஆகியவை இடம்பெற்றன. தமிழ் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், கலை ஆர்வலர்கள் இவற்றில் பங்கேற்றனர். தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளும், தமிழ்த் திரையிசை சார்ந்த நிகழ்ச்சிகளும் இதில் அரங்கேறின. நிகழ்ச்சிகளை வடிவமைப்பது, மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது என யாவும் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் பிறமொழியைத் தாய்மொழியாக கொண்டவர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்வதைக் காணலாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே தமிழர் பண்பாடு என்பதை வலியுறுத்துவதாக இது அமைகிறது.
ஒவ்வொரு குழந்தையிடமும் அரிதானதொரு திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரும் விதமாகத் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் அமைந்திருந்தது.
சந்தியா நவீன், சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா |